செப்பனியா 1:6-16

செப்பனியா 1:6-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன். கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார். மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள். அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன். அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.

செப்பனியா 1:6-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும், யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும், அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன். ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள். ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது. யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார். அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். யெகோவாவினுடைய பலியின் நாளில், நான் பிரபுக்களையும், இளவரசர்களையும், பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன். அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி, அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள். யெகோவா அறிவிக்கிறதாவது: அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும். அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும். எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே; அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள். வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள். அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன். யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி, ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் திராட்சை மதுவின் மண்டியைப்போல் இருக்கிறார்கள். அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும், வீடுகள் உடைத்து அழிக்கப்படும். அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள், அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள், திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள். அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள். யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது; அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது. கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும். இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள். அந்த நாள் கடுங்கோபத்தின் நாள், துன்பமும் வேதனையும் நிறைந்த நாள், தொல்லையும் அழிவுமான நாள், அது இருளும் அந்தகாரமுமான நாள். மப்பும் மந்தாரமுமான நாள். அரணான நகரங்களுக்கு எதிராகவும், மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும் எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.

செப்பனியா 1:6-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன். யெகோவாகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். யெகோவாவுடைய பலியின் நாளிலே நான் அதிபதிகளையும் இளவரசர்களையும் வேறுதேசத்து ஆடைகளை அணிந்த அனைவரையும் தண்டிப்பேன். வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற அனைவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா அழிவின் இரைச்சலும் உண்டாகுமென்று யெகோவா சொல்லுகிறார். மக்தேஷின் குடிமக்களே அலறுங்கள்; வியாபாரிகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்; காசுக்காரர்கள் அனைவரும் வெட்டுண்டுபோனார்கள். அக்காலத்திலே நான் எருசலேமைப் பட்டணத்தை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனிதர்களைத் தண்டிப்பேன். அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது மிகவும் நெருங்கி வேகமாக வருகிறது; யெகோவாவுடைய நாள் என்கிற சத்தத்திற்குப் பராக்கிரமசாலி முதலாக அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் நெருக்கமுமான நாள்; அது அழிவும் வெறுமையுமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். அது பாதுகாப்பான நகரங்களுக்கும், உயரமான கோட்டைமதில்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.

செப்பனியா 1:6-16 பரிசுத்த பைபிள் (TAERV)

சில ஜனங்கள் கர்த்தரிடமிருந்து விலகினார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டனர். அந்த ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதை நிறுத்தினார்கள். எனவே, நான் அந்த இடத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவேன்” என்றார் எனது கர்த்தராகிய ஆண்டவர் முன்னால் அமைதியாயிரு. ஏனென்றால், கர்த்தருடைய நீயாயத்தீர்ப்பின் நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. கர்த்தர் பலியைத் தயாரித்திருக்கிறார். அவர் தனது அழைக்கப்பட்ட விருந்தினர்களை ஆயத்தப்படும்படிச் சொல்லியிருக்கிறார். கர்த்தர், “கர்த்தருடைய பலிநாளில், நான் ராஜாவின் குமாரர்களையும் மற்ற தலைவர்களையும் தண்டிப்பேன். நான் வேறு நாடுகளிலிருந்து வந்த துணிகளை அணிந்த ஜனங்களைத் தண்டிப்பேன். அந்த நேரத்தில், நான் வாசற்படியைத் தாண்டிய ஜனங்களையும் தண்டிப்பேன். நான் தம் அதிகாரியின் வீடுகளைப் பொய்களாலும், வன்முறையாலும் நிரப்புகிற ஜனங்களைத் தண்டிப்பேன்” என்றார். கர்த்தரும், “அந்த வேளையில் எருசலேமில் மீன்வாசல் அருகே உள்ள ஜனங்கள் என்னிடம் உதவிக்கு அழைப்பார்கள். பட்டணத்தின் மற்றப் பகுதிகளில் உள்ள ஜனங்கள் அழுவார்கள். நகரத்தைச் சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பொருட்கள் அழிக்கப்படுகிற சத்தங்களை ஜனங்கள் கேட்பார்கள். பட்டணத்தின் தாழ்வான பகுதிகளில் வாழும் ஜனங்கள் அழுவார்கள். ஏனென்றால் எல்லா வியாபாரிகளும், பணக்காரர்களும் அழிக்கப்படுவார்கள். “அந்த வேளையில், நான் ஒரு விளக்கை எடுத்து எருசலேம் முழுவதும் தேடுவேன். நான் தம் வழியில் செல்வதில் திருப்தி காணும் ஜனங்களைக் கண்டு கொள்வேன். அந்த ஜனங்கள், ‘கர்த்தர் எதுவும் செய்வதிலை. அவர் உதவுவதில்லை! அவர் காயப்படுத்துவதில்லை!’ நான் அவர்களைக் கண்டு பிடித்து தண்டிப்பேன் என்று கூறுகின்றார். பிறகு மற்ற ஜனங்கள் அவர்களின் செல்வத்தை எடுத்துக்கொண்டு வீடுகளை அழிப்பார்கள். அந்த நேரத்தில், வீடுகட்டிய ஜனங்கள் அதில் வாழமாட்டார்கள். திராட்சை கொடிகளை நட்டவர்கள் அதன் ரசத்தைக் குடிக்கமாட்டார்கள். மற்ற ஜனங்கள் அவற்றைப் பெறுவார்கள்.” கர்த்தருடைய நியாயதீர்ப்பின் நாள் விரைவில் வரும். அந்த நாள் அருகாமையில் உள்ளது. விரைவில் வரும். கர்த்தருடைய நியாத்தீர்ப்பின் நாளில் ஜனங்கள் சோகக் குரல்களைப் கேட்பார்கள். வலிமையான வீரர்கள் கூட அழுவார்கள். தேவன் அந்நேரத்தில் தன் கோபத்தைக் காட்டுவார். அது பயங்கரமான துன்பங்களுக்குரிய நேரமாக இருக்கும். இது அழிவுக்கான நேரம்தான். இது இருண்ட கருத்த மேகமும், புயலுமுள்ள நாளாக இருக்கும். இது போருக்குரிய காலத்தைப் போன்றிருக்கும். ஜனங்கள் எக்காளம் மற்றும் பூரிகை சத்தங்களை கோபுரங்கள் மற்றும் பாதுகாப்புக்குரிய நகரங்களிலிருந்தும் கேட்பார்கள்.