நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:1-25

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 16:1-25 TAERV

லேவியர்கள், உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்காகத் தாவீது கட்டியிருந்த இடத்தில் வைத்தனர். பிறகு தேவனுக்கு அவர்கள் சர்வாங்க தகன பலியையும், சமாதான பலியையும் கொடுத்தனர். தாவீது சர்வாங்க தகனபலியையும், சமாதான பலியையும் கொடுத்த பிறகு, கர்த்தருடைய பேரால் ஜனங்களை ஆசீர்வதித்தான். பிறகு அவன், ஒரு துண்டு அப்பத்தையும், இறைச்சி துண்டையும் உலர்ந்த திராட்சைகளையும், எல்லா இஸ்ரவேலிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் கொடுத்தான். உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு சேவை செய்வதற்காக தாவீது சில லேவியர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு துதிப்பாடுவதும், அவருக்கு நன்றி சொல்வதும் வேலையாய் இருந்தது. ஆசாப், முதல் குழுவின் தலைவன். இவர்கள் கைத்தாளங்களை இசைத்தனர். சகரியா, இரண்டாவது குழுவின் தலைவன். மற்ற லேவியர்கள்: ஏயேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா. ஓபேத் ஏதோம், ஏயெல் ஆகியோர். இவர்கள் தம்புரு, சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை இசைத்தனர். பெனாயாவும் யாகாசியேலும் ஆசாரியர்கள். இவர்கள் எப்போதும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். தாவீது கர்த்தரைத் துதித்து பாடுமாறு ஆசாப்பிடமும் அவனது சகோதரனிடமும் இவ்வேலையைக் கொடுத்தான். கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள், ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள். கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள், அவரது அதிசயங்களையும் கூறுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள், கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்! கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள். கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள், அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட. இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள். யாக்கோபின் சந்ததியினர், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தர் நமது தேவன், அவரது வல்லமை எங்கும் உள்ளது. அவரது உடன்படிக்கையை எப்போதும் நினைவு கொள்ளுங்கள், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கும் அவர் கட்டளையிட்டுள்ளார். கர்த்தர் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை நினைவுகொள்ளுங்கள், அவர் ஈசாக்குக்கு செய்த வாக்குறுதியையும் கூட. கர்த்தர் யாக்கோபுக்காக சட்டத்தைச் செய்தார், இது இஸ்ரவேலோடு செய்த உடன்படிக்கை, இது என்றென்றும் தொடரும். கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன். வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.” அங்கே சில ஜனங்களே இருந்தனர், சில அந்நியர்களும் இருந்தனர். அவர்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள். அவர்கள் ஒரு அரசிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள். ஆனால் கர்த்தர், அவர்களை எவரும் புண்படுத்தாதபடி செய்தார்; அவர்களைப் புண்படுத்தாதபடி ராஜாக்களை எச்சரித்தார். கர்த்தர் அந்த ராஜாக்களிடம் சொன்னது, “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களையும் எனது தீர்க்கதரிசிகளையும் புண்படுத்தாதீர்கள்.” கர்த்தரை பாடுங்கள், பூமியெங்கும் கர்த்தர் நம்மை காப்பாற்றும் நற்செய்தியை ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டும். கர்த்தருடைய மகிமையை அனைத்து நாடுகளுக்கும் கூறுங்கள், எவ்வளவு அற்புதமானவர் என்பதையும் கூறுங்கள். கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர். அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.