1 நாளாகமம் 16:1-25

1 நாளாகமம் 16:1-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து, புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான். அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும், பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே! அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள். அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும். அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள். அவர்களையொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு, நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

1 நாளாகமம் 16:1-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து, தாவீது அதற்கென அமைத்த கூடாரத்திற்குள் வைத்தார்கள். பின்பு அவர்கள் இறைவனுக்குமுன் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள். தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தி முடித்தபின்பு, அவன் மக்களை யெகோவாவினுடைய பெயரில் ஆசீர்வதித்தான். பின்பு அவன் ஒவ்வொரு இஸ்ரயேலின் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். தாவீது சில லேவியர்களை யெகோவாவின் பெட்டிக்குமுன் பணிசெய்யவும், வேண்டுதல் செய்யவும், நன்றி செலுத்தவும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் துதிப்பதற்குமென நியமித்தான். அவர்களுக்கு தலைவனாக ஆசாப்பும், இரண்டாவதாக சகரியாவும், அவனுக்கு அடுத்ததாக ஏயேல், செமிராமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோரும் இருந்தார்கள். இவர்கள் யாழ், வீணை வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். கைத்தாளம் போடுவதற்காக ஆசாப் நியமிக்கப்பட்டான். அத்துடன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஒழுங்காக எக்காளம் ஊதுவதற்காக ஆசாரியர்களான பெனாயாவும், யாகாசியேலும் நியமிக்கப்பட்டார்கள். அன்றையதினம் தாவீது யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி ஆசாப்பிடமும், அவனுடைய உதவியாளர்களிடமும் முதன்முதலாக கொடுத்த பாடல் இதுவே: யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள். அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள். அவருடைய ஊழியராம் இஸ்ரயேலின் சந்ததிகளே, அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, அவரே நமது இறைவனாகிய யெகோவா; அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன. அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்; ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார். அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி சொன்னதாவது: “உங்களுடைய உரிமைச்சொத்தாக, கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.” அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும் வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது: “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.” பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துங்கள். நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.

1 நாளாகமம் 16:1-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதித்து, ஆண்கள்துவங்கி பெண்கள்வரை, இஸ்ரவேலர்களாகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான். அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும், பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது. யெகோவாவை துதித்து, அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள். அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள். அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள். தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே.

1 நாளாகமம் 16:1-25 பரிசுத்த பைபிள் (TAERV)

லேவியர்கள், உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்காகத் தாவீது கட்டியிருந்த இடத்தில் வைத்தனர். பிறகு தேவனுக்கு அவர்கள் சர்வாங்க தகன பலியையும், சமாதான பலியையும் கொடுத்தனர். தாவீது சர்வாங்க தகனபலியையும், சமாதான பலியையும் கொடுத்த பிறகு, கர்த்தருடைய பேரால் ஜனங்களை ஆசீர்வதித்தான். பிறகு அவன், ஒரு துண்டு அப்பத்தையும், இறைச்சி துண்டையும் உலர்ந்த திராட்சைகளையும், எல்லா இஸ்ரவேலிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் கொடுத்தான். உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு சேவை செய்வதற்காக தாவீது சில லேவியர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு துதிப்பாடுவதும், அவருக்கு நன்றி சொல்வதும் வேலையாய் இருந்தது. ஆசாப், முதல் குழுவின் தலைவன். இவர்கள் கைத்தாளங்களை இசைத்தனர். சகரியா, இரண்டாவது குழுவின் தலைவன். மற்ற லேவியர்கள்: ஏயேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா. ஓபேத் ஏதோம், ஏயெல் ஆகியோர். இவர்கள் தம்புரு, சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை இசைத்தனர். பெனாயாவும் யாகாசியேலும் ஆசாரியர்கள். இவர்கள் எப்போதும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். தாவீது கர்த்தரைத் துதித்து பாடுமாறு ஆசாப்பிடமும் அவனது சகோதரனிடமும் இவ்வேலையைக் கொடுத்தான். கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள், ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள். கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள், அவரது அதிசயங்களையும் கூறுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள், கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்! கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள். கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள், அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட. இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள். யாக்கோபின் சந்ததியினர், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தர் நமது தேவன், அவரது வல்லமை எங்கும் உள்ளது. அவரது உடன்படிக்கையை எப்போதும் நினைவு கொள்ளுங்கள், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கும் அவர் கட்டளையிட்டுள்ளார். கர்த்தர் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை நினைவுகொள்ளுங்கள், அவர் ஈசாக்குக்கு செய்த வாக்குறுதியையும் கூட. கர்த்தர் யாக்கோபுக்காக சட்டத்தைச் செய்தார், இது இஸ்ரவேலோடு செய்த உடன்படிக்கை, இது என்றென்றும் தொடரும். கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன். வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.” அங்கே சில ஜனங்களே இருந்தனர், சில அந்நியர்களும் இருந்தனர். அவர்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள். அவர்கள் ஒரு அரசிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள். ஆனால் கர்த்தர், அவர்களை எவரும் புண்படுத்தாதபடி செய்தார்; அவர்களைப் புண்படுத்தாதபடி ராஜாக்களை எச்சரித்தார். கர்த்தர் அந்த ராஜாக்களிடம் சொன்னது, “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களையும் எனது தீர்க்கதரிசிகளையும் புண்படுத்தாதீர்கள்.” கர்த்தரை பாடுங்கள், பூமியெங்கும் கர்த்தர் நம்மை காப்பாற்றும் நற்செய்தியை ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டும். கர்த்தருடைய மகிமையை அனைத்து நாடுகளுக்கும் கூறுங்கள், எவ்வளவு அற்புதமானவர் என்பதையும் கூறுங்கள். கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர். அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.