தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3

3
1நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. 2ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம். 3எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் நீங்கள் மனம் தவிக்காமல் இருக்கும்பொருட்டு தீமோத்தேயுவை அனுப்பினோம். இத்தகைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். 4நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். 5இதற்காகத்தான் நான் உங்களிடம் தீமோத்தேயுவை, உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ள அனுப்பி வைத்தேன். மேலும் என்னால் காத்திருக்க முடியாத நிலையில் தான் நான் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன். மக்களைத் தீயவற்றினால் இழுத்து கவர்ச்சிக்கும் பிசாசு உங்களைத் தோல்வியுறச் செய்துவிடுவானோ என்றும் எங்களின் உழைப்பு வீணாய்ப் போகுமோ என்றும் நான் பயந்திருந்தேன்.
6ஆனால் உங்களிடமிருந்து தீமோத்தேயு திரும்பி வந்தான். உங்களது அன்பு மற்றும் விசுவாசம் பற்றிய நல்ல செய்திகளை அவன் கூறினான். நல்வழியில் நீங்கள் எப்போதும் எங்களை நினைத்துக்கொள்வதாகவும் எங்களை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினான். அதுபோலத் தான் நாங்களும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். 7எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம். 8நீங்கள் உறுதியாகக் கர்த்தருக்குள் இருக்கும்போது எங்கள் வாழ்வு முழுமை பெறுவதாக உணர்கிறோம். 9உங்களால் தேவனுக்கு முன்பு நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆகவே உங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால் எங்கள் முழு மகிழ்ச்சிக்கும் எங்களால் போதுமான நன்றி சொல்ல முடியாது. 10இரவும் பகலுமாக நாங்கள் உங்களுக்காக மிகவும் உறுதியோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அங்கே வந்து உங்களை மீண்டும் பார்க்கவும், உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான செயல்களைச் செய்யவும் பிரார்த்தனை செய்கிறோம்.
11பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 12உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 13உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்