அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான். பிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள், “கர்த்தரைத் துதியுங்கள், ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள். தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். யூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை. யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது. நான்காவது நாள் யோசபாத்தும் அவனது படைகளும் பெராக்கா பள்ளத்தாக்கில் கூடினார்கள். அந்த இடத்தில் அவர்கள் கர்த்தரைத் துதித்தனர். எனவே அந்த இடம், “பெராக்கா பள்ளத்தாக்கு” என்று இதுவரையிலும் அழைக்கப்படுகிறது. பிறகு யோசபாத் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை எருசலேமிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். அவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டதால் அவர்களைக் கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு வைத்தார். அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர். அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:20-30
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்