2 நாளாகமம் 20:20-30
2 நாளாகமம் 20:20-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதிகாலையில் அவர்கள் தெக்கோவா பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனபோது, யோசபாத் எழுந்து நின்று, “யூதா, எருசலேம் மக்களே! எனக்கு செவிகொடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வையுங்கள், நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்; அவரது இறைவாக்கினர்களை நம்புங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று சொன்னான். மக்களுடன் ஆலோசனை பண்ணிய பின்பு யோசாபாத் யெகோவாவுக்கு பாடல்களைப் பாடவும், அவரது பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் பாடகரை நியமித்தான். படைக்கு முன்னால் சென்று: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பாடும்படி நியமித்தான். அவர்கள் பாடவும், துதிக்கவும் தொடங்கிய உடனே யூதாவுக்கு எதிராய் வந்திருந்த அம்மோன், மோவாப், சேயீர் மலைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த மனிதருக்கெதிராக யெகோவா தீடீர்த் தாக்குதல்களை ஏற்படுத்தினார். அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். அம்மோன், மோவாப் மனிதர்களும் சேயீர் மலைநாட்டு மனிதரை அழித்து நாசப்படுத்தும்படி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். சேயீர் மனிதர்களைக் கொலைசெய்து முடித்தபின்பு அவர்கள் ஒருவரையொருவர் அழித்தார்கள். யூதாவின் மக்கள் பாலைவனத்திற்கு எதிராய் இருக்கிற இடத்திற்கு வந்து இந்தப் பெரிய படையினர் பக்கமாய் பார்த்தபோது, அங்கே பிரேதங்கள் மட்டுமே தரையில் கிடப்பதைக் கண்டார்கள். ஒருவனும் தப்பியிருக்கவில்லை. எனவே யோசபாத்தும், அவன் மனிதர்களும் கொள்ளைப்பொருளை எடுத்து வருவதற்காக அங்கே சென்றார்கள். அங்கே அவர்கள் பெரும் தொகையான உபகரணங்களையும், உடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கண்டார்கள். அவை எடுத்துக் கொண்டுபோக முடியாத அளவு அதிகமாயிருந்தன. கொள்ளைப்பொருள் அதிகமாயிருந்தபடியால், அவற்றைச் சேர்த்தெடுக்க மூன்றுநாள் பிடித்தது. அவர்கள் நாலாம் நாளில் பெராக்கா பள்ளத்தாக்கிலே ஒன்றுகூடி அங்கே யெகோவாவைத் துதித்தார்கள். அதனால் அது இன்றுவரை பெராக்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. அதன்பின் யூதா, எருசலேம் மனிதர்கள் எல்லோரும் யோசபாத்தின் தலைமையின்கீழ் மகிழ்ச்சியுடன் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஏனெனில் தங்கள் பகைவர்களை மேற்கொண்டு சந்தோஷமாயிருக்கும்படி யெகோவா செய்தார். அவர்கள் எருசலேமுக்குள் போய் யாழ்களோடும், வீணைகளோடும், எக்காளங்களோடும் யெகோவாவினுடைய ஆலயத்திற்கு போனார்கள். இஸ்ரயேலின் பகைவர்களோடு யெகோவா எப்படி யுத்தம் செய்தார் என மற்ற நாட்டு அரசுகள் கேள்விப்பட்டபோது, இறைவனைப்பற்றிய பயம் அவர்கள்மேல் வந்தது. யோசபாத்தின் அரசு சமாதானத்துடன் இருந்தது. ஏனெனில் அவனுடைய இறைவன் எல்லாப் பக்கத்திலும் அவனுக்கு அமைதியைக் கொடுத்திருந்தார்.
2 நாளாகமம் 20:20-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கோவாவின் வனாந்திரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படும்போது யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது வெற்றிபெறுவீர்கள் என்றான். பின்பு அவன் மக்களோடு ஆலோசனைசெய்து, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்பாக நடந்துபோய், யெகோவாவை துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று யெகோவாவைப் பாடவும், பாடகர்களை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாக வந்து மறைந்திருந்த அம்மோனியர்களையும், மோவாபியர்களையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாக ஒருவரைக் யெகோவா எழும்பச்செய்ததால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியென்றால், அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசத்தாரைக் கொல்லவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள்; சேயீர் குடிமக்களை அழித்த பின்பு, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கதாகக் கைகலந்தார்கள். யூதா மனிதர்கள் வனாந்திரத்திலுள்ள மேடான பகுதிக்கு வந்து, அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திசையைப் பார்க்கிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை. யோசபாத்தும் அவனுடைய மக்களும் அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருட்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகமுடியாமலிருந்தது; மூன்று நாட்களாகக் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது. நான்காம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்று பெயரிட்டார்கள். பின்பு யெகோவா அவர்களை அவர்களுடைய எதிரிகள்பேரில் மகிழச் செய்ததால் யூதா மனிதர்களும் எருசலேம் மக்களும், அவர்களுக்கு முன்னே யோசபாத்தும் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினார்கள். அவர்கள் தம்புருக்களோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தார்கள். யெகோவா இஸ்ரவேலின் எதிரிகளோடு போர்செய்தார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது. இந்தவிதமாக தேவன் சுற்றுப்புறத்தாரால் போர் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதால், யோசபாத்தின் ஆட்சி அமைதலாயிருந்தது.
2 நாளாகமம் 20:20-30 பரிசுத்த பைபிள் (TAERV)
அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான். பிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள், “கர்த்தரைத் துதியுங்கள், ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள். தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். யூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை. யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது. நான்காவது நாள் யோசபாத்தும் அவனது படைகளும் பெராக்கா பள்ளத்தாக்கில் கூடினார்கள். அந்த இடத்தில் அவர்கள் கர்த்தரைத் துதித்தனர். எனவே அந்த இடம், “பெராக்கா பள்ளத்தாக்கு” என்று இதுவரையிலும் அழைக்கப்படுகிறது. பிறகு யோசபாத் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை எருசலேமிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். அவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டதால் அவர்களைக் கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு வைத்தார். அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர். அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார்.
2 நாளாகமம் 20:20-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான். பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைதேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைதேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள். யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை. யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்று நாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது. நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள். பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள். அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள். கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது. இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.