நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 21:12-20

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 21:12-20 TAERV

எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது: “தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் ராஜாவாகிய ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை. நீயோ இஸ்ரவேலின் ராஜாக்கள் வாழ்ந்ததுபோன்று வாழ்ந்து வருகிறாய். யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புகிறதைச் செய்யாதிருக்க செய்துள்ளாய். ஆகாபும் அவன் குடும்பத்தினரும் செய்தது இதுவே. அவர்கள் தேவனுக்கு நன்றியுடையவர்களாக இல்லை. நீ உன்னுடைய சகோதரர்களைக் கொன்றிருக்கிறாய். உனது சகோதரர்கள் உன்னைவிட நல்லவர்கள். எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார். நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.” கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். ராஜாவின் வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய குமாரன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ். இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. யோராம் ராஜாவாகியபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 21:12-20