2 நாளாகமம் 21:12-20

2 நாளாகமம் 21:12-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல், இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால், இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார். நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது. அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார். அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிற காலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை. அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 நாளாகமம் 21:12-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவாக்கினன் எலியாவிடமிருந்து ஒரு கடிதம் யெகோராமுக்குக் கிடைத்தது. அதில், “உனது முற்பிதாவான தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நீ உனது முற்பிதாவாகிய யோசபாத்தோ அல்லது யூதாவின் அரசன் ஆசாவோ நடந்த வழியில் நடக்கவில்லை. ஆனால் நீ இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தாய். அத்துடன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யூதாவையும், எருசலேம் மக்களையும் விக்கிரக வழிபாட்டின்மூலம் வேசித்தனம் செய்ய வழிநடத்தியிருக்கிறாய். அத்துடன் நீ உன்னைவிட நல்ல மனிதர்களான உனது சொந்த சகோதரரையும், உன் தகப்பனின் வீட்டு அங்கத்தினர்களையும் கொலைசெய்தாய். இப்பொழுது யெகோவா உன் மக்களையும், உனது மகன்களையும், உன் மனைவிகளையும் அத்துடன் உன்னுடையவை அனைத்தையும் கடுமையான வாதையால் அடித்துப்போடப் போகிறார். நீ தீராத குடல் நோயினால் வியாதிப்பட்டிருப்பாய். அந்த வியாதி உனது குடல்கள் வெளியே வரும்வரை நீடித்திருக்கும்” என்று எழுதியிருந்தது. யெகோவா யெகோராமுக்கு எதிராக பெலிஸ்தியரின் பகைமையையும், கூஷியரின் அருகில் வாழ்ந்த அரபியரின் பகைமையையும் தூண்டிவிட்டார். அவர்கள் யூதாவைத் தாக்கி அதன்மேல் படையெடுத்து, அரசனின் அரண்மனையில் காணப்பட்ட எல்லாப் பொருட்களையும் கொண்டுபோனார்கள். அவற்றுடன் அவனுடைய மகன்களையும், மனைவியையும் பிடித்துக்கொண்டு போனார்கள். இளையமகன் அகசியாவைத்தவிர வேறு ஒரு மகனும் அவனுக்குத் தப்பவில்லை. இவையெல்லாவற்றிற்கும் பின்பு யெகோவா யெகோராமை தீராத குடல் வியாதியினால் துன்புறுத்தினார். இந்நிகழ்ச்சியின் காலத்தில் இரண்டாம் வருடக் கடைசியில் நோயினால் அவனுடைய குடல்கள் வெளியே வந்தன, அவன் கொடிய வேதனையில் இறந்துபோனான். அவனுடைய மக்கள் அவனுடைய முற்பிதாக்களுக்குச் செய்ததுபோல அவனுக்கு மரியாதை செலுத்துவதற்காக நெருப்பு வளர்க்கவில்லை. யெகோராம் அரசனாகும்போது முப்பத்திரண்டு வயதாயிருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான். அவன் இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆயினும் அரசர்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. ஒருவனும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடவும் இல்லை.

2 நாளாகமம் 21:12-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு கடிதம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய முற்பிதாவாகிய தாவீதின் தேவனாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடக்காமல், இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் விபசார வழிக்கு ஒப்பாக யூதாவையும் எருசலேமின் குடிமக்களையும் விபசாரம் செய்ய வைத்து, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்றுபோட்டதால், இதோ, யெகோவா உன் மக்களையும், பிள்ளைகளையும், மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையினால் வாதிப்பார். நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் அழுகி விழும்வரை கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது. அப்படியே யெகோவா பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். அவர்கள் யூதாவில் வந்து, வலுக்கட்டாயமாகப் புகுந்து, ராஜாவின் அரண்மனையில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும், அவனுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவனுடைய இளைய மகனைத் தவிர வேறொரு மகனையும் அவனுக்கு மீதியாக விடவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு யெகோவா அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார். அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய முற்பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை. அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்து, ஒருவராலும் விரும்பப்படாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 நாளாகமம் 21:12-20 பரிசுத்த பைபிள் (TAERV)

எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது: “தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் ராஜாவாகிய ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை. நீயோ இஸ்ரவேலின் ராஜாக்கள் வாழ்ந்ததுபோன்று வாழ்ந்து வருகிறாய். யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புகிறதைச் செய்யாதிருக்க செய்துள்ளாய். ஆகாபும் அவன் குடும்பத்தினரும் செய்தது இதுவே. அவர்கள் தேவனுக்கு நன்றியுடையவர்களாக இல்லை. நீ உன்னுடைய சகோதரர்களைக் கொன்றிருக்கிறாய். உனது சகோதரர்கள் உன்னைவிட நல்லவர்கள். எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார். நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.” கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். ராஜாவின் வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய குமாரன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ். இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. யோராம் ராஜாவாகியபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.