நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 28

28
யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்
1ஆகாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 20 வயது. அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். தனது முற்பிதாவான தாவீதைப் போன்று ஆகாஸ் சரியான வழியில் வாழவில்லை. கர்த்தர் விரும்பியவற்றை ஆகாஸ் செய்யவில்லை. 2இஸ்ரவேல் ராஜாக்களின் தவறான முன்மாதிரிகளை கடைபிடித்தான். அவன் பாகால் தெய்வங்களைத் தொழுதுகொள்ள வார்ப்புச் சிலைகளைச் செய்தான். 3ஆகாஸ் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் நறுமணப் பொருட்களை எரித்தான். தன் சொந்த குமாரர்களை நெருப்பில் எரித்துப் பலிக்கொடுத்தான். அந்நாடுகளில் வாழ்ந்தோர் செய்த பயங்கரமான பாவங்களையே அவனும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கிருந்த பாவமிக்க ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியிருந்தார். 4மலைகளில் இருந்த மேடைகளிலும் ஒவ்வொரு பசுமையான மரத்தின் அடியிலும் ஆகாஸ் பலிகளைக் கொடுத்து நறுமணப் பொருட்களை எரித்தான்.
5-6ஆகாஸ் பாவங்களைச் செய்ததால், ஆராமின் ராஜா ஆகாஸை வெல்லும்படி தேவனாகிய கர்த்தர் செய்தார். ஆராமின் ராஜாவும் அவனது படைகளும் ஆகாஸைத் தோற்கடித்து யூத ஜனங்களில் பலரைச் சிறைபிடித்தனர். ஆராம் ராஜா, சிறைக் கைதிகளை தமஸ்கு என்ற நகரத்திற்கு அழைத்துச் சென்றான். மேலும் கர்த்தர், இஸ்ரவேல் ராஜாவாகிய பெக்கா ஆகாஸை வெல்லும்படிச் செய்தார். பெக்காவின் தந்தையின் பெயர் ரெமலியா ஆகும். ஒரே நாளில் பெக்காவும், அவனது படையும் யூதாவில் 1,20,000 வீரர்களைக் கொன்றனர். பெக்கா யூதா வீரர்களை வென்றதற்குக் காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை என்பது ஆகும். 7எப்பிராயீமில் சிக்ரி என்பவன் பலமிக்க வீரன். அவன் ஆகாஸ் ராஜாவின் குமாரனான மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் எல்க்கானாவையும் கொன்றான். எல்க்கானா ராஜாவுக்கு இரண்டாவது நிலையில் இருந்தார்.
8இஸ்ரவேலிய படையானது யூதாவில் வாழ்ந்த தம் சொந்த உறவினர்களான 2,00,000 பேரைச் சிறை பிடித்தனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். அவர்கள் யூதாவிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துச் சென்றார்கள். அந்த அடிமைகளையும், அப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் சமாரிய நகருக்குக் கொண்டுவந்தார்கள். 9ஆனால் அங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவனது பெயர் ஒதேத். சமாரியாவிற்கு வந்த இஸ்ரவேல் படையை ஒதேத் சந்தித்தான். ஒதேத் இஸ்ரவேல் படையினரிடம், “உங்கள் முற்பிதாக்கள் பணிந்த தேவனாகிய கர்த்தர், நீங்கள் யூதாவின் ஜனங்களைத் தோற்கடிக்கவிட்டார். ஏனென்றால் அவர்கள் மீது அவர் கோபமாயிருந்தார். மிக மோசமான முறையில் நீங்கள் யூதாவின் ஜனங்களைக் கொன்று தண்டித்தீர்கள். இப்போது தேவன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். 10நீங்கள் யூதாவின் ஜனங்களையும், எருசலேமையும் அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்களும் பாவம் செய்திருக்கிறீர்கள். 11இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கைப்பற்றிய உங்கள் சகோதர சகோதரிகளைத் திருப்பி அனுப்புங்கள். கர்த்தருடைய கடுமையான கோபம் உங்கள் மீது உள்ளது. எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று சொன்னான்.
12பிறகு எப்பிராயீம் தலைவர்கள், இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதைப் பார்த்தனர். அந்தத் தலைவர்கள் இஸ்ரவேல் வீரர்களைச் சந்தித்து எச்சரிக்கைச் செய்தனர். யோகனானின் குமாரன் அசரியா, மெஷிலேமோத்தின் குமாரனான பெரகியா, சல்லூமின் குமாரனான எகிஸ்கியா, அத்லாயின் குமாரனான அமாசா ஆகியோர் அந்தத் தலைவர்களாகும். 13அவர்கள் இஸ்ரவேல் வீரர்களிடம், “யூதாவிலிருந்து கைதிகளை இங்கே கொண்டுவராதீர்கள். அவ்வாறு செய்தால் அது கர்த்தருக்கு எதிராக நாம் பாவம் செய்வது போல் ஆகும். நமது பாவங்களையும் குற்ற உணர்வையும் அது மோசமாக்கும். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபம் கொள்வார்” என்றார்கள்.
14எனவே, வீராகள் கைதிகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் தலைவர்களிடமும், ஜனங்களிடமும் கொடுத்தனர். 15உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.
16-17அதே நேரத்தில் ஏதோம் நாட்டு ஜனங்கள் யூதாவைத் தோற்கடித்தனர். ஏதோமியர் ஜனங்களைச் சிறைபிடித்து கைதிகளாக கொண்டு சென்றார்கள். எனவே ஆகாஸ் ராஜா அசீரியா ராஜாவிடம் உதவுமாறு வேண்டினான். 18பெலிஸ்தர்களும் மலைநாட்டு நகரங்களையும் யூதாவின் தென் பகுதியையும் தாக்கினார்கள். இவர்கள் பெத்ஷிமேஸ், ஆயலேன், கெதெரோத், சொக்கோ, திம்னா மற்றம் கிம்சோ ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர்களுக்கு அருகிலிருந்த கிராமங்களையும் கைப்பற்றினார்கள், பிறகு பெலிஸ்தியர்கள் அந்த ஊர்களில் வாழ்ந்தார்கள். 19யூதா ஜனங்களுக்கு கர்த்தர் கடுமையான துன்பங்களைத் தந்தார். ஏனென்றால் ஆகாஸ் ராஜா யூதா ஜனங்கள் பாவம் செய்யும்படி தூண்டினான். அவன் கர்த்தருக்கு உண்மை இல்லாதவனாக நடந்துக் கொண்டான். 20அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில் நேசர் உதவுவதற்குப் பதிலாகத் துன்பங்களைத் தந்தார். 21ஆகாஸ் கர்த்தருடைய ஆலயம், அரண்மனை, இளவரசர்களின் அரண்மனை ஆகியவற்றில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவந்தான். அவற்றை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான். எனினும் அது ஆகாசுக்கு உதவவில்லை.
22இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவிலும் ஆகாஸ் மேலும் மோசமான பாவங்களையே தொடர்ந்து செய்தான். இதனால் கர்த்தருக்கு மிகவும் உண்மையற்றவனாக இருந்தான். 23தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
24ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்து உடைத்துப் போட்டான் பிறகு அவன் கர்த்தருடைய ஆலய கதவுகளை மூடினான். அவன் பலிபீடங்களைச் செய்து எருசலேமின் ஒவ்வொரு தெரு முனையிலும் வைத்தான். 25ஆகாஸ் யூதாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மேடைகள் அமைத்து நறுமணப் பொருட்களை எரித்து அந்நிய தெய்வங்களை தொழுதுகொண்டான். ஆகாஸ் தன் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவனாகிய கர்த்தரை மேலும் கோபமூட்டினான்.
26ஆகாஸ் தொடக்ககாலம் முதல் இறுதிவரை செய்த மற்ற செயல் எல்லாமும் யூதா மற்றம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 27ஆகாஸ் மரித்ததும் அவனை அவனது முற்பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்தனர். ஜனங்கள் அவனை எருசலேம் நகரிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அவனை இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் அடக்கம் செய்யவில்லை. ஆகாசின் இடத்தில் புதிய ராஜாவாக எசேக்கியா வந்தான். எசேக்கியா ஆகாசின் குமாரன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 28: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்