நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 36

36
யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்
1எருசலேமில் யூதாவின் புதிய ராஜாவாக யோவாகாசை ஜனங்கள் தேர்ந்தெடுத்தனர். யோவாகாஸ் யோசியாவின் குமாரன். 2யோவாகாஸ் தனது 23வது வயதில் யூதாவின் ராஜா ஆனான். அவன் எருசலேமில் மூன்று மாதங்களே ராஜாவாக இருந்தான். 3பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோயோ வாகாசைக் கைதியாக்கினான். 3 1/4 டன் எடையுள்ள வெள்ளியும், 75 பவுண்டு எடையுள்ள தங்கமும் அபராதமாகச் செலுத்த வேண்டுமென யூதா ஜனங்களிடம் எகிப்து ராஜாவாகிய நேகோ சொன்னான். 4யோவாகாசின் சகோதரனை யூதா மற்றும் எருசலேமின் புதிய ராஜாவாக நேகோ தேர்ந்தெடுத்தான். யோவாகாசின் சகோதரனின் பெயர் எலியாக்கீம் ஆகும். அவனது பெயரை யோயாக்கீம் என்று நேகோ மாற்றினான். ஆனால் நேகோ யோவாகாசை எகிப்திற்கு அழைத்துச்சென்றான்.
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம்
5யோயாக்கீம் யூதாவின் புதிய ராஜாவாகிய போது அவனது வயது 25. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ஆண்டான். கர்த்தர் செய்ய வேண்டும் என்று விரும்பியவற்றை யோயாக்கீம் செய்யவில்லை. அவன் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான்.
6யூதாவை பாபிலோனில் இருந்த நேபுகாத்நேச்சார் தாக்கினான். அவன் யோயாக்கீமை கைது செய்து வெண்கலச் சங்கிலியால் கட்டினான். பிறகு அவனை பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான். 7நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்துச்சென்றான். அவற்றை பாபிலோனுக்கு எடுத்துச்சென்று தனது அரண்மனையில் வைத்துக்கொண்டான். 8யோயாக்கீம் செய்த மற்ற செயல்களும் பாவங்களும் அவனது பயங்கரமான தவறுகளும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீன் புதிய ராஜாவாக யோயாக்கீம் இடத்தில் ஆனான். இவன் யோயாக்கீமின் குமாரன்.
யூதாவின் மன்னனான யோயாக்கீன்
9யோயாக்கீன் யூதாவின் ராஜாவாக ஆனபோது அவனது வயது 18 ஆகும். அவன் எருசலேமின் ராஜாவாக 3 மாதங்களும் 10 நாட்களும் இருந்தான். கர்த்தர் செய்யவிரும்பியதை அவன் செய்யவில்லை. அவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். 10வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நேபுகாத்நேச்சார் வேலைக்காரர்களை அனுப்பி யோயாக்கீனை வரவழைத்தான். அவர்கள் அவனோடு கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களையும் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். நேபுகாத் நேச்சார் சிதேக்கியாவைத் தேர்ந்தெடுத்து யூதா மற்றும் எருசலேமின் ராஜாவாக்கினான். சிதேக்கியா யோயாக்கீனின் உறவினன் ஆவான்.
சிதேக்கியா, யூதாவின் ராஜா
11சிதேக்கியா யூதாவின் ராஜாவாகியபோது அவனது வயது 21 ஆகும். அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 12சிதேக்கியா கர்த்தருடைய விருப்பப்படி செயல்களைச் செய்யவில்லை. சிதேக்கியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். எரேமியா என்ற தீர்க்கதரிசி கர்த்தரிடமிருந்து செய்தியைச் சொன்னான். ஆனால் சிதேக்கியா பணிவடையாமல் எரேமியாவின் பேச்சைக் கேட்கவில்லை.
எருசலேம் அழிக்கப்பட்டது
13சிதேக்கியா நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு எதிராக ஆனான். முன்பு நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவிடம் தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வாக்குறுதி வாங்கியிருந்தான். சிதேக்கியா தேவன் மேல் ஆணைச் செய்திருந்தான். ஆனால் அவன் கடின மனதுள்ளவனாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய பக்கம் திரும்பாமல் இருந்தான். 14ஆசாரியர்களின் தலைவர்களும், யூதா ஜனங்களின் தலைவர்களும் கொடிய பாவங்களைச் செய்து கர்த்தருக்கு எதிராகிப்போனார்கள். அவர்கள் பிற நாடுகளின் தீயச்செயல்களைப் பின்பற்றினார்கள். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தை அழித்தார்கள். கர்த்தர் எருசலேமில் தன் ஆலயத்தைப் பரிசுத்தமாக வைத்திருந்தார். 15அவர்களது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எச்சரிக்கப் பல்வேறு தீர்க்கதரிசிகளை மீண்டும், மீண்டும் அனுப்பினார். கர்த்தர் அவர்களுக்காகவும், தமது ஆலயத்துக்காகவும் வருத்தப்பட்டார். அதனால் அவர் இவ்வாறுச் செய்தார். கர்த்தர் அவர்களையும், ஆலயத்தையும் அழித்துவிட விரும்பவில்லை. 16ஆனால் தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளைக் கேலிச் செய்தனர். தேவனுடைய தீர்க்கதரிசனங்களைக் கேட்க அவர்கள் மறுத்தனர். அவர்கள் தேவனுடைய செய்திகளை வெறுத்தார்கள். இறுதியில் தேவனால் அவரது கோபத்தை அதற்கு மேல் அடக்க முடியவில்லை. 17எனவே தேவன் பாபிலோனின் ராஜாவை யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தாக்கிட அழைத்து வந்தார். பாபிலோன் ராஜா இளைஞர்களை அவர்கள் ஆலயத்தில் இருந்தபோதுங்கூட கொன்றான். அவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களிடம் இரக்கம் காட்டவில்லை. பாபிலோனிய ராஜா இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், நோயாளிகள், ஆரோக்கியமுடையவர்கள் என அனைவரையும் கொன்றான். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைத் தண்டிக்கும்படி தேவன் நேபுகாத்நேச்சரை விட்டுவிட்டார். 18நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் பாபிலேனுக்கு எடுத்துச்சென்றான். ஆலயம், ராஜாவின் அரண்மனை, அதிகாரிகளின் வீடு என எல்லா இடங்களிலும் இருந்த விலைமதிக்கமுடியாத பொருள்களையும் அவன் எடுத்துச் சென்றான். 19நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் ஆலயத்தை எரித்தனர். எருசலேம் சுவர்களை இடித்தனர். ராஜா மற்றும் அதிகாரிகளின் வீடுகளை அடித்துச் சிதைத்து எரித்தனர். அவர்கள் விலையுயர்ந்த பொருட்களை அழிப்பதும், எடுத்து செல்வதுமாய் இருந்தனர். 20நேபுகாத்நேச்சார் உயிரோடு மீதியாக உள்ள ஜனங்களை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவர்களைக் கட்டாயப்படுத்தி அடிமையாக்கினான். பெர்சிய அரசு பாபிலோனிய அரசை அழிக்கும்வரை அவர்கள் அங்கு அடிமைகளாகவே இருந்தனர். 21எரேமியா தீர்க்கதரிசி மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் சொன்னது யாவும் நடந்தது. கர்த்தர் ஏரேமியா மூலம் சொன்னது: இந்த இடம் இன்னும் 70 ஆண்டுகளுக்கு பாழாய் கிடக்கும். நிலங்களுக்கு ஜனங்களால் வழங்கப்படாமல் போன ஓய்வு ஆண்டுகளுக்காக சரி செய்வது போல் இது இருக்கும்.
22பெர்சியா ராஜாவாகிய கோரேசின் முதலாம் ஆண்டில் கர்த்தர் கோரேசின் மூலமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவன் இதனைச் செய்ததால் கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் வாக்களித்ததும் நிறைவேறும். கோரேசு தன் அரசின் அனைத்து பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள் இந்தச் செய்தியை எடுத்துச் சென்றனர்.
23பெர்சியா ராஜாவாகிய கோரேசு கூறுவது:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் என்னை பூமி முழுவதற்கும் ராஜா ஆக்கினார். எருசலேமில் அவர் தனக்கொரு ஆலயத்தைக் கட்டும்படி பொறுப்பளித்துள்ளார். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் எருசலேமிற்குப் போகும்படி விடுவிக்கிறேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 36: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்