நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 5:10-14

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 5:10-14 TAERV

அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. மோசே ஒரேப் மலையில் வைத்து இந்த இரண்டு கற்பலகைகளையும் பெட்டிக்குள் வைத்தான். ஒரேபில்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்துகொண்டார். இது இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த பிறகு நடந்தது. அங்கிருந்த ஆசாரியர்கள் எல்லாம் தங்களை பரிசுத்தமாக்கிக்கொள்ள சடங்குகளைச் செய்தார்கள். அவர்கள் அனைவரும் பரிசுத்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் தங்களுடைய விசேஷ குழுக்களின்படியில்லாமல் ஒன்றாக சேர்ந்து நின்றார்கள். லேவியப் பாடகர்கள் அனைவரும் பலிபீடத்தின் கிழக்குப்பகுதியில் நின்றுகொண்டனர். ஆசாப், எமான் மற்றும் எதுத்தூனிய பாடல் குழுவினர் அனைவரும் தமது குமாரர்களுடனும் உறவினர்களுடனும் அங்கு இருந்தார்கள். அவர்கள் வெண்ணிற மென்மையான ஆடையை அணிந்திருந்தனர். அவர்களிடம் கைத்தாளங்களும் சுரமண்டலங்களும் தம்புருக்களும் இருந்தன. லேவியப் பாடகர்களோடு 120 ஆசாரியர்களும் இருந்தனர். இந்த 120 ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதினார்கள். எக்காளங்களை ஊதியவர்களும் பாடல்களைப் பாடியவர்களும் ஒரே ஆளைப்போல இருந்தார்கள். அவர்கள் கர்த்தரைப் புகழ்ந்தும் கர்த்தருக்கு நன்றி சொல்லியும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடினார்கள். வாத்தியக்கருவிகளையும், இசைக்கருவிகளையும், தாளக் கருவிகளையும் ஒன்றாக மீட்டி பெருத்த ஓசையை அவர்கள் எழுப்பினார்கள். அவர்கள் பாடிய பாட்டு இதுதான்: “கர்த்தரைத் துதியுங்கள் ஏனென்றால் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய கருணை என்றென்றும் நிலைத்திருக்கிறது.” பிறகு கர்த்தருடைய ஆலயமானது மேகங்களால் மூடப்பட்டது. மேகத்தின் இடையூறால் ஆசாரியர்களால் தொடர்ந்து பணிச்செய்ய முடியவில்லை. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 5:10-14