2 நாளாகமம் 5:10-14

2 நாளாகமம் 5:10-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை. வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டார்கள். ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள். அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற் போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

2 நாளாகமம் 5:10-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்தப் பெட்டிக்குள் ஓரேப் மலையில் மோசே வைத்த இரண்டு கற்பலகைகளைத்தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அங்குதான் இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வந்தபின்பு யெகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார். பின்பு ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தார்கள். அங்கேயிருந்த எல்லா ஆசாரியரும் தங்கள் பிரிவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல், தங்களைப் பரிசுத்தப்படுத்தியிருந்தார்கள். பாடகர்களான ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களும், அவர்களுடைய மகன்களும், உறவினர்களுமாக எல்லா லேவியர்களும் பலிபீடத்தின் கிழக்குப் பகுதியில் நின்றார்கள். அவர்கள் மென்பட்டு உடையை உடுத்தி, கைத்தாளங்களையும், யாழ்களையும், வீணைகளையும் இசைத்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து நூற்றிருபது ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு நின்றனர். எக்காளம் ஊதுபவர்களும், பாடகர்களும், ஒன்றிணைந்து ஒரே குரலில் யெகோவாவுக்கு துதியையும் நன்றியையும் செலுத்தினர். எக்காளங்கள், கைத்தாளங்கள், மற்றும் இசைக்கருவிகளுடன் தங்கள் குரல்களை உயர்த்தி, யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள்: “யெகோவா நல்லவர், அவர் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.” அப்பொழுது யெகோவாவின் ஆலயத்தை மேகம் நிரப்பிற்று. அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை இறைவனுடைய ஆலயத்தை நிரப்பியது.

2 நாளாகமம் 5:10-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் வம்சத்தினர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, யெகோவா ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை செய்தபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அதிலே இருந்ததில்லை. வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர்கள் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டார்கள். ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய மகன்களும் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகர்களான லேவியர்கள் அனைவரும் மெல்லிய புடவைகளை அணிந்து, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் பிடித்து பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடு பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள். அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஒரேசத்தமாக யெகோவாவை துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போதும், பாடகர்கள் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கச்செய்து, யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கும்போதும், யெகோவாவுடைய வீடாகிய தேவாலயம் மேகத்தால் நிரப்பப்பட்டது. அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.

2 நாளாகமம் 5:10-14 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. மோசே ஒரேப் மலையில் வைத்து இந்த இரண்டு கற்பலகைகளையும் பெட்டிக்குள் வைத்தான். ஒரேபில்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்துகொண்டார். இது இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த பிறகு நடந்தது. அங்கிருந்த ஆசாரியர்கள் எல்லாம் தங்களை பரிசுத்தமாக்கிக்கொள்ள சடங்குகளைச் செய்தார்கள். அவர்கள் அனைவரும் பரிசுத்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் தங்களுடைய விசேஷ குழுக்களின்படியில்லாமல் ஒன்றாக சேர்ந்து நின்றார்கள். லேவியப் பாடகர்கள் அனைவரும் பலிபீடத்தின் கிழக்குப்பகுதியில் நின்றுகொண்டனர். ஆசாப், எமான் மற்றும் எதுத்தூனிய பாடல் குழுவினர் அனைவரும் தமது குமாரர்களுடனும் உறவினர்களுடனும் அங்கு இருந்தார்கள். அவர்கள் வெண்ணிற மென்மையான ஆடையை அணிந்திருந்தனர். அவர்களிடம் கைத்தாளங்களும் சுரமண்டலங்களும் தம்புருக்களும் இருந்தன. லேவியப் பாடகர்களோடு 120 ஆசாரியர்களும் இருந்தனர். இந்த 120 ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதினார்கள். எக்காளங்களை ஊதியவர்களும் பாடல்களைப் பாடியவர்களும் ஒரே ஆளைப்போல இருந்தார்கள். அவர்கள் கர்த்தரைப் புகழ்ந்தும் கர்த்தருக்கு நன்றி சொல்லியும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடினார்கள். வாத்தியக்கருவிகளையும், இசைக்கருவிகளையும், தாளக் கருவிகளையும் ஒன்றாக மீட்டி பெருத்த ஓசையை அவர்கள் எழுப்பினார்கள். அவர்கள் பாடிய பாட்டு இதுதான்: “கர்த்தரைத் துதியுங்கள் ஏனென்றால் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய கருணை என்றென்றும் நிலைத்திருக்கிறது.” பிறகு கர்த்தருடைய ஆலயமானது மேகங்களால் மூடப்பட்டது. மேகத்தின் இடையூறால் ஆசாரியர்களால் தொடர்ந்து பணிச்செய்ய முடியவில்லை. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.