ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 15

15
யூதாவில் அசரியா அரசாண்டது
1இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 27வது ஆட்சியாண்டின் போது அமத்சியாவின் குமாரனான அசரியா யூதாவின் ராஜாவானான். 2அசரியா அரசாள வந்தபோது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயார் எருசலேமின் எக்கோலியாள் ஆகும். 3அசரியா தன் தந்தையைப் போலவே, கர்த்தர் சொன்ன சரியான வழியில் வாழ்ந்து வந்தான். அமத்சியா செயலாற்றிய விதத்திலேயே அசரியாவும் பின்பற்றிச் செயலாற்றினான். 4இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. அந்த இடங்களில் ஜனங்கள் தொடர்ந்து பலி கொடுத்தும், நறுமணப் பொருட்களை எரித்தும், தொழுதுகொண்டும் வந்தனர்.
5அசரியாவிற்குத் தொழுநோய் வரும்படி கர்த்தர் செய்தார். மரிக்கும்வரை இவன் தொழுநோயாளியாகவே இருந்தான். இவன் தனி வீட்டில் வாழ்ந்தான். இவனது குமாரனான யோதாம், அரண்மனையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஜனங்களை நியாயம்தீர்த்து வந்தான்.
6அசரியா செய்த மற்ற அருஞ்செயல்கள் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 7அசரியா மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். அசரியாவின் குமாரனான யோதாம் அவனுக்குப் பிறகு புதிய ராஜாவானான்.
இஸ்ரவேலில் சகரியாவின் குறுகிய ஆட்சி
8யெரொபெயாமின் குமாரனான சகரியா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலரை 6 மாத காலத்திற்கு அரசாட்சி செய்தான். இது யூதாவை அசரியா 38வது ஆண்டில் ஆளும் போது நிகழ்ந்தது. 9கர்த்தரால் தவறானவை என்று சொல்லப்பட்ட அனைத்துக் காரியங்களையும் சகரியா செய்தான். அவன் தன் முற்பிதாக்கள் செய்த பாவங்களையே செய்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.
10யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன் சகரியாவிற்கு எதிராக திட்டம் தீட்டினான். ஜனங்களுக்கு முன்பு இப்லேயிமில் கொன்று விட்டு புதிய ராஜாவானான். 11சகரியா செய்த மற்ற செயல்களைப்பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 12இவ்வாறு கர்த்தருடைய வார்த்தைகள் உண்மையானது. கர்த்தர் யெகூவிடம் அவனது சந்ததியார் 4 தலைமுறையினர் இஸ்ரவேல் தேசத்தை ஆள்வார்கள் என்று கூறியிருந்தார்.
இஸ்ரவேலில் சல்லூமின் குறுகிய கால ஆட்சி
13யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன், யூதா வின் ராஜாவாகிய உசியாவின் 39ஆம் ஆட்சியாண்டில் இஸ்ரவேலின் ராஜாவானான். சல்லூம் ஒரு மாதம் சமாரியாவிலிருந்து ஆண்டான்.
14காதியின் குமாரனான மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து யாபேசின் குமாரனான சல்லூமை வெட்டிக்கொன்றான். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.
15சகரியாவுக்கு எதிராக, சல்லூம் செய்த சதிகள் உட்பட, அவனுடைய எல்லா மீதியான செயல்களைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரவேலை மெனாகேம் ஆண்டது
16சல்லூம் மரித்தபிறகு, மெனாகேம் திப்சாவையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தோற்கடித்தான். ஜனங்கள் அவனுக்கு நகர வாசலைத் திறக்க மறுத்தனர். எனவே அவன் அவர்களைத் தோற்கடித்ததும் நகரத்திலுள்ள கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
17மெனாகேம் எனும் காதியின் குமாரன் இஸ்ரவேலின் புதிய ராஜா ஆனபோது, யூதாவில் அசரியாவின் 39வது ஆட்சியாண்டு நடைபெற்றது. மெனாகேம் பத்து ஆண்டுகள் சமாரியாவிலிருந்து அரசாண்டான். 18கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட செயல்களையெல்லாம் மெனாகேம் செய்து வந்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.
19அசீரியாவின் ராஜாவாகிய பூல், இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிடவந்தான். மெனாகேம் அவனுக்கு 75,000 பவுண்டு வெள்ளியைக் கொடுத்தான். இவ்வாறு கொடுத்ததன் மூலம் பூலின் உதவியைப் பெற்று தனது அரசை வலுப்படுத்திக்கொண்டான். 20அனைத்து செல்வர்களிடமும் வல்லமை உள்ளவர்களிடமும் வரி வசூல் செய்து மெனாகேம் செல்வத்தைப் பெருக்கினான். அவன் ஒவ்வொருவருக்கும் 50 வெள்ளி சேக்கல் வரி விதித்தான். பிறகு அதனை இவன் அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்து வந்தான். எனவே, அசீரியாவின் ராஜா இஸ்ரவேலில் தங்காமல் விலகிப்போனான்.
21மெனாகேம் செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 22மெனாகேம் மரித்ததும் இவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான பெக்காகியா புதிய ராஜா ஆனான்.
இஸ்ரவேலை பெக்காகியா அரசாண்டது
23மெனாகேமின் குமாரனான பெக்காகியா இஸ்ரவேலை சமாரியாவிலிருந்து ஆளத் தொடங்கினான். அப்போது யூதாவில் அசரியாவின் 50வது ஆட்சியாண்டு நடந்துக் கொண்டிருந்தது. பெக்காகியா இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். 24கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களையெல்லாம் பெக்காகியா செய்து வந்தான். இவனும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.
25பெக்காகியாவின் படை அதிகாரியாக ரெமலியாவின் குமாரனான பெக்கா இருந்தான். பெக்கா பெக்காகியாவை, சமாரியா ராஜாவின் அரண்மனையிலேயே கொன்றுபோட்டான். பெக்காகியாவைக் கொன்றபொழுது பெக்காவிடம் கீலேயாத்தின் 50 ஆட்கள் இருந்தனர். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.
26பெக்காகியா செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரவேலைப் பெக்கா அரசாண்டது
27ரெமலியாவின் குமாரனான பெக்கா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலை அரசாண்டான். அப்போது யூதாவில் அசரியாவின் 52வது ஆட்சியாண்டு நடந்துக்கொண்டிருந்தது, பெக்கா 20 ஆண்டுகள் அரசாண்டான். 28கர்த்தரால் தவறென்று சொல்லப்பட்ட செயல்களையே பெக்கா செய்துவந்தான். இவன், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.
29அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர், வந்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டான். அப்போது இஸ்ரவேலில் பெக்காவின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது. திகிலாத்பிலேசர், ஈயோன், பெத்மாக்கா எனும் ஆபேல், யனோவாக், கேதேஸ், ஆத்சோர், கீலேயாத், கலிலேயா, நப்தலியின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி இப்பகுதியிலுள்ள ஜனங்களைச் சிறைபிடித்து அசீரியாவிற்குக் கொண்டுபோனான்.
30ஏலாவின் குமாரனான ஒசெயா என்பவன் ரெமலியாவின் குமாரனான பெக்காவிற்கு எதிராகச் சதிசெய்தான். அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் 20ஆம் ஆட்சியாண்டில் வெட்டிக்கொன்றான். புதிய ராஜாவானான்.
31பெக்காவின் மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
யூதாவை யோதாம் அரசாண்டது
32உசியாவின் குமாரனான யோதாம் யூதாவின் ராஜாவானான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் குமாரனான பெக்காவின் இரண்டாவது ஆட்சியாண்டு நடந்தது. 33யோதாம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள், இவள் சாதோக்கின் குமாரத்தி ஆவாள். 34யோதாம் தன் தந்தை உசியாவைப் போன்று, கர்த்தர் சரி என்று சொன்னதை செய்துவந்தான். 35ஆனால் இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடர்ந்து அந்த இடங்களில் பலியிட்டும் நறு மணப் பொருட்களை எரித்தும் தொழுதுகொண்டும் வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மேல் கதவைக் கட்டினான். 36யோதாமின் மற்ற அருஞ்செயல்களெல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
37அப்போது, கர்த்தர் ஆராமின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனான பெக்காவையும் யூதாவிற்கு எதிராகப் போரிட அனுப்பத் தொடங்கினார்.
38யோதாம் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான ஆகாஸ் என்பவன் புதிய ராஜா ஆனான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 15: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்