ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 16

16
ஆகாஸ் யூதாவின் ராஜா ஆனது
1யோதாமின் குமாரனான ஆகாஸ் என்பவன் யூதாவின் ராஜா ஆனான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் குமாரனான பெக்கா என்பவனின் 17வது ஆட்சியாண்டு நடைபெற்றது. 2ஆகாஸ் ராஜாவாகும்போது அவனது வயது 20, அவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். நல்லதென்று கர்த்தர் சொன்னவற்றை ஆகாஸ் செய்யவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்த தனது முற்பிதாவான தாவீதைப்போன்று இவன் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. 3இவன் இஸ்ரவேலின் மற்ற ராஜாக்களைப்போன்று ஆண்டு வந்தான். அவன் தன் குமாரனையும் தகனபலியாகக் கொடுத்தான். இஸ்ரவேலர்கள் வந்தபொழுது, கர்த்தர் நாட்டை விட்டுத் துரத்திய ஜனங்கள் செய்துவந்ததுபோன்ற பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தான். 4ஆகாஸ் மேடைகளில் பலியிட்டும் நறுமணப் பொருட்களை எரித்தும் வந்தான். மேடை, மலைஉச்சி, ஒவ்வொரு மரத்தடி என அனைத்து இடங்களிலும் தொழுதுகொண்டு வந்தான்.
5பிறகு, ஆராமின் ராஜாவாகிய ரேத்சீன் என்பவனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரனான பெக்கா என்பவனும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். அவர்கள் ஆகாசை முற்றுகையிட்டனர். ஆனால், தோற்கடிக்க முடியவில்லை. 6அப்போது ஆராம் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பப் பெற்றான். ஏலாத்திலிருந்து யூதர்கள் அனைவரையும் திரும்ப எடுத்துக் கொண்டான். ஆராமியர்கள் ஏலாத்தில் குடியேறினார்கள். இன்றுவரை அங்கே அவர்கள் இருக்கின்றனர்.
7ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடம் தூதுவனை அனுப்பினான். “நான் உங்கள் சேவகன். நான் உங்களுக்கு குமாரனைப் போன்றவன். என்னை ஆராம் ராஜாவிடமிருந்தும் இஸ்ரவேல் ராஜாவிடமிருந்தும் வந்து காப்பாற்றுங்கள். அவர்கள் என்னோடு போர் செய்ய வருகிறார்கள்!” என்று தூதுவிட்டான். 8ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான். 9அசீரியாவின் ராஜா, ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.
10அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரை சந்திக்க ராஜா ஆகாஸ் தமஸ்குவுக்குப்போனான். ஆகாஸ் அங்கே பலி பீடத்தைப் பார்த்தான். அவன் அதனுடைய மாதிரியையும் வடிவத்தையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அதேபோல ஒரு பலிபீடம் செய்வதற்காக அனுப்பினான். 11ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பி வருவதற்குள் ஆசாரியன் உரியா ராஜாவால் அனுப்பப்பட்ட மாதிரியின்படியே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான்.
12ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பியதும், பலிபீடத்தைப் பார்த்தான். அதில் பலிகளைச் செலுத்தினான். 13அதில் அவன் தகன பலியையும் தானிய காணிக்கைகளையும் செலுத்தினான். அதோடு, பானங்களின் காணிக்கையையும் சமாதானப் பலியின் இரத்தத்தையும் இந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
14கர்த்தருடைய முன்னிலையில் ஆலயத்தின் முன்னாலிருந்த வெண்கலப் பலி பீடத்தை ஆகாஸ் பெயர்த்தெடுத்தான். அந்த வெண்கலப் பலிபீடம் ஆகாஸின் பலிபீடத்திற்கும் கர்த்தருடைய ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. அந்த வெண்கலப் பலிபீடத்தைத் தனது பலிபீடத்திற்கு வடக்குப் பக்கத்தில் வைத்தான். 15ஆசாரியனாகிய உரியாவிற்கு ராஜா ஒரு கட்டளையிட்டான். அவன், “நீ இந்த பெரிய பலிபீடத்தின் மேல் காலைச் சர்வாங்க தகனபலியையும் மாலை தானியக் காணிக்கையையும் தேசத்தின் ஜனங்களின் சர்வாங்கத் தகன பலியையும் அவர்களது தானியக் காணிக்கைகளையும் பானங்களின் காணிக்கையையும் செலுத்தவேண்டும். அதன்மேல் சர்வாங்க தகனபலி மற்றும் உயிர் பலிகளின் இரத்தத்தையும் தெளிப்பாய். நான் என் சொந்தக் காரியத்துக்கு தேவனிடம் கேட்க, (விசாரிக்க), (வழிகாட்ட) மட்டும் வெண்கலப் பலிபீடத்தைப் பயன்படுத்துவேன்” என்று கூறினான். 16அதன்படியே ஆசாரியன் உரியா அனைத்தையும் ஆகாஸ் ராஜா அவனுக்குக் கட்டளையிட்டபடி செய்தான்.
17மேலும் ஆகாஸ் ராஜா வண்டிகளில் உள்ள சவுக்குகளை (பீடங்களை) அறுத்தான். அவற்றின் மேலுள்ள கொப்பறைகளை எடுத்தான். வெண்கலக் காளைகளின் மேலிருந்த பெரிய (கடல்) தொட்டியை இறக்கி கற்களின் தள வரிசையில் வைத்தான். 18ஆலயத்தின் உள்ளே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் (மண்டபத்தை) ஆகாஸ் நீக்கினான். மேலும் ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நீக்கினான். இவை அனைத்தையும் ஆலயத்திலிருந்து நீக்கி ராஜா அவற்றை அசீரியரின் ராஜாவுக்குக் கொடுத்தான்.
19ஆகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 20ஆகாஸ் மரித்ததும் தாவீது நகரத்திலே தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனது குமாரனான எசேக்கியா புதிய ராஜா ஆனான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 16: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்