ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 21:10-26

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 21:10-26 TAERV

தனது ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட செய்தியை கர்த்தர் சொல்லச்செய்தார்: “யூத ராஜாவாகிய மனாசேயின் செயல்கள் வெறுக்கத்தக்கவை (மிக அருவருப்பானவை) இவன் இவனுக்கு முன்பு செய்த எமோரியர்களைவிட கெட்ட செயல்களைச் செய்கிறான். தனது விக்கிரகங்கள் மூலம் யூதர்களையும் பாவத்துக்குள்ளாக்குகிறான். எனவே இஸ்ரவேலர்களின் கர்த்தர், ‘பார்! நான் எருசலேமிற்கும் யூதாவிற்கும் எதிராகப் பெருந்துன்பத்தைத் தருவேன். இதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். எனவே எருசலேமின் மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன். ஒருவன் ஒரு தட்டை கழுவி துடைத்து கவிழ்த்து வைப்பது போன்று எருசலேமைச் செய்வேன். இங்கே இன்னும் எனக்கு வேண்டிய சிலர் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விட்டுவிடுவேன். மற்றவர்களைப் பகைவர்களிடம் ஒப்படைப்பேன். பகைவர்கள் அவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்துச் செல்வார்கள். போரில் வீரர்கள் எடுத்துச்செல்லும் விலைமதிப்புடைய பொருட்களைப்போல அவர்கள் இருப்பார்கள். ஏனென்றால் என்னுடைய ஜனங்களாகிய இவர்கள் நான் தவறென்று சொன்னவற்றைச் செய்தார்கள். இவர்களின் முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதலாகவே எனக்குக் கோபமூட்டும்படி செய்து வருகிறார்கள். மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றுவிட்டான். அவன் எருசலேமை ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு இரத்தத்தாலேயே நிரப்பினான். இப்பாவங்கள் எல்லாம் யூதாவிலுள்ள ஜனங்களை இன்னும் பாவம் செய்ய சேர்க்கையாக இருந்தது. கர்த்தர் தவறென்று சொன்னதை யூதர்கள் செய்வதற்கு மனாசே காரணமானான்.’” மனாசே செய்த மற்ற அனைத்து செயல்களும் அவன் செய்த பாவங்கள் உட்பட யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. மனாசே மரித்ததும், தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனை வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர். அத்தோட்டத்தின் பெயர் “ஊசா தோட்டம்.” மனாசேயின் குமாரனான ஆமோன் புதிய ராஜா ஆனான். ஆமோன் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் மெகல்லேமேத். இவள் யோத்பா ஊரானாகிய ஆருத்சியின் குமாரத்தி. இவனும் தன் தந்தை மனாசேயைப் போல், கர்த்தருக்கு வேண்டாததையே செய்துவந்தான். அவன் தன் தந்தையைப் போலவே வாழ்ந்தான். தன் தந்தை செய்த விக்கிரகங்களையே தொழுதுகொண்டான். இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான். ஆமோனின் வேலைக்காரர்கள் இவனுக்கெதிராகச் சதி செய்து இவனை வீட்டிலேயே கொன்றுவிட்டனர். பொது ஜனங்களோ ராஜா ஆமோனைக் கொன்றவர்களைக் கொன்றனர். பிறகு ஜனங்கள் இவனது குமாரனான யோசியா என்பவனை ராஜாவாக்கினார்கள். ஆமோன் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. ஆமோன் ஊசா தோட்டத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். ஆமோனின் குமாரனான யோசியா என்பவன் புதிய ராஜாவானான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 21:10-26