2 இராஜாக்கள் 21:10-26

2 இராஜாக்கள் 21:10-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது. யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி, எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன். அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். தங்கள் பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போவார்கள் என்றார். கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான். மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான். ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத். அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு, கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான். ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள். அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள். ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.

2 இராஜாக்கள் 21:10-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா இறைவாக்கினரான தமது பணியாட்கள் மூலம் சொன்னதாவது: “யூதாவின் அரசனாகிய மனாசே இந்த அருவருக்கத்தக்க பாவங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன் இருந்த எமோரியரைப் பார்க்கிலும் கூடுதலான கொடுமைகளைச் செய்து, தன்னுடைய விக்கிரகங்களினால் யூதாவைப் பாவத்துக்குள் வழிநடத்தினான். ஆகையினால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளும் அதிரும்படியாக யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் ஒரு பெரிய அழிவைக் கொண்டுவரப் போகிறேன் என்று கூறுகிறார். சமாரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அளவு நூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராய் பயன்படுத்தப்பட்ட தூக்கு நூலையும் நான் எருசலேமுக்கு மேலாகப் பிடிப்பேன். ஒருவன் ஒரு பாத்திரத்தைத் துடைத்து, அதைத் தலைகீழாக கவிழ்க்கிறதுபோல் நான் எருசலேமைத் துடைத்து அழித்துவிடுவேன். நான் என் உரிமைச்சொத்திலிருந்து மீதியாயிருப்பவர்களை கைவிட்டு, அவர்களை அவர்களுடைய பகைவர்களின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் தங்களுடைய பகைவர்கள் எல்லோராலும் கொள்ளையிடப்பட்டு சூறையாடப்படுவார்கள். ஏனெனில், அவர்களுடைய முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இன்றுவரை என்னுடைய பார்வையில் தீமையானவற்றையே செய்து எனக்குக் கோபமூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.” மேலும் மனாசே எருசலேமை ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் அதிக குற்றமில்லாத இரத்தம் சிந்தி நிரப்பினான். அத்துடன் யெகோவாவின் பார்வையில் தான் செய்த பாவத்தோடு, யூதாவையும் பாவம் செய்யப்பண்ணி அவர்களையும் தீமையானவற்றைச் செய்யப் பண்ணினான். மனாசேயின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய பாவங்கள் உட்பட அவன் செய்த யாவும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. மனாசே தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் அரண்மனைத் தோட்டமாகிய ஊசாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகனான ஆமோன் அரசனானான். ஆமோன் அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் யோத்பா பட்டணத்தைச் சேர்ந்த ஆரூத்சின் மகள் மெசுல்லேமேத் என்பவள். இவனும் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். தன் தகப்பனுடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவன் வணங்கிய விக்கிரகங்களையே வணங்கினான். தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டதோடு, யெகோவாவின் வழிகளிலும் அவன் நடக்கவில்லை. ஆமோனின் அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, அரசனை அவனுடைய அரண்மனையில் கொலைசெய்தார்கள். அதன்பின் அந்த நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராகச் சதிசெய்த எல்லோரையும் கொலைசெய்து, அவனுடைய இடத்தில் அவனுடைய மகன் யோசியாவை அரசனாக்கினார்கள். ஆமோனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இவன் ஊசாவின் தோட்டத்தில் தன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோசியா அரசனானான்.

2 இராஜாக்கள் 21:10-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகையால் யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு உரைத்தது: யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும், யூதாவின்மேலும் வரச்செய்து, எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தட்டைத் துடைத்து, பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன். அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, என்னைக் கோபப்படுத்தி வந்ததால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். தங்கள் பகைஞர்களுக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாகப் போவார்கள் என்றார். யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவம்செய்யவைத்த அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நான்கு மூலைகள்வரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாக, குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான். மனாசேயின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மனாசே இறந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரண்மனைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆமோன் ராஜாவானான். ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் மகளான அவனுடைய தாயின் பெயர் மெசுல்லேமேத். அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த அருவருப்பான சிலைகளை வணங்கி அவைகளைப் பணிந்துகொண்டு, யெகோவாவின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டான். ஆமோனின் ஊழியக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, ராஜாவை அவன் அரண்மனையிலே கொன்றுபோட்டார்கள். அதினால் தேசத்து மக்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள். ஆமோன் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் இடத்திலே அவனுடைய மகனாகிய யோசியா ராஜாவானான்.

2 இராஜாக்கள் 21:10-26 பரிசுத்த பைபிள் (TAERV)

தனது ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட செய்தியை கர்த்தர் சொல்லச்செய்தார்: “யூத ராஜாவாகிய மனாசேயின் செயல்கள் வெறுக்கத்தக்கவை (மிக அருவருப்பானவை) இவன் இவனுக்கு முன்பு செய்த எமோரியர்களைவிட கெட்ட செயல்களைச் செய்கிறான். தனது விக்கிரகங்கள் மூலம் யூதர்களையும் பாவத்துக்குள்ளாக்குகிறான். எனவே இஸ்ரவேலர்களின் கர்த்தர், ‘பார்! நான் எருசலேமிற்கும் யூதாவிற்கும் எதிராகப் பெருந்துன்பத்தைத் தருவேன். இதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். எனவே எருசலேமின் மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன். ஒருவன் ஒரு தட்டை கழுவி துடைத்து கவிழ்த்து வைப்பது போன்று எருசலேமைச் செய்வேன். இங்கே இன்னும் எனக்கு வேண்டிய சிலர் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விட்டுவிடுவேன். மற்றவர்களைப் பகைவர்களிடம் ஒப்படைப்பேன். பகைவர்கள் அவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்துச் செல்வார்கள். போரில் வீரர்கள் எடுத்துச்செல்லும் விலைமதிப்புடைய பொருட்களைப்போல அவர்கள் இருப்பார்கள். ஏனென்றால் என்னுடைய ஜனங்களாகிய இவர்கள் நான் தவறென்று சொன்னவற்றைச் செய்தார்கள். இவர்களின் முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதலாகவே எனக்குக் கோபமூட்டும்படி செய்து வருகிறார்கள். மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றுவிட்டான். அவன் எருசலேமை ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு இரத்தத்தாலேயே நிரப்பினான். இப்பாவங்கள் எல்லாம் யூதாவிலுள்ள ஜனங்களை இன்னும் பாவம் செய்ய சேர்க்கையாக இருந்தது. கர்த்தர் தவறென்று சொன்னதை யூதர்கள் செய்வதற்கு மனாசே காரணமானான்.’” மனாசே செய்த மற்ற அனைத்து செயல்களும் அவன் செய்த பாவங்கள் உட்பட யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. மனாசே மரித்ததும், தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனை வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர். அத்தோட்டத்தின் பெயர் “ஊசா தோட்டம்.” மனாசேயின் குமாரனான ஆமோன் புதிய ராஜா ஆனான். ஆமோன் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் மெகல்லேமேத். இவள் யோத்பா ஊரானாகிய ஆருத்சியின் குமாரத்தி. இவனும் தன் தந்தை மனாசேயைப் போல், கர்த்தருக்கு வேண்டாததையே செய்துவந்தான். அவன் தன் தந்தையைப் போலவே வாழ்ந்தான். தன் தந்தை செய்த விக்கிரகங்களையே தொழுதுகொண்டான். இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான். ஆமோனின் வேலைக்காரர்கள் இவனுக்கெதிராகச் சதி செய்து இவனை வீட்டிலேயே கொன்றுவிட்டனர். பொது ஜனங்களோ ராஜா ஆமோனைக் கொன்றவர்களைக் கொன்றனர். பிறகு ஜனங்கள் இவனது குமாரனான யோசியா என்பவனை ராஜாவாக்கினார்கள். ஆமோன் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. ஆமோன் ஊசா தோட்டத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். ஆமோனின் குமாரனான யோசியா என்பவன் புதிய ராஜாவானான்.