ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 8:1-6

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 8:1-6 TAERV

எலிசா தன்னால் உயிர்தரப்பட்ட பிள்ளையின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன், “நீயும் உனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டிற்குப் போகவேண்டும். ஏனென்றால் கர்த்தர் இங்கு பஞ்ச காலத்தை உருவாக்க தீர்மானித்துள்ளார். இந்நாட்டில் இப்பஞ்சம் ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்” என்றான். எனவே, அப்பெண் தேவமனிதன் சொன்னது போலவே நடந்துகொண்டாள். பெலிஸ்திய நாட்டில் ஏழு ஆண்டுகள் வசிப்பதற்கு அவள் தன் குடும்பத்தோடு சென்றாள். ஏழு ஆண்டுகள் முடிந்ததும் அவள் பெலிஸ்தியர்களின் நிலத்திலிருந்து திரும்பினாள். அவள் ராஜாவோடு பேசுவதற்குச் சென்றாள். தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்காக முறையிட்டாள். ராஜா தேவமனிதனுடைய வேலைக்காரனான கேயாசியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எலிசாவின் வேலைக்காரனிடம், “எலிசா செய்த அருஞ்செயல்களையெல்லாம் கூறு” எனக்கேட்டான். கேயாசி, மரித்துப்போன குழந்தைக்கு எலிசா உயிர் கொடுத்ததைப்பற்றிச் சொன்னான். அப்போது அந்தப் பெண் அங்கு வந்து, தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப்பெற உதவவேண்டும் என்று ராஜாவிடம் வேண்டினாள். அவளைக் கண்டதும் கேயாசி, “எனது ஆண்டவனாகிய ஆண்டவனே! இவள் தான் அந்தப்பெண்! இந்தப் பையனுக்குத்தான் எலிசா உயிர்கொடுத்தான்!” என்று கூறினான். ராஜா அவளது விருப்பத்தை விசாரிக்க அவளும் விளக்கிச் சொன்னாள். பிறகு ராஜா ஒரு அதிகாரியை அவளுக்கு உதவுமாறு நியமித்தான். அவனிடம், “இவளுக்குரியவற்றையெல்லாம் இவள் பெறுமாறு செய். இவள் இந்த நாட்டைவிட்டு போன நாள் முதல் இன்றுவரை இவள் நிலத்தில் விளைந்த தானியத்தையும் இவள் பெறுமாறு செய்” என்றான்.