2 இராஜாக்கள் 8:1-6

2 இராஜாக்கள் 8:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழு வருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான். அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில்போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள். ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள். அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான். செத்துப்போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன்தான் என்றான். ராஜா அந்த ஸ்திரீயைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரித்துச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண்டானது எல்லாவற்றையும், அவள் தேசத்தை விட்டுப்போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய் என்றான்.

2 இராஜாக்கள் 8:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எலிசா தான் உயிரோடு எழுப்பின பையனின் தாயிடம், “நீ உன் குடும்பத்தோடு இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, வாழக்கூடிய வேரிடத்தில் போய்த் தங்கியிரு. யெகோவா இஸ்ரயேல் நாட்டில் ஒரு பஞ்சத்தை வரச்செய்வார். அது ஏழு வருடங்களுக்கு நீடித்திருக்கும்” என்று சொல்லியிருந்தான். இறைவனுடைய மனிதன் கூறியபடியே செய்ய அவள் ஆயத்தப்பட்டாள். அவளும், அவளுடைய குடும்பமும், பெலிஸ்தியருடைய நாட்டுக்குப் போய் அங்கே ஏழு வருடங்கள் தங்கியிருந்தார்கள். குறிப்பிட்ட அந்த ஏழு வருடங்கள் முடிந்தபின் பெலிஸ்தியருடைய நாட்டிலிருந்து அவள் திரும்பிவந்து தன் வீட்டையும், நிலத்தையும் மீட்டுக்கொள்வதற்காக அரசனுடன் முறையிடும்படிச் சென்றாள். இந்த நேரத்தில் அரசன் இறைவனின் மனிதனுடைய வேலைக்காரனான கேயாசியிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் கேயாசியைப் பார்த்து, “எலிசா செய்த எல்லா மகிமையான காரியங்களையும் எனக்குச் சொல்லு” என்று கேட்டான். அப்பொழுது கேயாசி, இறந்த பையனை எலிசா எப்படி திரும்பவும் உயிர்ப்பித்தார் என்பதைக் கூறிக்கொண்டிருந்த அதேவேளையில், இறந்த பையனின் தாயே தன் வீட்டையும், நிலத்தையும் மீட்டுக்கொள்வதற்கு முறையிடும்படி வந்தாள். அப்பொழுது கேயாசி, “என் தலைவனாகிய அரசனே, இவள் தான் நான் சொன்ன பெண். இவளுடைய மகனைத்தான் எலிசா உயிர்ப்பித்தான்” என்றான். அரசன் அதைப்பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்க அவள் தன் கதையைக் கூறினாள். அப்பொழுது அரசன் தன் அதிகாரிகளில் ஒருவனிடம், “இவள் இந்த நாட்டைவிட்டுச் சென்றநாளிலிருந்து, இன்றுவரை அவளுடைய விளைநிலத்தின் வருமானம் உட்பட, அவளுடைய உடைமைகள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டான்.

2 இராஜாக்கள் 8:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எலிசா தான் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயை நோக்கி: நீ உன் குடும்பத்தாரோடு எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாவது போய் தங்கியிரு; யெகோவா பஞ்சத்தை வரச்செய்வார்; அது ஏழுவருடங்கள் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான். அந்தப் பெண் எழுந்து, தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தையின்படியே செய்து, தன் குடும்பத்தாரோடுகூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், ஏழுவருடங்கள் குடியிருந்தாள். ஏழுவருடங்கள் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தைவிட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடுவதற்காகப் போனாள். அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான். இறந்துபோனவனை உயிரோடு எழுப்பினார் என்பதை அவன் ராஜாவிற்குச் சொல்லுகிறபோது, இதோ, அவன் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவிடம் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த பெண்; எலிசா உயிரோடு எழுப்பின இவளுடைய மகன் இவன்தான் என்றான். ராஜா அந்த பெண்ணைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரமாகச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவளுக்குரிய எல்லாவற்றையும், அவள் தேசத்தைவிட்டுப் போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய் என்றான்.

2 இராஜாக்கள் 8:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

எலிசா தன்னால் உயிர்தரப்பட்ட பிள்ளையின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன், “நீயும் உனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டிற்குப் போகவேண்டும். ஏனென்றால் கர்த்தர் இங்கு பஞ்ச காலத்தை உருவாக்க தீர்மானித்துள்ளார். இந்நாட்டில் இப்பஞ்சம் ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்” என்றான். எனவே, அப்பெண் தேவமனிதன் சொன்னது போலவே நடந்துகொண்டாள். பெலிஸ்திய நாட்டில் ஏழு ஆண்டுகள் வசிப்பதற்கு அவள் தன் குடும்பத்தோடு சென்றாள். ஏழு ஆண்டுகள் முடிந்ததும் அவள் பெலிஸ்தியர்களின் நிலத்திலிருந்து திரும்பினாள். அவள் ராஜாவோடு பேசுவதற்குச் சென்றாள். தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்காக முறையிட்டாள். ராஜா தேவமனிதனுடைய வேலைக்காரனான கேயாசியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எலிசாவின் வேலைக்காரனிடம், “எலிசா செய்த அருஞ்செயல்களையெல்லாம் கூறு” எனக்கேட்டான். கேயாசி, மரித்துப்போன குழந்தைக்கு எலிசா உயிர் கொடுத்ததைப்பற்றிச் சொன்னான். அப்போது அந்தப் பெண் அங்கு வந்து, தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப்பெற உதவவேண்டும் என்று ராஜாவிடம் வேண்டினாள். அவளைக் கண்டதும் கேயாசி, “எனது ஆண்டவனாகிய ஆண்டவனே! இவள் தான் அந்தப்பெண்! இந்தப் பையனுக்குத்தான் எலிசா உயிர்கொடுத்தான்!” என்று கூறினான். ராஜா அவளது விருப்பத்தை விசாரிக்க அவளும் விளக்கிச் சொன்னாள். பிறகு ராஜா ஒரு அதிகாரியை அவளுக்கு உதவுமாறு நியமித்தான். அவனிடம், “இவளுக்குரியவற்றையெல்லாம் இவள் பெறுமாறு செய். இவள் இந்த நாட்டைவிட்டு போன நாள் முதல் இன்றுவரை இவள் நிலத்தில் விளைந்த தானியத்தையும் இவள் பெறுமாறு செய்” என்றான்.