தானியேலின் புத்தகம் 2:14-33

தானியேலின் புத்தகம் 2:14-33 TAERV

ராஜாவின் காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான். தானியேல் ஆரியோகுவிடம்: “ராஜா எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான். பிறகு ஆரியோகு ராஜாவின் கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான். தானியேல் இச்செய்தியை அறிந்ததும் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் ராஜாவிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் ராஜாவின் கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான். பின்னர் தானியேல் தனது வீட்டிற்குப் போனான். அவன் தனது நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரிடம் எல்லாவற்றையும் சொன்னான். தானியேல் அவனது நண்பர்களிடம் பரலோகத் தேவனிடம் ஜெபிக்குமாறு வேண்டினான். தானியேல் அவர்களிடம் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள உதவ கருணைகாட்டுமாறு தேவனிடம் விண்ணப்பிக்கும்படி வேண்டினான். இதனால் பாபிலோனிலுள்ள ஞானிகளோடு தானியேலும், அவனது நண்பர்களும் கொல்லப்படாமல் இருப்பார்கள். இரவில், தேவன் தானியேலுக்குத் தரிசனத்தின் மூலம் இரகசியத்தை விளக்கினார். பின்னர் தானியேல் பரலோகத்தின் தேவனைப் புகழ்ந்து போற்றினான். தானியேல், “என்றென்றும் தேவனுடைய நாமத்தைப் போற்றுங்கள். அதிகாரமும் ஞானமும் அவரோடுள்ளன. அவர் காலத்தையும் பருவத்தையும் மாற்றுகிறார். அவர் ராஜாக்களை மாற்றுகிறார். அவர் ராஜாக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார். அதோடு ராஜாக்களின் அதிகாரத்தை எடுத்தும்விடுகிறார். அவர் ஜனங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். எனவே அவர்கள் ஞானம் பெறுகின்றனர். அவர் ஜனங்கள் பலவற்றைக் கற்று ஞானிகளாக அனுமதிக்கிறார். அவர் புரிந்துகொள்வதற்குக் கடினமான இரகசியங்களைத் தெரிந்திருக்கிறார். அவரிடம் ஒளி வாழ்கிறது. எனவே அவருக்கு இருட்டிலும் இரகசியமான இடத்திலும் இருப்பது தெரிகிறது. என் முற்பிதாக்களின் தேவனே நான் நன்றி சொல்லி உம்மைப் போற்றுகிறேன். நீர் எனக்கு ஞானமும் பலமும் கொடுத்தீர். நாங்கள் கேட்டவற்றை நீர் சொன்னீர். நீர் ராஜாவின் கனவைப் பற்றி எங்களுக்குச் சொன்னீர்” என்றான். பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை ராஜாவிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான். எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக ராஜாவிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு ராஜாவிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் ராஜாவிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான். ராஜா தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), “உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?” என்று கேட்டான். தானியேல்: “ராஜாவான நேபுகாத்நேச்சாரே, எந்த ஞானிகளாலும், எந்த ஜோசியர்களாலும், எந்த கல்தேயர்களாலும் ராஜாவின் இரகசியம் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. ஆனால் பரலோகத்தில் இரகசியங்களைப் பற்றிச் சொல்ல ஒரு தேவன் இருக்கிறார். தேவன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதைக் காட்ட கனவுகளைக் கொடுத்தார். இதுதான் உமது கனவு. உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நீர் பார்த்தவை இவைதான். ராஜாவே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார். தேவன் என்னிடம் இந்த இரகசியத்தைச் சொன்னார். ஏன்? நான் மற்றவர்களைவிட ஞானம் கொண்டவன் என்பதற்காக அல்ல. ராஜாவான நீர் அந்த கனவின் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் என்னிடம் சொன்னார். அதே வழியில், உம் மனதில் ஓடிய நினைவுகளையும் நீர் புரிந்துகொள்வீர். “ராஜாவே, உமது கனவில் உமக்கு முன்னால் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அச்சிலை மிகப் பெரியதும், பளபளப்பானதும், மனதைக் கிளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தது. அது ஒருவனின் கண்களை வியப்பால் விரியச்செய்யத்தக்கது. அச்சிலையின் தலையானது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் மார்பும், கைகளும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் வயிறும், கால்களின் மேல்பகுதியும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் கால்களின் கீழ்ப்பகுதி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது.