தானியேல் 2:14-33
தானியேல் 2:14-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பாபிலோனின் ஞானிகளைக் கொலை செய்யும்படி, அரச காவல் தளபதியான ஆரியோக் போகையில், தானியேல் அவனுடன் ஞானத்தோடும், சாதுரியத்தோடும் பேசினான். அவன் அரச அதிகாரியிடம், “அரசனால் ஏன் இவ்வளவு கடுமையான ஆணை பிறப்பிக்கப்பட்டது?” எனக் கேட்டான். அப்பொழுது ஆரியோக், காரியத்தை தானியேலுக்கு விளக்கிக் கூறினான். அதனைக் கேட்டதும் தானியேல் அரசனிடம் உள்ளே போய் கனவையும், அதன் விளக்கத்தையும் சொல்லுவதற்கு அவனுக்கு ஒரு காலக்கெடு தரும்படிக் கேட்டான். பின்பு தானியேல் தன் வீட்டுக்குத் திரும்பிவந்து, நடந்தவற்றைத் தன் நண்பர்களான அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோருக்கு விளக்கிக் கூறினான். பாபிலோனின் மற்ற ஞானிகளுடன், தானியேலும் தனது நண்பர்களும் கொலைசெய்யப்படாதிருப்பதற்கு, இந்த மறைபொருளை வெளிப்படுத்தும்படி பரலோகத்தின் இறைவனிடம் இரக்கத்துக்காக மன்றாடுங்கள் என அவர்களைத் தூண்டினான். இரவுவேளையில் ஒரு தரிசனத்தின் மூலமாகத் தானியேலுக்கு அந்த மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் பரலோகத்தின் இறைவனைத் துதித்து, அவன் சொன்னதாவது: “இறைவனின் பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; ஞானமும், வல்லமையும் அவருடையவையே.” காலங்களையும் பருவகாலங்களையும் மாற்றுகிறார் அவரே; அரசர்களை விலக்கி, மாற்று அரசர்களை ஏற்படுத்துகிறவர் அவரே. அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுப்பவர் அவரே. ஆழமானதும் மறைவானதுமானவற்றை வெளிப்படுத்துகிறவர் அவரே; இருளில் உள்ளதை அவர் அறிகிறார், ஒளியும் அவருடன் தங்கியிருக்கிறது. என் முற்பிதாக்களின் இறைவனே, உமக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிக்கிறேன். நீர் எனக்கு ஞானமும், வல்லமையும் தந்திருக்கிறீர். “நாங்கள் உம்மிடம் கேட்டதை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். அரசனின் கனவை நீர் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறீர்.” பாபிலோனின் ஞானிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி, அரசனால் நியமிக்கப்பட்ட ஆரியோகிடம் தானியேல் போய், “நீர் பாபிலோன் ஞானிகளை மரண தண்டனைக்குள்ளாக்க வேண்டாம். என்னை அரசனிடம் அழைத்துச் செல்லும். அரசனுடைய கனவின் விளக்கத்தை நான் அவருக்குச் சொல்வேன் என்றான்.” ஆரியோக் உடனே தானியேலை அரசனிடம் அழைத்துச்சென்று, “உமது கனவுக்கான விளக்கத்தைச் சொல்லக்கூடிய ஒருவனை, யூதா நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் கண்டுபிடித்தேன் என்றான்.” அப்பொழுது அரசன், பெல்தெஷாத்சார் என்று அழைக்கப்பட்ட தானியேலிடம், “எனது கனவில் எதைக் கண்டேன் என்று சொல்லவும், அதன் விளக்கத்தைக் கூறவும் உன்னால் முடியுமா?” என்று கேட்டான். அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசர் வெளிப்படுத்துபடி கேட்டிருக்கும் இந்த மறைபொருளை அரசருக்கு விளக்கிக்கூற எந்த ஞானியாலோ, மந்திரவாதியாலோ, மாந்திரீகனாலோ, குறிசொல்கிறவர்களாலோ முடியாது. ஆனால் அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகிற ஒரு இறைவன் பரலோகத்தில் இருக்கிறார். வரப்போகும் நாட்களில் நிகழப்போவதை அவரே நேபுகாத்நேச்சார் அரசருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நீர் படுக்கையில் படுத்திருந்தபோது, நீர் கண்ட கனவும், உமது மனதைக் கடந்துசென்ற தரிசனங்களும் இவையே: “அரசே, நீர் படுத்திருக்கையில் வரப்போகும் காரியங்களை உமது மனம் சிந்திக்கத் தொடங்கியது. அந்நேரத்தில் மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர், இனி நிகழப்போவது என்ன என்பதை உமக்குக் காண்பித்தார். என்னைப் பொறுத்தவரையில் வாழ்கின்ற மற்ற மனிதர்களைவிட நான் மிகுந்த ஞானமுள்ளவன் என்பதால் எனக்கு இந்தக் கனவின் மறைபொருள் வெளிப்படுத்தப்படவில்லை; அரசராகிய நீர் அதற்குரிய விளக்கத்தை அறிந்துகொள்ளும்படியும், உமது மனதில் கடந்துசென்றவற்றை நீர் விளங்கிக்கொள்ளும்படியுமே இந்த கனவின் மறைபொருள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. “அரசே, நீர் பார்த்தபோது ஒரு பெரிய சிலை உமக்கு முன்பாக நிற்பதைக் கண்டீர். அது மிகப்பெரியதாயும், மினுங்கிக்கொண்டும் இருந்தது. அது தோற்றத்தில் பயங்கரமானதாயும் இருந்தது. அச்சிலையின் தலை சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது. மார்பும், புயங்களும் வெள்ளியினாலும், வயிறும் தொடைகளும், வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. அதன் கால்கள் இரும்பினாலும், பாதங்களின் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி சுடப்பட்ட களிமண்ணினாலும் செய்யப்பட்டிருப்பதையும் கண்டீர்.
தானியேல் 2:14-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவின் மெய்க்காப்பாளர்களுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாகப் பேசி: இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாக பிறப்பிப்பதற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் அதிபதியாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான். தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான். பின்பு தானியேல் தன் வீட்டிற்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான். பின்பு இரவுநேரத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினான். பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்ததினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான். பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின்முன் வேகமாக அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான். ராஜா பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட கனவுகளையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கமுடியுமா என்று கேட்டான். தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவிற்குத் தெரிவிக்க ஞானிகளாலும், சோதிடராலும், விண் ஆராய்ச்சியாளர்களாலும், குறிசொல்லுகிறவர்களாலும் முடியாது. மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய கனவும் உமது படுக்கையின்மேல் உம்முடைய எண்ணத்தில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கும்போது, இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பினது; அப்பொழுது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லோரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவிற்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது. ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகவும் பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு முன்னே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும், புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும், தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தது.
தானியேல் 2:14-33 பரிசுத்த பைபிள் (TAERV)
ராஜாவின் காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான். தானியேல் ஆரியோகுவிடம்: “ராஜா எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான். பிறகு ஆரியோகு ராஜாவின் கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான். தானியேல் இச்செய்தியை அறிந்ததும் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் ராஜாவிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் ராஜாவின் கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான். பின்னர் தானியேல் தனது வீட்டிற்குப் போனான். அவன் தனது நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரிடம் எல்லாவற்றையும் சொன்னான். தானியேல் அவனது நண்பர்களிடம் பரலோகத் தேவனிடம் ஜெபிக்குமாறு வேண்டினான். தானியேல் அவர்களிடம் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள உதவ கருணைகாட்டுமாறு தேவனிடம் விண்ணப்பிக்கும்படி வேண்டினான். இதனால் பாபிலோனிலுள்ள ஞானிகளோடு தானியேலும், அவனது நண்பர்களும் கொல்லப்படாமல் இருப்பார்கள். இரவில், தேவன் தானியேலுக்குத் தரிசனத்தின் மூலம் இரகசியத்தை விளக்கினார். பின்னர் தானியேல் பரலோகத்தின் தேவனைப் புகழ்ந்து போற்றினான். தானியேல், “என்றென்றும் தேவனுடைய நாமத்தைப் போற்றுங்கள். அதிகாரமும் ஞானமும் அவரோடுள்ளன. அவர் காலத்தையும் பருவத்தையும் மாற்றுகிறார். அவர் ராஜாக்களை மாற்றுகிறார். அவர் ராஜாக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார். அதோடு ராஜாக்களின் அதிகாரத்தை எடுத்தும்விடுகிறார். அவர் ஜனங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். எனவே அவர்கள் ஞானம் பெறுகின்றனர். அவர் ஜனங்கள் பலவற்றைக் கற்று ஞானிகளாக அனுமதிக்கிறார். அவர் புரிந்துகொள்வதற்குக் கடினமான இரகசியங்களைத் தெரிந்திருக்கிறார். அவரிடம் ஒளி வாழ்கிறது. எனவே அவருக்கு இருட்டிலும் இரகசியமான இடத்திலும் இருப்பது தெரிகிறது. என் முற்பிதாக்களின் தேவனே நான் நன்றி சொல்லி உம்மைப் போற்றுகிறேன். நீர் எனக்கு ஞானமும் பலமும் கொடுத்தீர். நாங்கள் கேட்டவற்றை நீர் சொன்னீர். நீர் ராஜாவின் கனவைப் பற்றி எங்களுக்குச் சொன்னீர்” என்றான். பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை ராஜாவிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான். எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக ராஜாவிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு ராஜாவிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் ராஜாவிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான். ராஜா தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), “உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?” என்று கேட்டான். தானியேல்: “ராஜாவான நேபுகாத்நேச்சாரே, எந்த ஞானிகளாலும், எந்த ஜோசியர்களாலும், எந்த கல்தேயர்களாலும் ராஜாவின் இரகசியம் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. ஆனால் பரலோகத்தில் இரகசியங்களைப் பற்றிச் சொல்ல ஒரு தேவன் இருக்கிறார். தேவன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதைக் காட்ட கனவுகளைக் கொடுத்தார். இதுதான் உமது கனவு. உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நீர் பார்த்தவை இவைதான். ராஜாவே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார். தேவன் என்னிடம் இந்த இரகசியத்தைச் சொன்னார். ஏன்? நான் மற்றவர்களைவிட ஞானம் கொண்டவன் என்பதற்காக அல்ல. ராஜாவான நீர் அந்த கனவின் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் என்னிடம் சொன்னார். அதே வழியில், உம் மனதில் ஓடிய நினைவுகளையும் நீர் புரிந்துகொள்வீர். “ராஜாவே, உமது கனவில் உமக்கு முன்னால் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அச்சிலை மிகப் பெரியதும், பளபளப்பானதும், மனதைக் கிளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தது. அது ஒருவனின் கண்களை வியப்பால் விரியச்செய்யத்தக்கது. அச்சிலையின் தலையானது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் மார்பும், கைகளும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் வயிறும், கால்களின் மேல்பகுதியும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் கால்களின் கீழ்ப்பகுதி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது.
தானியேல் 2:14-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி: இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான். தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான். பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான். பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான். பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான். பின்பு தானியேல் பாபிலோனின்ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான். ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனங்களையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான். தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது. ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.