உபாகமம் 32:1-14

உபாகமம் 32:1-14 TAERV

“வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன். பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள். எனது போதனைகள் மழையைப் போன்று வரும், பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும், மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும், பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும். நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்! “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை! ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை! தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர். அவர் நீதியும் செம்மையுமானவர். நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது. நீங்கள் கோணலான பொய்யர்கள். உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை! நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள். கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார். அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார். “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள். உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான். உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள். உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார். இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார். கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு, யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம். “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார். அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம். கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார். அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார். ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும். பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும். அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும், அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும். கர்த்தர் இதனைப் போன்றவர். கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார். அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை. கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார். யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான். கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார். கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார். அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும், சிறந்த கோதுமையையும் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.