உபாகமம் 32:1-14

உபாகமம் 32:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன். பூமியே என் வாயின் வார்த்தைகளைக் கேள். என் போதனை மழைபோலப் பெய்யட்டும். என் வார்த்தைகள் பனிபோல் இறங்கட்டும், அவை பசும்புல்மேல் மழைத்தூறல் போலவும், இளஞ்செடிகளின் மேல் பெருமழைபோலவும் பெய்யட்டும். நான் யெகோவாவின் பெயரை அறிவிப்பேன். எங்கள் இறைவனின் மகத்துவத்தைத் துதியுங்கள்! அவரே கற்பாறை, அவருடைய செயல்கள் முழு நிறைவானவை. அவரது வழிகளெல்லாம் நீதியானவை. அவர் உண்மையுள்ள இறைவன். அவர் அநியாயம் செய்வதில்லை. அவர் நேர்மையும், நீதியுமானவர். இஸ்ரயேலரோ அவர்முன் இழிவானவற்றைச் செய்தார்கள். அதனால் அவருடைய பிள்ளைகளாய் இராமல், கபடமும் வஞ்சகமும் உள்ள சந்ததியாய் மாறி வெட்கத்திற்குள்ளானார்கள். மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே! நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன் செய்வது இவ்விதம் தானோ? உங்களைப் படைத்த தகப்பன் அவரல்லவா? உங்களைப் படைத்து உருவாக்கியவர் அவரல்லவா? பழைய நாட்களை நினைவுகூருங்கள்; கடந்துபோன தலைமுறைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தகப்பனிடம் கேளுங்கள் அவர் உங்களுக்குச் சொல்வார், உங்கள் சபைத்தலைவர்களிடம் கேளுங்கள், அவர்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவார்கள். மகா உன்னதமானவர் நாடுகளுக்கு உரிமைச்சொத்தைப் பங்கிட்டபோது, எல்லா மனுக்குலத்தையும் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கையின்படியே, மக்கள் கூட்டங்களின் எல்லைகளைத் திட்டமிட்டார். யெகோவாவின் மக்களே அவரின் பங்கு, யாக்கோபே அவருடைய உரிமைச்சொத்து. அவர் அவர்களைப் பாலைவன நாட்டிலே கண்டெடுத்தார்; அதுவோ வறண்டதும், நரி ஊளையிடும் பாழ்நிலமுமாய் இருந்தது. அவர் அவர்களைப் பாதுகாத்துப் பராமரித்தார். அவர் அவர்களைத் தமது கண்மணிபோல் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளுக்கு மேலாக அசைவாடி, தன் சிறகுகளை விரித்து அவைகளை ஏந்திக்கொண்டு, தன் செட்டைகளின்மேல் சுமந்து செல்வதுபோல, யெகோவா ஒருவரே அவர்களை வழிநடத்தினர், அவர்களுடன் வேறு அந்நிய தெய்வம் இருக்கவில்லை. அவர் அவர்களை நிலத்தின் மேடுகளில் ஏறி நடக்கச் செய்தார். வயலின் பலன்களினால் அவர்களுக்கு உணவு கொடுத்தார். கற்பாறையில் இருந்து எடுத்த தேனினாலும், வைரப்பாறையிலிருந்து வழியும் எண்ணெயினாலும் அவர்களுக்கு ஊட்டமளித்தார். பசுக்களின் தயிர், ஆடுகளின் பால், கொழுத்த செம்மறியாட்டுக் குட்டிகள், வெள்ளாடுகள், பாசானில் தெரிந்தெடுத்த செம்மறியாட்டுக் கடாக்கள், சிறந்த கோதுமைத்தானியம் ஆகியவற்றாலும் ஊட்டமளித்தார். நுரைக்கும் இரத்தம் போன்ற திராட்சைப்பழத்தின் ரசத்தையும் குடித்தார்கள்.

உபாகமம் 32:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். யெகோவாவுடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். “அவர் கன்மலை; அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? ஆரம்பநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார். யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு; யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள். “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை. பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் சாப்பிடும்படி செய்தார். பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய்.

உபாகமம் 32:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

“வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன். பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள். எனது போதனைகள் மழையைப் போன்று வரும், பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும், மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும், பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும். நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்! “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை! ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை! தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர். அவர் நீதியும் செம்மையுமானவர். நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது. நீங்கள் கோணலான பொய்யர்கள். உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை! நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள். கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார். அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார். “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள். உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான். உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள். உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார். இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார். கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு, யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம். “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார். அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம். கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார். அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார். ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும். பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும். அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும், அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும். கர்த்தர் இதனைப் போன்றவர். கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார். அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை. கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார். யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான். கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார். கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார். அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும், சிறந்த கோதுமையையும் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.

உபாகமம் 32:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார், விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார். கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார். பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.