பிரசங்கி 3:16-22

பிரசங்கி 3:16-22 TAERV

நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில் பார்த்தேன். வழக்குமன்றமானது நன்மையாலும் நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது. எனவே நான் எனக்குள்ளே: “தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார். ஜனங்களின் செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தை தேவன் திட்டமிட்டுள்ளார். தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார்” என்கிறேன். ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் எனக்குள்ளே, “ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப்போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார்” என்று சொல்லிக்கொண்டேன். மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர் மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுபோல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா? மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்றுபோலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன. ஒரு மனிதனின் ஆவிக்கு என்ன நிகழும் என்பதை யார் அறிவார்? மனிதனின் ஆவி மேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழே பூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார்? எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற்செயல் என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான் என்று நான் கண்டுகொண்டேன். அதையே அவன் அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்ல யாராலும் முடியாது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரசங்கி 3:16-22