பிரசங்கி 3:16-22

பிரசங்கி 3:16-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது. சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன். மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன். மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

பிரசங்கி 3:16-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சூரியனின் கீழே இன்னுமொன்றை நான் கண்டேன்: நியாயந்தீர்க்கும் இடத்தில் கொடுமை இருந்தது, நீதி வழங்கும் இடத்திலே கொடுமை இருந்தது. நீதியுள்ளவர்களையும், கொடியவர்களையும் இறைவன் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார். ஏனெனில் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு காலம் உண்டு; ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலம் உண்டு என என் இருதயத்தில் நான் நினைத்துக்கொண்டேன். மனிதர் தாங்களும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளும்படி, இறைவன் அவர்களைச் சோதனைக்கு உட்படுத்துகிறார். இதையும் நான் நினைத்துக்கொண்டேன். மனிதருடைய நியதியைப்போலவே, மிருகங்களுடைய நியதியும் இருக்கிறது. ஒரேவிதமான நியதியே மிருகங்களுக்கும், மனிதனுக்கும் காத்திருக்கிறது. மிருகங்கள் சாவதுபோலவே மனிதரும் சாகிறார்கள். எல்லோருக்கும் ஒரேவிதமான சுவாசமே இருக்கின்றது; இதில் மனிதனுக்கு மிருகத்தைவிட மேன்மை இல்லை. எல்லாம் அர்த்தமற்றதே. எல்லாம் ஒரே இடத்திற்கே போகின்றன; அனைத்தும் தூசியிலிருந்தே வருகின்றன, தூசிக்கே திரும்புகின்றன. மனிதனின் ஆவி மேல்நோக்கி எழும்புகிறதென்றோ, மிருகத்தின் ஆவி பூமிக்குள்ளே கீழ்நோக்கி போகிறதென்றோ யாருக்குத் தெரியும்? ஆகவே தனது வேலையில் சந்தோஷப்படுவதைவிட நலமானது எதுவும் ஒரு மனிதனுக்கு இல்லை என்று நான் கண்டேன். ஏனெனில் அதுவே அவன் பங்கு. அவனுக்குப் பிறகு என்ன நிகழும் என்பதைக் காணும்படி அவனைக் கொண்டுவர யாரால் முடியும்?

பிரசங்கி 3:16-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நீதிமன்றத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிமன்றத்தையும் கண்டேன். அங்கே அநீதி இருந்தது; எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். மனிதர்கள் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனிதர்களுடைய நிலைமையைக்குறித்து என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். மனிதர்களுக்கு சம்பவிப்பது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஒரே மாதிரி நடக்கும்; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; உயிர்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைவிட மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது. உயர ஏறும் மனிதனுடைய ஆவியையும், தாழ பூமியில் இறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன்னுடைய செயல்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நன்மையைத்தவிர, வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவனுடைய பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படி அவனைத் திரும்பிவரச்செய்கிறவன் யார்?

பிரசங்கி 3:16-22 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில் பார்த்தேன். வழக்குமன்றமானது நன்மையாலும் நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது. எனவே நான் எனக்குள்ளே: “தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார். ஜனங்களின் செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தை தேவன் திட்டமிட்டுள்ளார். தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார்” என்கிறேன். ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் எனக்குள்ளே, “ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப்போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார்” என்று சொல்லிக்கொண்டேன். மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர் மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுபோல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா? மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்றுபோலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன. ஒரு மனிதனின் ஆவிக்கு என்ன நிகழும் என்பதை யார் அறிவார்? மனிதனின் ஆவி மேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழே பூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார்? எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற்செயல் என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான் என்று நான் கண்டுகொண்டேன். அதையே அவன் அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்ல யாராலும் முடியாது.