எஸ்தரின் சரித்திரம் 6

6
மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்
1அதே இரவில், ராஜாவால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். (ராஜாக்களது வரலாற்று புத்தகத்தில் ராஜாக்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.) 2வேலைக்காரன் ராஜாவிடம் அதை வாசித்தான். அவன் ராஜா அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் ராஜாவின் வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் ராஜாவைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.
3அதற்கு ராஜா, “என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?” என்ற கேட்டான்.
வேலைக்காரர்கள் ராஜாவிடம், “மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை” என்றனர்.
4அப்போது, ராஜாவின் அரண்மனையில் வெளிப் பகுதியில் ஆமான் நுழைந்தான் அவன் தான் கட்டிய தூக்கு மரத்தில் மொர்தெகாய்யைத் தூக்கில் போடுவதற்காக ராஜாவைக் கேட்க வந்தான். அவன் முற்றத்தில் வரும்போது ராஜா, “இப்போது முற்றத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். 5ராஜாவின் வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள்.
எனவே ராஜா, “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.
6ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனிடம், “ஆமான், ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?” என்று கேள்விக் கேட்டான்.
ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், “என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி ராஜா விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? ராஜா என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்.”
7ஆகையால், ஆமான் ராஜாவுக்கு, “ராஜா பெருமைப்படுத்தவேண்டும் என விரும்புகிறவனுக்கு இதனைச் செய்யும். 8ராஜா அணிகிற உயர்ந்த ஆடையைக் கொண்டுவாருங்கள். ராஜா ஏறிச் செல்கிற குதிரையையும் கொண்டு வாருங்கள். அவர் தலையில் வைக்கிற அரசமுடியையும் கொண்டு வாருங்கள். 9பிறகு அந்த ஆடையையும், குதிரையையும் ராஜாவின் முக்கியமான தலைவனின் கையில் கொடுக்கப்படவேண்டும். ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்து குதிரையின் மேலேற்றி நகர வீதியில் உலா வரும்படி விடவேண்டும். ராஜாவின் முக்கிய தலைவன் அந்த மனிதனை குதிரை மீது நகர வீதியில் அழைத்து வரும்போது, ‘இதுபோலவே ராஜா பெருமைப்படுத்த விரும்புகிறவன் நடத்தப்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்’” என்ற பதில் சொன்னான்.
10ராஜா ஆமானிடம், “வேகமாகப் போ” என கட்டளையிட்டு, “ஆடையையும், குதிரையையும் கொண்டுவா. இதனை நீ சொன்னபடி யூதனான மொர்தெகாய்க்குச் செய். மொர்தெகாய் ராஜாவின் வாசலருகில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிறான். நீ சொன்னபடி எல்லாவற்றையும் செய்” என்றான்.
11எனவே ஆமான் ஆடையையும், குதிரையையும் எடுத்தான். ஆடையை மொர்தெகாய்க்கு அணிவித்தான். பிறகு அவனை குதிரையில் உட்கார வைத்து நகர வீதிகளில் உலாகொண்டுபோனான். ஆமான் மொர்தெகாய் பற்றி, “இதுபோல் தான் ராஜா பெருமைப்படுத்த விரும்புகிற மனிதன் நடத்தப்பட வேண்டும்” என்று அறிவித்தான்.
12பிறகு மொர்தெகாய் ராஜாவின் வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆனால் ஆமான் வீட்டிற்கு விரைவாகப் போனான். அவன் தன் தலையை மூடிக்கொண்டான். ஏனென்றால், அவன் சஞ்சலமும் அவமானமும் அடைந்தான். 13பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.
14இவ்வாறு அவர்கள் ஆமானுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ராஜாவின் பிரதானிகள் ஆமானின் வீட்டிற்கு வந்தார்கள். எஸ்தர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வரும்படி ஆமானை அவர்கள் விரைவுபடுத்தினார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எஸ்தரின் சரித்திரம் 6: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்