யாத்திராகமம் 32:26-35

யாத்திராகமம் 32:26-35 TAERV

எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான். லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது குமாரனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான். மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான். எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர். இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான். ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன். எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.