யாத்திராகமம் 32:26-35
யாத்திராகமம் 32:26-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது மோசே முகாமின் வாசலில் நின்று, “யெகோவாவின் பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வாருங்கள்” என்றான். லேவியர் எல்லோரும் அவனிடம் வந்து சேர்ந்தார்கள். மோசே அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொருவரும் உங்கள் இடுப்பில் ஒரு வாளைக் கட்டிக்கொள்ளுங்கள். முகாமெங்கும் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அங்குமிங்குமாகச் சென்று ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும், நண்பனையும், அயலானையும் கொல்லுங்கள்” என்றான். லேவியர்கள் மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்று மக்களில் மூவாயிரம்பேர்வரை செத்தார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் சொந்த மகன்களுக்கும், சகோதரர்களுக்கும் விரோதமாய் இருந்தபடியால், இன்று நீங்கள் யெகோவாவினுடைய பணிக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யெகோவா இன்றைக்கு உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்” என்றான். மறுநாள் மோசே மக்களிடம், “நீங்கள் பெரிய பாவம் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது நான் யெகோவாவிடம் ஏறிப்போவேன். ஒருவேளை உங்களுடைய பாவத்திற்காக நான் பாவநிவிர்த்தி செய்யலாம்” என்றான். அவ்வாறே மோசே திரும்பவும் யெகோவாவிடம் போய், “இந்த மக்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக தங்கத்தினால் தெய்வங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய பாவத்தை இப்பொழுது மன்னியும்; இல்லாவிட்டால் நீர் எழுதிய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடும்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரையே என் புத்தகத்திலிருந்து அழிப்பேன். இப்பொழுது நீ போய் நான் உனக்கு சொன்ன இடத்துக்கு மக்களை அழைத்துக்கொண்டு போ. இதோ! என் தூதன் உனக்குமுன் செல்வான். ஆனாலும், நான் தண்டிக்கும் காலம் வரும்போது, அவர்கள் பாவத்திற்காக நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார். ஆரோன் செய்து கொடுத்த கன்றுக்குட்டியை வணங்கியதற்காக யெகோவா மக்களைப் பெரும் கொள்ளைநோயினால் வாதித்தார்.
யாத்திராகமம் 32:26-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
முகாமின் வாசலில் நின்று: “யெகோவாவின் பக்கம் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடம் சேரவேண்டும்” என்றான். அப்பொழுது லேவியர்கள் எல்லோரும் அவனிடம் கூடிவந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்றான். லேவியர்கள் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்தநாளில் மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் இறந்தார்கள். “யெகோவா இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன் தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாக இருக்கிறதினால், யெகோவாவுக்கு உங்களைப் பிரதிஷ்டைசெய்யுங்கள்” என்று மோசே சொல்லியிருந்தான். மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான். அப்படியே மோசே யெகோவாவிடத்திற்குத் திரும்பிப்போய்: “ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார். ஆரோன் செய்த கன்றுக்குட்டியை மக்கள் செய்யவைத்ததால் யெகோவா அவர்களை வாதித்தார்.
யாத்திராகமம் 32:26-35 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான். லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது குமாரனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான். மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான். எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர். இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான். ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன். எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.
யாத்திராகமம் 32:26-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள். கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டைபண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான். மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான். அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார். ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.