ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 53:3-10

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 53:3-10 TAERV

ஜனங்கள் அவரைக் கேலி செய்தனர். அவரது நண்பர்கள் விலகினார்கள். அவர் மிகுதியான வலிகொண்ட மனிதராக இருந்தார். அவர் நோயை நன்றாக அறிந்திருந்தார். ஜனங்கள் அவரைப் பார்க்காமல் அசட்டை செய்தனர். நாம் அவரைக் கவனிக்கவில்லை. ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம். ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத் துன்பப்படவே அவர் வேதனையைப் பெற்றார். நமது குற்றங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். நாம் கொண்ட கடனுக்காக நமது தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது காயங்களால் நாம் சுகமடைந்திருக்கிறோம். (மன்னிக்கப்பட்டோம்). ஆனால், இதனைச் செய்தபிறகு நாம் ஆடுகளைப்போல அலைந்துகொண்டிருந்தோம். நம்மில் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் சென்றோம். கர்த்தர் நம் குற்றத்திலிருந்து நம்மை விடுதலை செய்து நமது குற்றங்களை அவர்மீது போட்ட பிறகும் நாம் இதனைச் செய்தோம். அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை. மனிதர்கள் அவரைப் பலவந்தமாகப் பிடித்தனர், அவரை அவர்கள் நேர்மையாக நியாயந்தீர்க்கவில்லை. எவரும் அவரது எதிர்காலக் குடும்பத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் உயிரோடு வாழ்கிறவர்களின் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டார். எனது ஜனங்களின் பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார். அவர் மரித்தார், செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார். அவர் தீயவர்களோடு புதைக்கப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் எப்பொழுதும் பொய் சொன்னதில்லை, இருந்தாலும் இவை அவருக்கு ஏற்பட்டன. அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். எனவே அந்தத் தாசன் தன்னைத்தானே மரிக்க அனுமதித்தார். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 53:3-10