நியாயாதிபதிகளின் புத்தகம் 5:24-31

நியாயாதிபதிகளின் புத்தகம் 5:24-31 TAERV

கேனியனாகிய ஏபேரின் மனைவி யாகேல். அவள் பெண்களெல்லாரிலும் ஆசீர்வதிக்கப்பட்டவள். சிசெரா தண்ணீரைக் கேட்டான். யாகேல் பாலைக் கொடுத்தாள். ராஜனுக்கான கிண்ணத்தில் அவள் பாலாடையைக் கொண்டு வந்தாள். யாகேல் தன் கையில் ஒரு கூடார ஆணியை எடுத்தாள். வேலையாள் பயன்படுத்தும் சுத்தியை அவள் வலதுகையில் பிடித்தாள். பின் சிசெராவின் தலைமீது சுத்தியால் அடித்தாள்! அவன் நெற்றிப் பொட்டின் உள்ளே துளையிட்டாள்! அவன் யாகேலின் பாதங்களினிடையே வீழ்ந்தான். அவன் மடிந்தான். அங்கு கிடந்தான். அவன் அவள் பாதங்களினிடையே வீழ்ந்தான். அவன் மடிந்தான். சிசெரா வீழ்ந்த இடத்திலேயே மடிந்தான். அங்கு மரித்து கிடந்தான்! “சிசெராவின் தாய் ஜன்னலினூடே பார்த்து அழுதாள். சிசெராவின் தாய் திரைச் சீலைகளினூடே பார்த்தாள். ‘ஏன் சிசெராவின் இரதம் தாமதிக்கிறது? அவன் இரத ஒலியை நான் கேளாதது ஏன்?’ என்று புலம்பினாள். “அவளின் புத்திசாலியான வேலைக்காரப் பெண் அவளுக்கு பதில் அளித்தாள். ஆம், பணிப்பெண் அவளுக்குப் பதில் சொன்னாள். ‘அவர்கள் போரில் வென்றிருப்பார்கள். தோற்கடித்த ஜனங்களிடமிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஒவ்வொரு வீரனும் ஓரிரு பெண்களை எடுத்துக்கொள்கிறான். சிசெரா சாயம்தீர்த்த ஆடையைக் கண்டெடுத்தான். அதுவே அவன் முடிவாயிற்று! சிசெரா அழகான ஆடை ஒன்றைக் கண்டெடுத்தான். வெற்றி வேந்தன் சிசெரா தான் அணிவதற்காக இரண்டு ஆடைகளையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.’ “கர்த்தாவே, உமது பகைவர்கள் அனைவரும் இவ்வாறு மடியட்டும். உமது அன்பான ஜனங்கள் உதய சூரியனைப்போல வலிமை பெறட்டும்!”