நியாயாதிபதிகள் 5:24-31

நியாயாதிபதிகள் 5:24-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பெண்களுக்குள்ளே யாகேல் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவள், கூடாரங்களில் வாழும் பெண்களுக்குள் கேனியனான ஏபேரின் மனைவி அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவள். அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான், அவளோ அவனுக்கு பால் கொடுத்தாள்; அவள் உயர்குடியினருக்குரிய கிண்ணத்திலே தயிர் கொண்டுவந்தாள். அவளது கை கூடாரத்தின் முளையையும், வலதுகை தொழிலாளியின் சுத்தியலையும் எட்டி எடுத்தது. அவள் சிசெராவை அடித்தாள், அவனுடைய தலையை நொறுக்கினாள்; அவள் அவனுடைய நெற்றியைக் குத்திச் சிதறடித்தாள். அவள் காலடியில் அவன் சரிந்து விழுந்தான்; அவன் விழுந்து அங்கேயே கிடந்தான். அவளது காலடியில் சரிந்தான், விழுந்தான்; அவன் சரிந்த இடத்திலே விழுந்து செத்தான். “ஜன்னல் வழியே சிசெராவின் தாய் எட்டிப்பார்த்தாள்; ‘ஏன் அவனுடைய இரதம் அங்கே இன்னும் வரவில்லை? அவனுடைய இரதங்களின் ஓட்டம் ஏன் இன்னும் தாமதிக்கிறது?’ என பலகணியின் பின்நின்று புலம்பினாள். அவளுடைய தோழிகளில் ஞானமுள்ளவள் பதிலளித்தாள்; அவளும் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். ‘அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடித்து பங்கிடுகிறார்களோ, ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ பெண்கள், சிசெராவுக்கு கொள்ளையிட்ட பலவர்ண உடைகள், கொள்ளையிட்ட சித்திர வேலைப்பாடுள்ள பலவர்ண உடைகள், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு மிக நுட்பமான சித்திர வேலைப்பாடுள்ள உடைகளையும் கொடுக்க வேண்டாமோ?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். “எனவே யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்கள் இப்படியே அழியட்டும்! உம்மில் அன்புகூருகிறவர்களோ தன் கெம்பீரத்தில் உதிக்கும் சூரியனைப்போல் இருக்கட்டும்.” இதன்பின்பு நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாய் இருந்தது.

நியாயாதிபதிகள் 5:24-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே. தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள். தன்னுடைய கையால் ஆணியையும், தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவனுடைய தலையில் உருவக்குத்தி, அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள். அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான். “சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள். அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக: அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், என் கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள். யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.

நியாயாதிபதிகள் 5:24-31 பரிசுத்த பைபிள் (TAERV)

கேனியனாகிய ஏபேரின் மனைவி யாகேல். அவள் பெண்களெல்லாரிலும் ஆசீர்வதிக்கப்பட்டவள். சிசெரா தண்ணீரைக் கேட்டான். யாகேல் பாலைக் கொடுத்தாள். ராஜனுக்கான கிண்ணத்தில் அவள் பாலாடையைக் கொண்டு வந்தாள். யாகேல் தன் கையில் ஒரு கூடார ஆணியை எடுத்தாள். வேலையாள் பயன்படுத்தும் சுத்தியை அவள் வலதுகையில் பிடித்தாள். பின் சிசெராவின் தலைமீது சுத்தியால் அடித்தாள்! அவன் நெற்றிப் பொட்டின் உள்ளே துளையிட்டாள்! அவன் யாகேலின் பாதங்களினிடையே வீழ்ந்தான். அவன் மடிந்தான். அங்கு கிடந்தான். அவன் அவள் பாதங்களினிடையே வீழ்ந்தான். அவன் மடிந்தான். சிசெரா வீழ்ந்த இடத்திலேயே மடிந்தான். அங்கு மரித்து கிடந்தான்! “சிசெராவின் தாய் ஜன்னலினூடே பார்த்து அழுதாள். சிசெராவின் தாய் திரைச் சீலைகளினூடே பார்த்தாள். ‘ஏன் சிசெராவின் இரதம் தாமதிக்கிறது? அவன் இரத ஒலியை நான் கேளாதது ஏன்?’ என்று புலம்பினாள். “அவளின் புத்திசாலியான வேலைக்காரப் பெண் அவளுக்கு பதில் அளித்தாள். ஆம், பணிப்பெண் அவளுக்குப் பதில் சொன்னாள். ‘அவர்கள் போரில் வென்றிருப்பார்கள். தோற்கடித்த ஜனங்களிடமிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஒவ்வொரு வீரனும் ஓரிரு பெண்களை எடுத்துக்கொள்கிறான். சிசெரா சாயம்தீர்த்த ஆடையைக் கண்டெடுத்தான். அதுவே அவன் முடிவாயிற்று! சிசெரா அழகான ஆடை ஒன்றைக் கண்டெடுத்தான். வெற்றி வேந்தன் சிசெரா தான் அணிவதற்காக இரண்டு ஆடைகளையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.’ “கர்த்தாவே, உமது பகைவர்கள் அனைவரும் இவ்வாறு மடியட்டும். உமது அன்பான ஜனங்கள் உதய சூரியனைப்போல வலிமை பெறட்டும்!”

நியாயாதிபதிகள் 5:24-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே. தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள். தன் கையால் ஆணியையும், தன் வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெற்றியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள். அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்துகிடந்தான். சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணி வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள். அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள் அவளுக்கு உத்தரவு சொன்னதுமின்றி, அவள் தானும் தனக்கு மறுமொழியாக: அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள். கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.