லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:32-46

லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:32-46 TAERV

கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள். இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார். இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள். வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். வீரர்கள், “நீ யூதர்களின் ராஜாவானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் ராஜா” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான். ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான். இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார். அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.