லூக்கா 23:32-46

லூக்கா 23:32-46 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

குற்றவாளிகளான வேறு இரண்டுபேரையும், மரணதண்டனைக்காக இயேசுவுடனேகூட கொண்டுபோனார்கள். அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். படைவீரர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அவருடைய கிறிஸ்துவாய் இருந்தால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும்” என்று சொல்லி, ஏளனம் செய்தார்கள். படைவீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள். அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது. இவர் யூதருடைய அரசன். அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் கிறிஸ்து அல்லவா? உன்னையும், எங்களையும் விடுவியும்” என்று அவரை இகழ்ந்தான். ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். இவரோ, எந்த தவறும் செய்யவில்லை” என்றான். பின்பு அவன் இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான். அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட சொர்க்கத்தில் இருப்பாய்” என்றார். அப்பொழுது பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. சூரியன் இருளடைந்தது. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொல்லி, அவருடைய கடைசி மூச்சைவிட்டார்.

லூக்கா 23:32-46 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள். இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

லூக்கா 23:32-46 பரிசுத்த பைபிள் (TAERV)

கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள். இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார். இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள். வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். வீரர்கள், “நீ யூதர்களின் ராஜாவானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் ராஜா” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான். ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான். இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார். அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.

லூக்கா 23:32-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள். இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.