மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10

10
அப்போஸ்தலர்களை அனுப்புதல்
(மாற்கு 3:13-19; 6:7-13; லூக்கா 6:12-16; 9:1-6)
1இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். 2அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:
சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)
மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,
செபதேயுவின் குமாரன் யாக்கோபு மற்றும்
அவரது சகோதரன் யோவான்,
3பிலிப்பு
மற்றும் பார்த்தலோமியு,
தோமா
மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,
அல்பேயுவின் குமாரன் யாக்கோபு,
ததேயு,
4சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.
இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.
5இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம், “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 8நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். 9உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். 10பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.
11“நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். 12நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். 13அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். 14ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். 15நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.
பிரச்சனைகளைப் பற்றிய எச்சரிக்கை
(மாற்கு 13:9-13; லூக்கா 21:12-17)
16“கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். 17மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். 18ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். 19நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். 20அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார்.
21“சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். 22நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். 23ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
24“ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. 25ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள்.
யாருக்குப் பயப்படுவது
(லூக்கா 12:2-7)
26“எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும். 27நான் இவற்றை இருளில் (இரகசியமாக) கூறுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றை வெளிச்சத்தில் கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் இவற்றை அமைதியாக உங்களுடன் மட்டும் மெதுவாகப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றைத் தாராளமாக எல்லா மக்களுக்கும் கூற வேண்டும்.
28“மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். 29பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால் இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது. 30உங்கள் தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். 31எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்.
விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள்
(லூக்கா 12:8-9)
32“ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் (நின்று கொண்டு) என்னிடம் நம்பிக்கை உடையவனாய் இருப்பதாகக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவான். நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். 33மாறாக, ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் என்னிடம் நம்பிக்கை உடையவனல்ல எனக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவானல்ல. நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன்.
வித்தயாசமான போதனை
(லூக்கா 12:51-53; 14:26-27)
34“பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன். 35கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்:
“‘மகன் தன் தந்தைக்கும்,
மகள் தன் தாய்க்கும்,
மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’
36தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள்.#10:35-36 பார்க்க: மீகா 7:6.
37“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 38என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 39என்னைவிடவும் தன் வாழ்வை அதிகம் நேசிக்கிறவன், மெய்யான வாழ்வை இழக்கிறான். எனக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறவன், மெய்யான வாழ்வை அடைவான்.”
உங்களை ஏற்றுக்கொள்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்
(மாற்கு 9:41)
40“உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். 41தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். 42யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்