மத்தேயு எழுதிய சுவிசேஷம் 25:1-13

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 25:1-13 TAERV

“மணமகனுக்காக காத்திருந்த பத்துப் பெண்களுக்கு ஒப்பாக பரலோக இராஜ்யம் இருக்கும். அப்பெண்கள் தங்களுடன் விளக்குகளைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஐந்து பெண்கள் முட்டாள்கள்; ஐந்து பெண்கள் புத்திசாலிகள். ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை. புத்திசாலிப் பெண்களோ விளக்குகளையும் தேவையான அதிக எண்ணெயை ஜாடிகளிலும் கொண்டு வந்திருந்தனர். மணமகன் வர நேரமானதால் அப்பெண்கள் களைப்பு மிகுதியால் தூங்க ஆரம்பித்தனர். “நள்ளிரவில் யாரோ, ‘மணமகன் வந்தாயிற்று! வந்து மணமகனை சந்தியுங்கள்!’ என்று அறிவித்தார்கள். “பின் பெண்கள் அனைவரும் விழித்தெழுந்தார்கள். தம் விளக்குகளைத் தயார் செய்தார்கள். முட்டாள் பெண்கள் புத்திசாலிப் பெண்களிடம் ‘எங்களிடம் விளக்குகளிலிருந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. உங்களிடமுள்ள எண்ணெயிலிருந்து சிறிது கொடுங்கள்’ என்று கேட்டார்கள். “அதற்கு புத்திசாலிப் பெண்கள், ‘இல்லை. எங்களிடமுள்ள எண்ணெய் எங்களுக்கே போதாது, எண்ணெய் விற்பவர்களிடம் சென்று உங்களுக்கு எண்ணெய் வாங்கி வாருங்கள்’ என்று பதிலளித்தார்கள். “ஆகவே, முட்டாள் பெண்கள் எண்ணெய் வாங்கச் சென்றார்கள். அவர்கள் வெளியில் சென்றிருந்தபொழுது மணமகன் வந்தான். தயாராக இருந்த பெண்கள் மணமகனுடன் விருந்துண்ண சென்றார்கள். உடனே, கதவு மூடப்பட்டு பூட்டப்பட்டது. “பின்னர், வெளியில் சென்ற பெண்கள் திரும்பினார்கள். அவர்கள், ‘ஐயா! ஐயா! கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுங்கள்’ என்றார்கள். “ஆனால் மணமகனோ, ‘உண்மையாகவே நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டான். “எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.