மத்தேயு 25:1-13
மத்தேயு 25:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமா யிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோக வில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
மத்தேயு 25:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள். அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள். மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள். “நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது. “அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள். புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள். “அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள். “புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது. “பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள். “ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார். “எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார்.
மத்தேயு 25:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
மத்தேயு 25:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
“மணமகனுக்காக காத்திருந்த பத்துப் பெண்களுக்கு ஒப்பாக பரலோக இராஜ்யம் இருக்கும். அப்பெண்கள் தங்களுடன் விளக்குகளைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஐந்து பெண்கள் முட்டாள்கள்; ஐந்து பெண்கள் புத்திசாலிகள். ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை. புத்திசாலிப் பெண்களோ விளக்குகளையும் தேவையான அதிக எண்ணெயை ஜாடிகளிலும் கொண்டு வந்திருந்தனர். மணமகன் வர நேரமானதால் அப்பெண்கள் களைப்பு மிகுதியால் தூங்க ஆரம்பித்தனர். “நள்ளிரவில் யாரோ, ‘மணமகன் வந்தாயிற்று! வந்து மணமகனை சந்தியுங்கள்!’ என்று அறிவித்தார்கள். “பின் பெண்கள் அனைவரும் விழித்தெழுந்தார்கள். தம் விளக்குகளைத் தயார் செய்தார்கள். முட்டாள் பெண்கள் புத்திசாலிப் பெண்களிடம் ‘எங்களிடம் விளக்குகளிலிருந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. உங்களிடமுள்ள எண்ணெயிலிருந்து சிறிது கொடுங்கள்’ என்று கேட்டார்கள். “அதற்கு புத்திசாலிப் பெண்கள், ‘இல்லை. எங்களிடமுள்ள எண்ணெய் எங்களுக்கே போதாது, எண்ணெய் விற்பவர்களிடம் சென்று உங்களுக்கு எண்ணெய் வாங்கி வாருங்கள்’ என்று பதிலளித்தார்கள். “ஆகவே, முட்டாள் பெண்கள் எண்ணெய் வாங்கச் சென்றார்கள். அவர்கள் வெளியில் சென்றிருந்தபொழுது மணமகன் வந்தான். தயாராக இருந்த பெண்கள் மணமகனுடன் விருந்துண்ண சென்றார்கள். உடனே, கதவு மூடப்பட்டு பூட்டப்பட்டது. “பின்னர், வெளியில் சென்ற பெண்கள் திரும்பினார்கள். அவர்கள், ‘ஐயா! ஐயா! கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுங்கள்’ என்றார்கள். “ஆனால் மணமகனோ, ‘உண்மையாகவே நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டான். “எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.