நீதிமொழிகள் 3:1-35

நீதிமொழிகள் 3:1-35 TAERV

என் மகனே! என் போதனைகளை மறவாதே. நான் செய்யச் சொல்பவற்றை நினைத்துக்கொள். நான் போதிக்கும் பாடங்கள் உனக்கு நீண்ட, மகிழ்ச்சியான, அதிக சமாதானமுள்ள வாழ்வைத் தரும். அன்பு செலுத்துவதை விட்டுவிடாதே. எப்பொழுதும் உண்மையுள்ளவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இரு. நீ இவற்றை உன்னில் ஒரு பகுதியாக வைத்துக்கொள். இவற்றை உன் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். இதனை உன் இதயத்தில் எழுதிக்கொள். தேவனும், ஜனங்களும் உன்னை ஞானவான் என்று எண்ணுவார்கள். தேவனுக்கும், மனிதருக்கும் நீ நல்லவனாக இருப்பாய். கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது. உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக்கொடு. அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும். என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாக கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய். ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் குமாரனைத் தண்டிக்கிறார். ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான். ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது. ஞானமானது நகைகளைவிட மதிப்புமிக்கது. ஞானத்தைப்போன்று விலைமதிப்புடையது வேறொன்றும் உனக்குத் தேவையாகாது. ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும். ஞானமுடையவர்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர். ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இப்பூமியை உருவாக்க கர்த்தர் ஞானத்தைப் பயன்படுத்தினார். வானத்தை உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். கடலையும் மழையைக்கொடுக்கும் மேகத்தையும் உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். ஞானத்தின் மூலம் வானம் மழையைப் பொழிந்தது. என் மகனே, எப்போதும் உனது ஞானத்தையும், புரிந்துகொள்ளும் சக்தியையும் பாதுகாத்துக்கொள். உனது சிந்தனையையும், ஆற்றலையும், அறிவுப்பூர்வமாகத் திட்டமிடும் திறமையையும் காத்துக்கொள். ஞானமும், அறிவும் உனக்கு வாழ்க்கையைக்கொடுத்து அதனை அழகுள்ளதாக்கும். அதனால் நீ பாதுகாப்பாக வாழலாம். நீ விழாமல் இருக்கலாம். நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும். திடீரென உனக்கு ஏற்படுகின்ற அழிவுக்கு பயப்படாதே. தீய ஜனங்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படாதே. ஏனென்றால் கர்த்தர் உனக்குப் பெலன் தந்து கண்ணியிலிருந்து உன்னை விலக்கிக் காப்பார். உன்னால் முடிந்த எல்லா நேரத்திலும், உன் உதவியைத் தேவையானவர்களுக்குச் செய். உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே. உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள். சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே. சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே. ஏனென்றால் கெட்டவர்களை கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார். தீயவர்களின் குடும்பங்களுக்கு கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார். ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார். ஞானமுள்ள ஜனங்கள் வாழும் வாழ்க்கை பெருமையைக்கொண்டுவரும். மூடர் வாழும் வாழ்க்கை அவமானத்தைக்கொண்டுவரும்.