நீதிமொழிகள் 3:1-35
நீதிமொழிகள் 3:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் மகனே, என் போதனைகளை மறவாதே, என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள். அவை உனக்கு நீண்ட ஆயுளையும், சமாதான வாழ்வையும் கொண்டுவரும். அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; அவற்றை உன் கழுத்திலே அணிந்து, உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள். அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய். உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே. நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார். உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு. அது உன் உடலுக்கு சுகத்தையும், உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு. அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும். என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே. ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். ஞானத்தை அடைகிறவர்களும், புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது. அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல. அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன. அதின் வழிகள் இன்பமானது; அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை. அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்; அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின. என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள். அவை உனக்கு வாழ்வாகவும், உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும். அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்; உன் கால்களும் இடறாது. நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும். திடீரென வரும் பேராபத்திற்கும் கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம். யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; அவர் உன் கால் இடறாமல் காப்பார். நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே. உன்னிடம் இருக்கும்போதே, உன் அயலவனிடம், “போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே. உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே. ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே. வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே. ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார். கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும். பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார். ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; மூடர்கள் வெட்கப்படுவார்கள்.
நீதிமொழிகள் 3:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும். கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து. அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார். ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார். அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது. என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், உன்னுடைய கால் இடறாது. நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். திடீரென வரும் திகிலும், துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம். யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார். நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே. கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
நீதிமொழிகள் 3:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)
என் மகனே! என் போதனைகளை மறவாதே. நான் செய்யச் சொல்பவற்றை நினைத்துக்கொள். நான் போதிக்கும் பாடங்கள் உனக்கு நீண்ட, மகிழ்ச்சியான, அதிக சமாதானமுள்ள வாழ்வைத் தரும். அன்பு செலுத்துவதை விட்டுவிடாதே. எப்பொழுதும் உண்மையுள்ளவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இரு. நீ இவற்றை உன்னில் ஒரு பகுதியாக வைத்துக்கொள். இவற்றை உன் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். இதனை உன் இதயத்தில் எழுதிக்கொள். தேவனும், ஜனங்களும் உன்னை ஞானவான் என்று எண்ணுவார்கள். தேவனுக்கும், மனிதருக்கும் நீ நல்லவனாக இருப்பாய். கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது. உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக்கொடு. அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும். என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாக கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய். ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் குமாரனைத் தண்டிக்கிறார். ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான். ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது. ஞானமானது நகைகளைவிட மதிப்புமிக்கது. ஞானத்தைப்போன்று விலைமதிப்புடையது வேறொன்றும் உனக்குத் தேவையாகாது. ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும். ஞானமுடையவர்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர். ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இப்பூமியை உருவாக்க கர்த்தர் ஞானத்தைப் பயன்படுத்தினார். வானத்தை உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். கடலையும் மழையைக்கொடுக்கும் மேகத்தையும் உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். ஞானத்தின் மூலம் வானம் மழையைப் பொழிந்தது. என் மகனே, எப்போதும் உனது ஞானத்தையும், புரிந்துகொள்ளும் சக்தியையும் பாதுகாத்துக்கொள். உனது சிந்தனையையும், ஆற்றலையும், அறிவுப்பூர்வமாகத் திட்டமிடும் திறமையையும் காத்துக்கொள். ஞானமும், அறிவும் உனக்கு வாழ்க்கையைக்கொடுத்து அதனை அழகுள்ளதாக்கும். அதனால் நீ பாதுகாப்பாக வாழலாம். நீ விழாமல் இருக்கலாம். நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும். திடீரென உனக்கு ஏற்படுகின்ற அழிவுக்கு பயப்படாதே. தீய ஜனங்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படாதே. ஏனென்றால் கர்த்தர் உனக்குப் பெலன் தந்து கண்ணியிலிருந்து உன்னை விலக்கிக் காப்பார். உன்னால் முடிந்த எல்லா நேரத்திலும், உன் உதவியைத் தேவையானவர்களுக்குச் செய். உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே. உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள். சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே. சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே. ஏனென்றால் கெட்டவர்களை கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார். தீயவர்களின் குடும்பங்களுக்கு கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார். ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார். ஞானமுள்ள ஜனங்கள் வாழும் வாழ்க்கை பெருமையைக்கொண்டுவரும். மூடர் வாழும் வாழ்க்கை அவமானத்தைக்கொண்டுவரும்.
நீதிமொழிகள் 3:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும். கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார். அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது. என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும். அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது. நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும். சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம். கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே. கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.