யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 13

13
இரண்டு மிருகங்கள்
1பின்பு கடலுக்குள் இருந்து ஒரு மிருகம் வெளிவருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கிரீடம் இருந்தது. அதன் ஒவ்வொரு தலைமீதும் ஒரு கெட்ட பெயர் எழுதப்பட்டிருந்தது. 2அந்த மிருகம் பார்ப்பதற்கு ஒரு சிறுத்தையைப் போன்று இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன. இராட்சசப் பாம்பானது அம்மிருகத்துக்குத் தன் முழு பலத்தையும், சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது. 3அம்மிருகத்தின் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாகக் காயம்பட்டதுபோல காணப்பட்டது. சாவுக்கேதுவான அக்காயம் குணப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பேரும் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு அம்மிருகத்தைப் பின்பற்றினர். 4இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர்.
5அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. 6அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. 7தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 8உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள்.
9கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக.
10எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ
அவன் சிறைபட்டுப் போவான்.
எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ
அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான்.
இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும்.
பூமியிலிருந்து வெளிவரும் மிருகம்
11பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. 12இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது. 13இந்த இரண்டாம் மிருகம் மாபெரும் அற்புதங்களைச் செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து பூமிக்கு நெருப்பை வரச் செய்கிறது.
14அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். 15முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது. 16இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. 17எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
18புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ளவன் எவனும் அம்மிருகத்தின் எண்ணைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாகும். அவனது எண் 666 ஆகும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 13: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்