யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 4

4
யோவான் பரலோகத்தைப் பார்த்தல்
1பிறகு நான் பார்த்தேன். அங்கே எனக்கு முன்னே பரலோகத்தின் கதவு திறந்திருந்தது. என்னிடம் முன்பு பேசிய அதே குரலை அங்கு கேட்டேன். அக்குரல் எக்காளத்தைப்போன்று ஒலித்தது. “இங்கே ஏறிவா. இதற்கப்புறம் என்ன நிகழவேண்டும் என்பதை உனக்குக் காட்டுகிறேன்” என்றது அக்குரல். 2பின்னர் ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டேன். பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் எனக்கு முன்பாக இருந்தது. அதன் மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3அவர் பார்ப்பதற்கு வைரக்கல்லும், பதுமராகக் கல்லும்போல இருந்தார். அந்த சிம்மாசனத்தைச் சுற்றி மரகதம் போன்ற ஒரு வானவில் இருந்தது.
4சிம்மாசனத்தைச் சுற்றி இருபத்தி நான்கு சிறிய சிம்மாசனங்கள் இருந்தன. அந்த இருபத்துநான்கு சிறிய சிம்மாசனங்களில் இருபத்து நான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்தனர். மூப்பர்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் தலையில் தங்கக் கிரீடங்கள் இருந்தன. 5சிம்மாசனத்திலிருந்து மின்னல்கள் ஒளிர்ந்தன. இடியோசை கேட்டது. சிம்மாசனத்திற்கு முன்பு ஏழு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அந்த ஏழு விளக்குகள் தேவனுடைய ஏழு ஆவிகளாகும். 6அந்தச் சிம்மாசனத்துக்கு முன்பாகப் பார்ப்பதற்கு கண்ணாடிக் கடல்போல ஒன்றிருந்தது.
அக்கடல் பளிங்குபோல் தெளிவாகவும் இருந்தது. அந்தச் சிம்மாசனத்தின் முன்னாலும் பக்கங்களிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன. அவற்றிற்கு முன்புறமும் பின்புறமும் கண்கள் நிறைந்திருந்தன. 7அந்த முதல் ஜீவன் சிங்கத்தைப் போன்றிருந்தது. இரண்டாவது ஜீவன் காளையைப்போல இருந்தது. மூன்றாவது ஜீவனுக்கு மனிதனைப்போல முகமிருந்தது. நான்காவது ஜீவன் பறக்கும் கழுகைப் போன்றிருந்தது. 8இந்த நான்கு ஜீவன்களுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. இவற்றுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்கள் இருந்தன. இரவும், பகலும் அவை நிறுத்தாமல் கீழ்க்கண்டவற்றைக் கூறிக்கொண்டிருந்தன:
“சகல வல்லமையும் உள்ளவராகிய கர்த்தராகிய தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,
அவர் எப்போதும் இருந்தார், இருக்கிறார், இனிமேல் வரப்போகிறார்.”
9அந்த உயிர்வாழும் ஜீவன்கள் சிம்மாசனத்தின் மேல் வீற்றிருப்பவருக்கு மகிமையையும், பெருமையையும் நன்றியையும் செலுத்துகின்றன. அவரே எல்லாக் காலங்களிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். எப்பொழுதும் அந்த உயிர் வாழும் ஜீவன்கள் இப்புகழ்ச்சியைச் செய்துகொண்டிருக்கின்றன. 10அந்த இருபத்துநான்கு மூப்பர்களும் தேவனுக்கு முன் குனிந்து வணங்குகின்றனர். எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றவரை மூப்பர்கள் வணங்குகின்றனர். அவர்கள் தங்கள் கிரீடங்களைக் கழற்றி சிம்மாசனத்தின் முன் வைத்து விட்டு கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்:
11“எங்கள் கர்த்தரும் தேவனுமானவரே!
மகிமைக்கும், கனத்திற்கும், வல்லமைக்கும் தகுதியானவர் நீர் அதிகாரமும் உள்ளவர்.
எல்லாவற்றையும் படைத்தவர் நீர்.
உம் விருப்பத்தாலேயே யாவும் படைக்கப்பட்டு நிலைத்திருக்கவும் செய்கின்றன.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 4: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்