ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 14

14
பிறரை விமர்சியாதிருங்கள்
1விசுவாசத்தில் பலவீனமான ஒருவனை உங்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டாம். அவனது மாறுபட்ட சிந்தனைகளைப் பற்றி அவனோடு விவாதிக்க வேண்டாம். 2ஒருவன் தான் விரும்புகிற எந்த வகையான உணவையும் உண்ணலாம் என்று நம்புகிறான். பவவீனமான நம்பிக்கை உள்ளவனோ காய்கறிகளை மட்டும் உண்ணலாம் என்று நம்புகிறான். 3காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களைப் பார்த்து மற்றவர்கள் அற்பமானவர்களாக எண்ணாமல் இருக்க வேண்டும். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களும் மற்றவர்களைத் தவறாக நியாயம் தீர்க்காமல் இருக்கவேண்டும். தேவன் அவனையும் ஏற்றுக்கொண்டார். 4மற்றொருவனின் வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்ப்பு சொல்லுகிற உரிமை உங்களுக்கு இல்லை. அவன் செய்கிற தவறையும், நல்லவற்றையும் தீர்ப்பு சொல்ல அவனது எஜமானன் இருக்கிறார். கர்த்தரின் ஊழியன் நிலை நிறுத்தப்படுவான். ஏனென்றால் கர்த்தர் அவனை நிலை நிறுத்த வல்லவராய் இருக்கிறார்.
5ஒருவன் ஒரு நாளை மற்ற நாட்களைவிடச் சிறப்பாகக் கருதுகிறான். மற்றொருவன் எல்லா நாட்களையும் ஒன்றுபோல எண்ணுகிறான். ஒவ்வொருவரும் தம் மனதில் தம் நம்பிக்கைகளை உறுதியாக எண்ணிக்கொள்ளவேண்டும். 6மற்ற நாட்களை விட ஒரு நாளைச் சிறப்பாகக் கருதுகிறவன் கர்த்தருக்காக அவ்வாறு கருதுகிறான். எல்லா வகை உணவுகளையும் உண்பவனும் கர்த்தருக்காகவே உண்ணுகிறான். அந்த உணவுக்காக அவன் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான். ஒருவன் சிலவகை உணவுகளை உண்ண மறுப்பதும் அதே கர்த்தருக்காகத்தான். அவனும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான்.
7நாம் அனைவரும் கர்த்தருக்காகவே வாழ்கிறோம். வாழ்வதோ, சாவதோ நமக்காக அல்ல. 8நாம் அனைவரும் வாழும்போது கர்த்தருக்காகவே வாழ்கிறோம். சாகும்போது கர்த்தருக்காகவே சாகிறோம். வாழ்வதானாலும் சரி, சாவதானாலும் சரி நாம் கர்த்தருக்குச் சொந்தம் ஆனவர்கள். 9எனவேதான் கிறிஸ்து இறந்தார். பிறகு மீண்டும் வாழ்வதற்காக இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதனால் அவர் இறந்தவர்களுக்கும் வாழ்கிறவர்களுக்கும் கர்த்தர் ஆக முடியும்.
10எனவே, நீ உன் சகோதரனை எவ்வாறு குற்றவாளியென்று தீர்ப்பளிக்கலாம்? உன் சகோதரனைவிடப் பெரியவன் என்று நீ எப்படி எண்ணலாம்? நாம் அனைவரும் தேவன் முன்பாக நிற்போம். அவர் ஒருவரே நமக்குத் தீர்ப்பை அளிக்கிறவர்.
11“ஒவ்வொருவனும் எனக்கு முன்பு தலை வணங்குவான்.
ஒவ்வொருவனும் தேவனை ஏற்றுக்கொள்வான்.
நான் வாழ்வது எப்படி உண்மையோ அப்படியே இவை நிகழும் என்று கர்த்தர் கூறுகின்றார்”#ஏசா. 45:23
என்று எழுதப்பட்டுள்ளது.
12எனவே, நம்மில் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையைப் பற்றி தேவனுக்குக் கணக்கு ஒப்படைக்க வேண்டும்.
இடறலற்றவர்களாயிருங்கள்
13நாம் ஒருவருக்கொருவர் நியாயம் தீர்த்துக்கொள்வதை நிறுத்தவேண்டும். நமது சகோதரனோ சகோதரியோ பலவீனமுறவும், அல்லது பாவத்தில் விழும் வகையிலும் நாம் எதுவும் செய்யக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 14நான் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். எந்த உணவையும் உண்ணத் தகாதது என்று கூற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எவராவது ஒரு உணவை உண்ணத்தகாதது என்று நம்பினால் அந்த உணவும் உண்ணமுடியாதபடி தீட்டுள்ளதாகும்.
15நீ சாப்பிடும் ஒன்றின் பொருட்டு, உன் சகோதரனின் விசுவாசத்தைப் புண்படுத்தினால், நீ உண்மையிலேயே அன்பு வழியைப் பின்பற்றவில்லை என்பதே அதன் பொருள். தவறு என்று ஒருவன் கருதும் உணவை உண்டு ஒருவனது நம்பிக்கையை அழித்து விடாதே. கிறிஸ்து அவனுக்காகவும் தன் உயிரை கொடுத்தார். 16நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 17தேவனுடைய இராஜ்யத்தில் குடிப்பதும் உண்பதும் முக்கியமல்ல. தேவனுக்கேற்ற நீதிமானாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவருக்குள் சமாதானமும் சந்தோஷமும் அடைவதுமே முக்கியம். 18இவ்வழியில் கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறவன் தேவனுக்கு ஏற்றவனாக இருப்பான். அவன் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமாயிருப்பான்.
19அதனால் சமாதானத்துக்கேற்றவற்றை சிரமப்பட்டாவது செய்ய முயற்சி செய்வோம். ஒருவருக்கொருவர் உதவியானவற்றைச் செய்ய முயல்வோம். 20உணவு உண்ணுவதால் தேவனுடைய வேலையை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து உணவும் உண்பதற்கு ஏற்றதே. ஆனால் நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது தவறாகும். 21நீ மாமிசம் உண்பதும், மது குடிப்பதும், உனது சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யுமானால் அவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. உன் சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யும் எதனையும் செய்யாமல் இருப்பாயாக.
22இவை பற்றிய உன் நம்பிக்கைகள் எல்லாம் உனக்கும் தேவனுக்கும் இடையில் இரகசியமாய் வைக்கப்பட வேண்டும். நல்லதென்று ஒருவன் நினைக்கும் காரியங்களில் ஒருவன் குற்றவளியாக இல்லாமல் இருப்பது பெரும் பாக்கியமாகும். 23சரியானதுதான் என்ற நிச்சயமில்லாமல் ஒருவன் ஒரு உணவை உண்பானேயானால் அவன் தனக்குத் தானே தப்பானவனாகிறான். ஏனென்றால் அவனுக்கு அவனது செயலில் நம்பிக்கை இல்லை. எனவே நம்பிக்கை இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 14: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்