சாலொமோனின் உன்னதப்பாட்டு 7

7
அவன் அவளது அழகைப் புகழ்கிறான்
1இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன.
உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால்
செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
2உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது.
உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.
3உன் இரு மார்பகங்களும்
வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.
4உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது.
உன் கண்கள்
பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன.
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியுள்ள
லீபனோனின் கோபுரம் போன்றுள்ளது.
5உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது.
உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது.
உன் நீண்ட அசையும் கூந்தலானது ராஜாவையும் சிறைபிடிக்கவல்லது.
6நீ மிகவும் அழகானவள்.
நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள்.
நீ அன்பான, மகிழ்வளிக்கிற இளம் கன்னி.
7நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள்.
உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.
8நான் இம்மரத்தில் ஏற விரும்புகிறேன்.
இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன்.
இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும்,
உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக.
9உன் வாய் என் அன்பிற்குள் நேராக இறங்கும் தூங்குகிறவர்களின் உதடுகளிலும் இறங்கும் சிறந்த திராட்சைரசத்தைப் போன்றிருப்பதாக.
அவள் அவனோடு பேசுகிறாள்
10நான் என் நேசருக்கு உரியவள்.
அவருக்கு நான் தேவை.
11என் நேசரே வாரும்
வயல்வெளிகளுக்குப் போவோம்
இரவில் கிராமங்களில் தங்குவோம்.
12அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்.
திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம்.
மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம்.
அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.
13தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும்
நம் வாசலருகில் உள்ளன.
ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.
அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சாலொமோனின் உன்னதப்பாட்டு 7: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்