யோவான் 1
1
வார்த்தை மனிதனாகியது
1ஆதியிலே#1:1 ஆதியிலே – கிரேக்க மொழியில் ஆரம்பத்தில் என்றுள்ளது. வார்த்தையானவர்#1:1 வார்த்தையானவர் – கிரேக்க மொழியில் வார்த்தை என்றுள்ளது. இருந்தார். அந்த வார்த்தையானவர் இறைவனுடன் இருந்தார். அந்த வார்த்தையானவர் இறைவனாயிருந்தார். 2அவர் ஆதியிலேயே#1:2 ஆதியிலேயே – கிரேக்க மொழியில் ஆரம்பத்தில் என்றுள்ளது. இறைவனுடன் இருந்தார். 3அவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை. 4அவரில் வாழ்வு இருந்தது; அந்த வாழ்வே மனித இனத்திற்கு வெளிச்சமாயிருந்தது. 5அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
6இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய பெயர் யோவான். 7தனக்கூடாக எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாக அந்த ஒளியைப் பற்றி சாட்சி கூறுகின்ற ஒரு சாட்சியாகவே அவன் வந்தான். 8அவன் அந்த ஒளியல்ல, மாறாக அவன் அந்த ஒளிக்கான ஒரு சாட்சியாக வந்தவன்.
9ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் அந்த உண்மையான ஒளி, உலகத்திற்குள் வந்து கொண்டிருந்தது. 10வார்த்தையானவர்#1:10 வார்த்தையானவர் – கிரேக்க மொழியில் அவர் என்றுள்ளது உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாகப் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை யாரென்று அறிந்துகொள்ளவில்லை. 11அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12ஆயினும் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கான உரிமையை அவர் கொடுத்தார். 13இப்பிள்ளைகள், இரத்த உறவினாலோ மனித தீர்மானத்தினாலோ புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்லர். மாறாக, இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
14வார்த்தையானவர் மனித உடல் எடுத்து நமது மத்தியில் வாழ்ந்தார், அவரது மகிமையை நாங்கள் கண்கூடாகக் கண்டோம். கிருபையும் உண்மையும் நிறைந்த அந்த மகிமை, பிதாவின் ஒரே மகனுக்கே உரித்தான மகிமை.
15யோவான் அவரைக் குறித்து சாட்சி கொடுத்து, “எனக்குப் பின் வருகின்றவர், என்னிலும் மேன்மையானவராய் இருக்கின்றார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னரே இருந்தவர்’ என்று இவரைப்பற்றியே நான் சொன்னேன்” என சத்தமிட்டுச் சொன்னான். 16அவருடைய கிருபையின் நிறைவிலிருந்து, நாம் எல்லோருமே ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறோம். 17ஏனெனில், நீதிச்சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் உண்மையுமோ இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வந்தது. 18இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனுக்கு மிக நெருங்கியவரான#1:18 மிக நெருங்கியவரான – கிரேக்க மொழியில் மார்பில் இருக்கின்ற என்றுள்ளது. அவரின் ஒரே மகனே அவரைத் தெரியப்படுத்தினார்.
யோவான் ஸ்நானகன்
19எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள்,#1:19 யூத தலைவர்கள் – கிரேக்க மொழியில் யூதர்கள் என்றுள்ளது. யார் இந்த யோவான் என்று விசாரித்து அறியும்படி, மதகுருக்களையும் லேவியரையும் அவனிடம் அனுப்பினார்கள்; அப்போது அவன் சாட்சியாக, 20“நான் மேசியா அல்ல” என்று அறிவித்தான். ஆம், அவன் அதனை மறுக்காமல் ஒளிவுமறைவின்றி அறிவித்தான்.
21அப்போது அவர்கள் அவனிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள்.
அதற்கு அவன், “நான் எலியா அல்ல” என்றான்.
தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள்.
அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
22இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி, நீர் ஒரு பதிலைத் தாரும். உம்மைக் குறித்து நீர் என்ன சொல்கின்றீர்?” என்று கேட்டார்கள்.
23யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலமாகப் பதிலளித்து, “ ‘கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள்’#1:23 ஏசா. 40:3 என்று, பாலைநிலத்தில் கூப்பிடுகின்றவனுடைய சத்தம் நானே” என்றான்.
24பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர் 25அவனிடம், “நீர் மேசியாவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் ஞானஸ்நானம் கொடுக்கின்றீர்?” என்று கேட்டார்கள்.
26யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள். 27எனக்குப் பின் வருகின்ற அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல” என்றான்.
28இவையெல்லாம் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த பெத்தானியாவில் நடைபெற்றன.
இறைவனின் ஆட்டுக்குட்டியாகிய இயேசு
29மறுநாளிலே, இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ, இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகின்றவர். 30‘எனக்குப் பின் வருகின்றவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கின்றார். ஏனெனில் அவர் எனக்கு முன்பே இருந்தவர்’ என்று நான் சொன்னபோது, இவரைக் குறித்தே சொன்னேன். 31நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்” என்றான்.
32பின்பு யோவான், “ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய் பரலோகத்திலிருந்து இறங்கி, அவர்மீது தங்குவதைக் கண்டேன். 33தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் எனக்கு கூறியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்க மாட்டேன். ஆனால் என்னை அனுப்பியவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி, எவர் மேல் தங்குவதை நீ காண்கின்றாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கின்றவர்’ என்று சொல்லியிருந்தார். 34இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன்#1:34 இறைவனின் மகன் – அல்லது இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர். ஏசா. 42:1 என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
இயேசுவின் முதல் சீடர்கள்
35மறுநாளிலே, திரும்பவும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்று கொண்டிருக்கையில், 36இயேசு அவ்வழியாய் கடந்து போவதைக் கண்டு, “இதோ, இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
37அவன் இப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள். 38இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருவதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார்.
அதற்கு அவர்கள், “ரபீ,#1:38 கிரேக்க மொழியில் ரபீ என்றால் போதகர். நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். “ரபீ” என்பதன் அர்த்தம் “போதகர்” என்பதாகும்.
39இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார்.
எனவே அவர்கள் அவருடன் போய், அவர் தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்போது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
40யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று சொன்னான். மேசியா#1:41 மேசியா – “மேசியா” என்ற எபிரேய சொல்லானது கிரேக்க மொழியில் “கிறிஸ்து” என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும் என்பதற்கு, கிறிஸ்து#1:41 கிறிஸ்து – “மேசியா” என்ற எபிரேய சொல்லானது கிரேக்க மொழியில் “கிறிஸ்து” என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும் என்று அர்த்தமாகும். 42அவன் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தான்.
இயேசு அவனை உற்று நோக்கி, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா#1:42 கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்ற சொல்லின் கிரேக்க மொழியாக்கம் பேதுரு என்பதாகும்.
பிலிப்புவும் நாத்தான்வேலும் அழைக்கப்படுதல்
43மறுநாளிலே, இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
44அந்திரேயாவையும் பேதுருவையும் போலவே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவன். 45பின்பு பிலிப்பு, நாத்தான்வேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டுகொண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
46நாத்தான்வேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக் கூடுமோ?” என்று கேட்டான்.
அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
47அப்படியே நாத்தான்வேல், தம்மை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக் குறித்து, “இவன் கபடம் ஏதுமில்லாத உண்மையான இஸ்ரயேலன்” என்றார்.
48அப்போது நாத்தான்வேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தாயே; அப்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
49அப்போது நாத்தான்வேல், “போதகரே, நீரே இறைவனின் மகன், நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
50அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்தி மரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்கு கூறியதாலா நீ என்னை விசுவாசிக்கின்றாய்? நீ இதைவிட சிறப்பானவற்றைக் காண்பாய்” என்றார். 51மேலும் அவர் தொடர்ந்து, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே#1:51 உண்மையாகவே உண்மையாகவே – கிரேக்க மொழியில் ஆமென், ஆமென். சொல்கின்றேன், பரலோகம் திறந்திருப்பதையும், இறைவனுடைய தூதர்கள் மனுமகனிடத்தில் இருந்து மேலே போவதையும், அவரிடத்திற்கு இறங்கி வருவதையும் காண்பீர்கள்”#1:51 ஆதி. 28:12 என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோவான் 1: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.