யோவான் 11
11
லாசருவின் மரணம்
1லாசரு என்னும் ஒருவன் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். அவன் பெத்தானியா ஊரைச் சேர்ந்தவன். அவன் தனது சகோதரிகளான மரியாளுடனும் மார்த்தாளுடன் அங்கே வாழ்ந்து வந்தான். 2இந்த மரியாளே, பின்பு ஆண்டவரின்மீது வாசனைத் தைலத்தை ஊற்றி, அவருடைய பாதங்களைத் தன்னுடைய தலைமுடியினால் துடைத்தவள். இவளுடைய சகோதரனாகிய லாசருவே வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். 3எனவே லாசருவின் சகோதரிகள், “ஆண்டவரே, நீர் நேசிக்கின்றவன் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறான்” என்ற செய்தியை அனுப்பினார்கள்.
4இயேசு இதைக் கேட்டபோது அவர், “இந்த வியாதி மரணத்தில் முடிவடையாது. இது இறைவனுடைய மகிமைக்கே, இதன் மூலமாக இறைவனுடைய மகனும் மகிமைப்படுவார்” என்றார். 5இயேசு, மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியிடத்திலும் லாசருவிலும் அன்பாயிருந்தார். 6ஆயினும் லாசரு வியாதியுடனிருக்கிறான் என்று அவர் கேள்விப்பட்டபோது, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் தங்கியிருந்தார். 7பின்பு அவர் தமது சீடர்களிடம், “திரும்பவும் நாம் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்றார்.
8ஆனால் அவர்களோ, “போதகரே, சற்று முன்னதாகத்தான் யூதர்கள் உம்மீது கல்லெறிய முயன்றார்கள். திரும்பவும் நீர் அங்கே போகப் போகின்றீரோ?” என்று கேட்டார்கள்.
9இயேசு அதற்கு மறுமொழியாக, “பகல் வேளையில் பன்னிரண்டு மணி நேரம் இருக்கின்றதல்லவா? பகல் வேளையில் நடக்கின்றவன் உலகத்தின் வெளிச்சத்தைக் காண்பதால், அவன் இடறி விழ மாட்டான். 10அவன் இரவில் நடக்கின்றபோது அவனுக்கு வெளிச்சம் இல்லாதபடியால், இடறி விழுகிறான்” என்றார்.
11அவர் இதைச் சொல்லி முடித்த பின்பு, அவர் மேலும் சொன்னதாவது: “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையாயிருக்கிறான்; நான் அங்கே போய், அவனை எழுப்பப் போகின்றேன்” என்றார்.
12சீடர்கள் அதற்கு மறுமொழியாக, “போதகரே, அவன் நித்திரையாயிருந்தால் அவன் குணமடைவான்” என்றார்கள். 13இயேசு அவனுடைய மரணத்தைக் குறித்துப் பேசினார். அவருடைய சீடர்களோ, இயல்பான நித்திரையைக் குறித்தே அவர் சொன்னார் என்று நினைத்தார்கள்.
14அப்போது இயேசு, “லாசரு இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லி, 15“நான் அங்கே இல்லாததைக் குறித்து, உங்கள் பொருட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதற்கு அது உதவியாயிருக்கும். நாம் அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார்.
16அப்போது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து, “வாருங்கள், நாமும் மரணிப்பதற்கு அவருடன் போவோம்” என்றான்.
இரு சகோதரிகளை இயேசு ஆறுதல்படுத்துதல்
17இயேசு பெத்தானியாவுக்கு வந்து சேர்ந்தபோது, லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு, ஏற்கெனவே நான்கு நாட்களாகி விட்டன என்று கண்டார். 18பெத்தானியா எருசலேமிலிருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. 19இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் பொருட்டு, மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள். 20இயேசு வருகின்றார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டு வெளியே சென்றாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
21மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் எனது சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22இப்போதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள்.
23அப்போது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் திரும்பவும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார்.
24அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
25அப்போது இயேசு அவளிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கின்றவன், இறந்தாலும் வாழ்வான். 26உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கின்றவன் எவனும் ஒருபோதும் இறக்க மாட்டான். நீ இதை விசுவாசிக்கின்றாயா?” என்று கேட்டார்.
27அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வரவேண்டிய மேசியா. நான் இதை விசுவாசிக்கின்றேன்” என்றாள்.
28அவள் இதைச் சொன்ன பின்பு திரும்பிப் போய், தன்னுடைய சகோதரி மரியாளை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய், “போதகர் வந்திருக்கிறார். அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றாள். 29மரியாள் இதைக் கேட்டபோது, விரைவாய் எழுந்து அவரிடம் சென்றாள். 30இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார். 31வீட்டிலே மரியாளுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிய யூதர்கள், அவள் விரைவாய் எழுந்து புறப்பட்டுப் போவதைக் கண்டபோது, அவர்களும் அவள் பின்னே போனார்கள். அவள் துக்கம் அனுசரிக்க கல்லறைக்குப் போகின்றாள் என்றே அவர்கள் நினைத்தார்கள்.
32இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் போய்ச் சேர்ந்தபோது, அவள் அவரைக் கண்டு, அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என்னுடைய சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றாள்.
33அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் உள்ளம் குமுறி ஆவியில் கலங்கி, 34“அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாருங்கள், வந்து பாருங்கள்” என்றார்கள்.
35இயேசு கண்ணீர்விட்டார்.
36அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் அவனில் எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள்.
37ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவன் மரணிக்காமல் தடுத்திருக்கலாமே!” என்றார்கள்.
இயேசு லாசருவை எழுப்புதல்
38இயேசு திரும்பவும் உள்ளம் குமுறியவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார்.
அப்போது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்போது நாற்றம் வீசுமே. அங்கே அவனை வைத்து, நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள்.
40அப்போது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார்.
41எனவே அவர்கள் அந்தக் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “பிதாவே, என் மன்றாடுதலுக்கு ஏற்கெனவே நீர் பதில் அளித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். 42நீர் எப்போதும் என் மன்றாடுதலை கேட்கின்றவர் என்பதை நான் அறிவேன். ஆயினும் இங்கு நிற்கிற மக்கள், நீரே என்னை அனுப்பினீர் என்று விசுவாசிக்கும்படி, அவர்களுக்காகவே இதைச் சொல்கின்றேன்” என்றார்.
43இயேசு இதைச் சொன்ன பின்பு, “லாசருவே, வெளியே வா!” என்று உரத்த குரலில் அவனை அழைத்தார். 44இறந்து போனவன் வெளியே வந்தான். அவனுடைய கைகளும் கால்களும் மென்பட்டு துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. அவனுடைய முகத்தைச் சுற்றியும் ஒரு துணி கட்டப்பட்டிருந்தது.
இயேசு அவர்களைப் பார்த்து, “பிரேதத் துணிகளை அவிழ்த்து, அவனைப் போக விடுங்கள்” என்றார்.
இயேசுவைக் கொலை செய்வதற்கு சதி
45மரியாளைச் சந்திக்க வந்திருந்த பல யூதர்கள் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள். 46ஆனால் அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்ததைக் குறித்துச் சொன்னார்கள். 47அப்போது தலைமை மதகுருக்களும் பரிசேயரும் நியாயசபையைக் கூட்டினார்கள்.
அவர்கள், “நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இதோ இவன் பல அற்புத அடையாளங்களைச் செய்கின்றானே. 48நாம் இப்படியே இவனைப் போகவிட்டால், எல்லோரும் இவனில் விசுவாசம் வைப்பார்கள். அப்போது ரோமர்கள் வந்து நமது ஆலயத்தையும், நமது இனத்தையும் அழித்து விடுவார்களே” என்றார்கள்.
49அப்போது அந்த வருடத்தின் தலைமை மதகுருவான காய்பா எனப்பட்ட ஒருவன் அவர்களிடம், “நீங்கள் எதுவுமே தெரியாதவர்களாய் இருக்கின்றீர்களே. 50நமது முழு இனமும் அழிவதைப் பார்க்கிலும், மக்களுக்காக ஒருவன் சாவது நல்லது என்று நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்” என்றான்.
51இதை அவன் சுயமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அந்த வருடத்துத் தலைமை மதகுரு என்ற வகையில், யூத மக்களுக்காக இயேசு இறக்கப் போகின்றார் என்றும், 52அந்த மக்களுக்காக மட்டுமல்ல, சிதறி இருக்கின்ற இறைவனுடைய பிள்ளைகளை ஒன்றாக சேர்க்கும்படியாக இறக்கப் போகின்றார் என்றும் இறைவாக்காகவே அவன் சொன்னான். 53எனவே அன்றிலிருந்து அவர்கள் அவரைக் கொலை செய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்.
54ஆகவே இயேசு தொடர்ந்து யூதர்கள் மத்தியிலே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் பாலைநிலத்தின் அருகே உள்ள பகுதிக்குப் போய், அங்கே எப்பிராயீம் எனப்பட்ட ஒரு கிராமத்தில் தம்முடைய சீடர்களுடனே தங்கினார்.
55யூதர்களுடைய பஸ்கா பண்டிகைக் காலம் நெருங்கி வந்தது. அப்போது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக தங்களுடைய சம்பிரதாய சுத்திகரிப்பைச் செய்துகொள்வதற்காக, அநேகர் நாட்டுப் புறத்திலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். 56அவர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பி அவரைத் தேடினார்கள். அவர்கள் ஆலயப் பகுதியில் நின்றபடி ஒருவரையொருவர் பார்த்து, “இந்தப் பண்டிகைக்கு அவர் வருவாரா, வர மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 57ஆனால் தலைமை மதகுருக்களும் பரிசேயர்களுமோ இயேசுவைக் கைது செய்யும்படி, அவர் இருக்கும் இடத்தை அறிந்தவர்கள் அதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோவான் 11: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.