மாற்கு 13
13
இந்த உலக முடிவின் அடையாளங்கள்
1இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில் அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து, “போதகரே! இதோ, இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு பிரமிக்கத்தக்க கட்டடங்கள்!” என்றான்.
2அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்த பெரும் கட்டடங்கள் எல்லாவற்றையும் காண்கின்றீர்கள் அல்லவா? ஆனால் இங்கே ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதவாறு அனைத்தும் இடிக்கப்பட்டுப் போகும்” என்றார்.
3பின்பு ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவ்விடத்தில் வந்து, 4“இந்தக் காரியங்கள் எப்போது நிகழும்? இவை எல்லாம் நிறைவேறப் போகின்றன என்பதற்கு முன் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.
5அதற்கு இயேசு அவர்களிடம், “ஒருவனும் உங்களை வழிவிலகச் செய்யாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். 6பலர் என்னுடைய பெயரால் வந்து, ‘நான்தான் அவர்’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள். 7நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்க வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆயினும் முடிவு வர இன்னும் காலம் இருக்கின்றது. 8இனத்திற்கு விரோதமாய் இனமும், நாட்டிற்கு விரோதமாய் நாடும் எழும். பல இடங்களில் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும் ஏற்படும். இவையோ பிரசவ வேதனையின் ஆரம்பமே.
9“அப்போது நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் நியாயசபைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஜெபஆலயங்களில் சாட்டையினால் அடிக்கப்படுவீர்கள், என் பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள். 10நற்செய்தியானது எல்லா இன மக்களுக்கும் முதலாவது அறிவிக்கப்பட வேண்டும். 11நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், எதைச் சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில் பேச வேண்டிய வார்த்தை உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.
12“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராகக் கலகம் செய்து, அவர்களை மரணத்துக்கு உட்படுத்துவார்கள். 13என் பொருட்டு எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவு வரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
14“ ‘பேரழிவை ஏற்படுத்துகின்ற அருவருப்பு’#13:14 தானி. 9:27; 11:31; 12:11 இருக்கக் கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, வாசிக்கிறவன் அதை விளங்கிக்கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் இருக்கின்றவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். 15தனது வீட்டின் கூரையின் மேல் இருக்கின்ற எவனும் தனது வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகக் கூடாது. 16வயலில் இருக்கும் எவனும் தனது மேலாடையை எடுத்துக்கொள்வதற்கு திரும்பிப் போகக் கூடாது. 17அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! 18இது குளிர் காலத்தில் நேரிடாதபடி மன்றாடுங்கள். 19ஏனெனில் அந்த நாட்கள் துன்பத்தின் நாட்களாக இருக்கும்; இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை அப்படிப்பட்ட துன்பம் ஏற்பட்டிருக்காது, இனி ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது.
20“கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால் ஒருவரும் தப்ப மாட்டார்கள். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களின் பொருட்டு அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார். 21அக்காலத்தில் யாராவது உங்களிடம், ‘இதோ, மேசியா இங்கே இருக்கின்றார்!’ அல்லது ‘அதோ அங்கே இருக்கின்றார்!’ என்று சொன்னால் அதை நம்ப வேண்டாம். 22ஏனெனில் போலி மேசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23எனவே நீங்கள் கவனமாய் இருங்கள்; அக்காலம் வருமுன்பே நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கின்றேன்.
24“அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து,
“ ‘சூரியன் இருளடையும்,
சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;
25நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருந்து விழும்.
வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’#13:25 ஏசா. 13:10; 34:4
26“அவ்வேளையில் மனுமகன் மிகுந்த வல்லமையுடனும், மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர்கள் காண்பார்கள். 27அவர் தமது தூதர்களை அனுப்பி பூமியின் ஒரு முனையிலிருந்து வானத்தின் மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்தும் தம்மால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்.
28“அத்தி மரத்திலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அது துளிர்த்து இலைகள் வரும்போது கோடை காலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். 29அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது முடிவு காலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். 30நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவையெல்லாம் நடந்து முடியும் வரைக்கும் இந்தத் தலைமுறையினர் ஒழிந்து போக மாட்டார்கள். 31வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.”
நாளும் நேரமும் அறியப்படாதவை
32“அந்த நாளையோ, அந்த நேரத்தையோபற்றி எவருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கின்ற தூதர்களுக்கும், மனுமகனுக்கும்கூட தெரியாது. ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். 33நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்த நேரம் எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே. 34இது தூரப் பயணம் போகின்ற ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கின்றது; அவன் தன்னுடைய வீட்டை வேலைக்காரரின் பொறுப்பில் ஒப்படைத்து அவர்கள் ஒவ்வொருவருக்குமான வேலையையும் கொடுத்துவிட்டு, வாசலில் இருப்பவனைக் காவல் காக்கும்படி சொல்லிவிட்டுப் போகின்றான்.
35“ஆகவே விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன், மாலையிலா நள்ளிரவிலா சேவல் கூவும் வேளையிலா அல்லது அதிகாலையிலா, எப்போது திரும்பி வருவான் என்று உங்களுக்குத் தெரியாதே. 36அவன் திடீரென வந்தால், அவன் வரும் வேளையில் உங்களை நித்திரை செய்கின்றவர்களாய் காணக் கூடாது. 37நான் உங்களுக்குச் சொல்கின்றதை எல்லோருக்குமே சொல்கின்றேன், ‘விழிப்பாயிருங்கள்’ ” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மாற்கு 13: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.