மாற்கு 5
5
பேய் பிடித்த மனிதன் குணமடைதல்
1அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய பிரதேசத்திற்குப் போனார்கள். 2இயேசு படகைவிட்டு இறங்கியவுடன் தீய ஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்தான். 3அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. 4ஏனெனில் அவனுடைய கையையும் காலையும் சங்கிலியினால் கட்டிப் போட்டாலும், அவன் சங்கிலிகளை அறுத்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்து விடுவான். அவனைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது. 5அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் இரவு பகலாய் கூச்சலிட்டுக் கொண்டும், தன்னைத் தானே கூரிய கற்களினால் காயப்படுத்திக் கொண்டும் இருப்பான்.
6அவன் இயேசுவை தூரத்தில் கண்டபோது ஓடிப் போய் அவருக்கு முன்பாக விழுந்து, 7உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, அதி உன்னதமான இறைவனின் மகனே, என்னிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்த மாட்டீர் என இறைவன் மேல் ஆணையிடும்!” என்றான். 8ஏனெனில் இயேசு அவனிடம், “தீய ஆவியே, இவனைவிட்டு வெளியேறு!” என்று சொல்லியிருந்தார்.
9அப்போது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று பதிலளித்தான். 10மேலும், அந்தப் பகுதியைவிட்டு தங்களை அனுப்ப வேண்டாம் என்று திரும்பத் திரும்ப அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.
11அங்கே அருகேயிருந்த மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தபடியால், 12பேய்கள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; நாங்கள் அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதி கொடும்” என்று கெஞ்சிக் கேட்டன. 13அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார். அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன; அந்தப் பன்றிக் கூட்டத்தில் இருந்த சுமார் இரண்டாயிரம் பன்றிகள் மலைச்சரிவினூடாக கீழே விரைந்து ஓடி, ஏரியில் விழுந்து மூழ்கின.
14பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப் போய், பட்டணத்திலும் நாட்டுப் புறத்திலும் இருந்தவர்களிடம் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்பதைப் பார்ப்பதற்கு, மக்கள் அங்கே போனார்கள். 15அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, லேகியோன் என்னும் பேய்கள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள். 16நடந்ததைக் கண்டவர்கள், பேய் பிடித்தவனுக்கும் பன்றிகளுக்கும் நிகழ்ந்ததைப்பற்றி அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். 17அப்போது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பிரதேசத்தை விட்டுப் போய்விடும்படி கெஞ்சிக் கேட்கத் தொடங்கினார்கள்.
18இயேசு படகில் ஏறியபோது, பேய் பிடித்திருந்தவன் அவருடன் இருக்க விரும்பி கெஞ்சிக் கேட்டான். 19இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல், “நீ உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் அவர் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார். 20அவன் புறப்பட்டுப் போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி#5:20 தெக்கப்போலி – இதன் அர்த்தம் பத்து பட்டணங்கள் என்பதாகும். பட்டணங்கள் எங்கும் சொல்லத் தொடங்கினான். அவர்கள் எல்லோரும் வியப்படைந்தார்கள்.
இறந்த சிறுமியை உயிர்ப்பித்தலும், வியாதியுற்ற பெண்ணை குணமாக்குதலும்
21இயேசு திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்தார். அவர் கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றித் திரண்டு வந்தார்கள். 22அப்போது யூத ஜெபஆலயத் தலைவர்களுள் ஒருவனான யவீரு என்ற பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்து, 23அவரிடம், “எனது சிறிய மகள் மரணத் தறுவாயில் இருக்கின்றாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள் மீது வைப்பீராக. அப்போது அவள் குணமடைந்து பிழைத்துக்கொள்வாள்” என்று சொல்லி மிகவும் கெஞ்சி மன்றாடிக் கேட்டான். 24அதனால் இயேசு அவனுடன் சென்றார்.
அப்போது, மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக்கொண்டு பின்னால் சென்றது. 25பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் அங்கே இருந்தாள். 26அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவழித்து முடித்தும் குணமடையவில்லை. அவளுடைய நிலைமை மேலும் மோசமடைந்திருந்தது. 27அவள் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டபோது அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள் வந்து அவருடைய மேலாடையைத் தொட்டாள். 28ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டாலே குணமடைவேன்” என்று அவள் எண்ணியிருந்தாள். 29உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னுடைய வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.
30இயேசு தன்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை உடனே அறிந்து மக்கள் கூட்டத்தாரிடம் திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
31அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.
32ஆனாலும் இயேசு, தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிலும் பார்த்தார். 33அப்போது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கியபடி உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள். 34அவர் அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது. சமாதானத்துடனே போ. உன் வேதனை நீங்கி குணமடை” என்றார்.
35இயேசு தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவனின் வீட்டிலிருந்து சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். ஏன் இனிமேலும் போதகருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும்?” என்றார்கள்.
36அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல் ஜெபஆலயத் தலைவனிடம், “பயப்படாதே, நம்பிக்கையாயிரு” என்றார்.
37பின்பு அவர், பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர வேறு எவரையும் தம்முடன் வர அனுமதிக்கவில்லை. 38அவர்கள் ஜெபஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு மக்கள் அழுவதனாலும் சத்தமிட்டுப் புலம்புவதனாலும் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை இயேசு கண்டார். 39அவர் உள்ளே போனதும் அவர்களிடம், “ஏன் இப்படிச் சத்தமிட்டு புலம்புகிறீர்கள்? பிள்ளை மரணமடையவில்லை, தூங்குகிறாள்” என்றார். 40அவர்களோ அவரைப் பார்த்து ஏளனமாக சிரித்தார்கள்.
அவர் அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு, அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தன்னுடன் இருந்த சீடர்களையும் அழைத்துக்கொண்டு பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார். 41அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூமி” என்றார். அதற்கு, “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்கின்றேன், உயிரோடு எழுந்திரு” என்பது அர்த்தமாகும். 42அந்தச் சிறு பெண் உடனே எழுந்து நடந்ததைப் பார்த்ததும் அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள். அவளுக்கு பன்னிரண்டு வயது. 43அங்கு நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று, அவர் கண்டிப்பாக உத்தரவிட்டார். பின்பு அந்த சிறு பெண்ணுக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மாற்கு 5: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.