சங்கீதம் 80
80
80 சங்கீதம்
(சாட்சி விளங்கும்படி சோஷானீம் எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்)
1இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.
3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
4சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
6எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம் பண்ணுகிறார்கள்.
7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக் கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
10அதின் நிழலால் மலைகளும், அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
11அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
13காட்டுப்பன்றி அதை உழுது போடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்.
15உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
16அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்து போகிறார்கள்.
17உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக.
18அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.
19சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீதம் 80: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.