மத்தேயு 11
11
இயேசுவும் யோவான் ஸ்நானகனும்
1இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறி முடிந்ததும், கலிலேயாவிலுள்ள#11:1 கலிலேயாவிலுள்ள – கிரேக்க மொழியில், அவர்களது பட்டணங்களில். பட்டணங்களில் போதிப்பதற்கும், செய்தியை அறிவிப்பதற்கும் அங்கிருந்து சென்றார்.
2யோவான், சிறையிலிருந்து மேசியாவின் செயல்களைக் கேள்விப்பட்டு, தன் சீடர்களை அனுப்பி, 3“வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்டான்.
4அதற்கு இயேசு பதிலளித்து, “நீங்கள் திரும்பிச் சென்று, நீங்கள் காண்பவற்றையும் கேட்பவற்றையும் யோவானுக்கு அறிவியுங்கள்: 5பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கின்றார்கள், தொழுநோயாளர் குணமடைகிறார்கள், செவிப்புலனற்றோர் கேட்கின்றார்கள், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 6என் பொருட்டு இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
7யோவானின் சீடர்கள் திரும்பிச் சென்றுகொண்டிருக்கும்போது, இயேசு மக்களிடம் யோவானைக் குறித்து பேசத் தொடங்கினார்: “எதைப் பார்க்க பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் ஆடும் ஒரு நாணல் புல்லைப் பார்க்கவா? 8இல்லையென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? சிறப்பான ஆடையணிந்த ஒரு மனிதனைப் பார்க்கவா? இதோ, விலையுயர்ந்த ஆடையணிந்து, ஆடம்பரமாக வாழ்பவர்கள் அரண்மனைகளில் அல்லவா இருக்கின்றார்கள். 9அவ்வாறானால், எதைப் பார்ப்பதற்குப் போனீர்கள்? ஒரு இறைவாக்கினனையா? ஆம், அவர் ஒரு இறைவாக்கினனிலும் மேலானவர் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.
10“ ‘உமக்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புவேன்.
அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்’#11:10 மல். 3:1
என்று, அவரைப் பற்றியே எழுதப்பட்டுள்ளது.
11“நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், இதுவரை பிறந்தவர்களுள்#11:11 இதுவரை பிறந்தவர்களுள் – கிரேக்க மொழியில் பெண்களிடம் பிறந்தவர்களுள். யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆயினும், பரலோக இராச்சியத்தில் சிறியவனாய் இருக்கின்றவன், யோவானிலும் பெரியவனாய் இருக்கின்றான். 12யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள் வரையிலும் பரலோக இராச்சியம் வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். 13ஏனெனில், அனைத்து இறைவாக்குகளும் நீதிச்சட்டமும் யோவானின் காலம்வரை இறைவாக்கு உரைத்தன. 14நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால், வரவேண்டியிருந்த எலியா இவனே. 15காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்.
16“இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை கூடும் இடங்களில் அமர்ந்து,
17“ ‘நாங்கள் உங்களுக்காக சந்தோஷக் குழல் ஊதினோம்,
நீங்கள் நடனமாடவில்லை;
ஒப்பாரி பாடினோம்,
நீங்கள் துக்கம் அனுஷ்டிக்கவில்லை’
என்று சத்தமிட்டு தமது நண்பர்களைக் கூப்பிடும் சிறுவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
18“யோவான் நல்ல உணவை உண்ணாதவனும், பானம் பருகாதவனுமாக வந்தான்; அதனால் அவர்களோ, ‘அவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்கிறார்கள். 19மனுமகனோ#11:19 மனுமகனோ – இது இயேசு தனக்குத்தானே பயன்படுத்திய தனித்துவமான பெயர். நல்ல உணவை உண்பவராகவும், பானம் பருகுபவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுவெறியன்’ என்றும் ‘வரி சேகரிப்போருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்றும் சொல்கின்றீர்கள். ஆயினும் ஞானம் என்பவள்#11:19 ஞானம் என்பவள் – இது இறைவனின் ஞானத்தை குறிக்கின்றது என்பதாகக் கருதப்படுகிறது. சரியானவள் என்பதை அவள் செயல்களே நிரூபிக்கும்” என்றார்.
மனந்திரும்பாத பட்டணங்கள்
20பின்பு இயேசு, தாம் அநேக அற்புதங்களைச் செய்திருந்த பட்டணங்களை கடிந்துகொள்ளத் தொடங்கினார். ஏனெனில் அங்கிருந்தோர் அற்புதங்களைக் கண்டும் மனந்திரும்பவில்லை. 21“கோரோசீனே, உனக்கு ஐயோ பேரழிவு! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ பேரழிவு! உங்களிடையே செய்யப்பட்ட அற்புதங்கள் தீரு, சீதோன் பட்டணங்களில் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் எப்பொழுதோ மனந்திரும்பி, துயரஆடை அணிந்து, சாம்பலில் அமர்ந்திருப்பார்கள்.#11:21 ஒருவர் மனம் வருந்துவதை வெளிக்காட்ட உடலை அரிக்கும் துணி அணிந்து, சாம்பல் மேட்டில் அமர்ந்திருப்பது அக்கால வழக்கம். 22ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுக்கு நடக்கப் போவதைவிட, தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவது தாங்கக் கூடியதாக இருக்கும். 23கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளத்திற்குத்#11:23 பாதாளத்திற்கு – மரணித்தவர்களின் இடம். தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாதிருந்திருக்கும். 24ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுக்கு நடக்கப் போவதைவிட, சோதோமுக்கு நடக்கப்போவது தாங்கக் கூடியதாக இருக்கும்” என்றார்.
களைப்புற்றோருக்கு ஆறுதல்
25அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், நான் உம்மைத் துதிக்கிறேன். 26ஆம் பிதாவே, இதுவே உமக்கு மிகவும் பிரியமாயிருந்தது.”#11:26 பிரியமாயிருந்தது – சில பிரதிகளில், இதுவே உமது தயவுள்ள நோக்கம்.
27“என் பிதாவினால் அனைத்தும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பிதாவைத் தவிர, வேறு ஒருவனும் மகனை அறிய மாட்டான். மகனைத் தவிர, வேறு ஒருவனும் பிதாவை அறிய மாட்டான். பிதாவை வெளிப்படுத்த யாரையெல்லாம் மகன் தெரிவுசெய்கின்றாரோ, அவர்களைத் தவிர வேறு ஒருவரும் பிதாவை அறிய மாட்டார்கள்.”
28“வருத்தத்துடன் பாரம் சுமந்து களைப்புற்றிருக்கின்றவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29எனது நுகத்தை#11:29 நுகத்தை – வண்டி மாடுகளுக்கு கழுத்தில் வைக்கப்படும் தூக்குக் கட்டை. உங்கள்மீது ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் உள்ளத்தில் தயவும் தாழ்மையும் உடையவராய் இருக்கின்றேன். 30என் நுகம் எளிதானது, நான் சுமத்தும் சுமையோ பாரம் குறைந்தது.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மத்தேயு 11: TRV
சிறப்புக்கூறு
பகிர்
ஒப்பீடு
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.