1 தெசலோனிக்கேயர் 3:1-8

1 தெசலோனிக்கேயர் 3:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நானும் சீலாவும் தனியே அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு, தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். அவன் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில், இறைவனுக்காக வேலைசெய்கிற எங்கள் உடன் ஊழியனும் சகோதரனுமாய் இருக்கிறான். உங்களை பெலப்படுத்தி, உங்கள் விசுவாசத்தில் உங்களை ஊக்குவிக்கவே நாங்கள் அவனை அனுப்பினோம். உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்பங்களால், உங்களில் ஒருவனும் நிலைகுலைந்து போகக்கூடாது என்பதற்காகவே அவனை அனுப்பிவைத்தோம். இப்படியான துன்பங்களுக்காகவே நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருந்தபோது, நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை, உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொன்னோம். அது அவ்விதமே நிகழ்ந்ததும் உங்களுக்குத் தெரியும். ஆகையால் உங்களைக்குறித்து அறியாமல், என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாததினாலே உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ளும்படி, தீமோத்தேயுவை அனுப்பினேன். சோதனைக்காரன் ஏதாவது ஒருவிதத்தில் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் எங்களுடைய பிரயாசம் பயனற்றுப் போய்விட்டதோ என்றும் நான் பயந்தேன். ஆனால் தீமோத்தேயு இப்பொழுதுதான் உங்களிடமிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவன் உங்களுடைய விசுவாசத்தைக்குறித்தும், அன்பைக்குறித்தும் நல்ல செய்தியே கொண்டுவந்திருக்கிறான். எங்களைக்குறித்த ஞாபகங்கள் உங்களுக்கு இனியவைகளாக இருக்கின்றன என்றும், நாங்கள் உங்களைக் காண ஆவலாயிருந்ததுபோல, நீங்களும் எங்களைக் காண ஆவலாய் இருக்கிறீர்கள் என்றும் அவன் எங்களுக்குச் சொன்னான். ஆகையால் பிரியமானவர்களே, எங்களுடைய கஷ்டம், துன்புறுத்துதல் மத்தியிலும், உங்களுடைய விசுவாசத்தைக் கேட்டு, நாங்கள் உற்சாகமடைந்தோம். நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், எங்களுக்கு உயிர்மூச்சே வந்தது.

1 தெசலோனிக்கேயர் 3:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம். இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன். இப்பொழுது தீமோத்தேயு உங்களிடமிருந்து எங்களிடம் வந்து, உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும்குறித்து, நீங்கள் எப்பொழுதும் எங்களை அன்பாக நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறீர்கள் என்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, சகோதரர்களே, எங்களுக்குச் சம்பவித்த எல்லா நெருக்கத்திலும், உபத்திரவத்திலும் உங்களுடைய விசுவாசத்தினாலே உங்களால் ஆறுதல் அடைந்தோம். நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.

1 தெசலோனிக்கேயர் 3:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம். எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் நீங்கள் மனம் தவிக்காமல் இருக்கும்பொருட்டு தீமோத்தேயுவை அனுப்பினோம். இத்தகைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்காகத்தான் நான் உங்களிடம் தீமோத்தேயுவை, உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ள அனுப்பி வைத்தேன். மேலும் என்னால் காத்திருக்க முடியாத நிலையில் தான் நான் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன். மக்களைத் தீயவற்றினால் இழுத்து கவர்ச்சிக்கும் பிசாசு உங்களைத் தோல்வியுறச் செய்துவிடுவானோ என்றும் எங்களின் உழைப்பு வீணாய்ப் போகுமோ என்றும் நான் பயந்திருந்தேன். ஆனால் உங்களிடமிருந்து தீமோத்தேயு திரும்பி வந்தான். உங்களது அன்பு மற்றும் விசுவாசம் பற்றிய நல்ல செய்திகளை அவன் கூறினான். நல்வழியில் நீங்கள் எப்போதும் எங்களை நினைத்துக்கொள்வதாகவும் எங்களை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினான். அதுபோலத் தான் நாங்களும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம். நீங்கள் உறுதியாகக் கர்த்தருக்குள் இருக்கும்போது எங்கள் வாழ்வு முழுமை பெறுவதாக உணர்கிறோம்.

1 தெசலோனிக்கேயர் 3:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து, இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள். ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும்குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக் குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம். நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.