1 தெசலோனிக்கேயர் 3:9-13

1 தெசலோனிக்கேயர் 3:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்? உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

1 தெசலோனிக்கேயர் 3:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்கள் நிமித்தம் நமது இறைவனுடைய முன்னிலையில் எங்களுக்கு உண்டாயிருக்கிற எல்லா மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் இறைவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்ப்படுத்துவதற்காக, இரவும் பகலும் வெகு ஊக்கமாய் மன்றாடுகிறோம். இப்பொழுது நம்முடைய பிதாவாகிய இறைவன் தாமே, கர்த்தராகிய இயேசுவுடன் நாங்கள் உங்களிடத்தில் வருவதற்கான வழியை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பாராக. எங்கள் அன்பு உங்களில் வளர்ந்து பெருகுவதுபோலவே, நீங்கள் ஒருவரில் ஒருவர் கொண்டுள்ள அன்பு, மற்றெல்லோரிடத்திலும் நிறைந்து பெருகும்படி கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய எல்லாப் பரிசுத்தவான்களோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கும்படி கர்த்தர் உங்கள் இருதயங்களைப் பெலப்படுத்துவாராக.

1 தெசலோனிக்கேயர் 3:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும், நம்முடைய தேவனுக்குமுன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாக நன்றி செலுத்துவோம்? உங்களுடைய முகத்தைக் கண்டு, உங்களுடைய விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்படிக்கு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.

1 தெசலோனிக்கேயர் 3:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களால் தேவனுக்கு முன்பு நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆகவே உங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால் எங்கள் முழு மகிழ்ச்சிக்கும் எங்களால் போதுமான நன்றி சொல்ல முடியாது. இரவும் பகலுமாக நாங்கள் உங்களுக்காக மிகவும் உறுதியோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அங்கே வந்து உங்களை மீண்டும் பார்க்கவும், உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான செயல்களைச் செய்யவும் பிரார்த்தனை செய்கிறோம். பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.