2 கொரிந்தியர் 8:7-24
2 கொரிந்தியர் 8:7-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இப்பொழுதோ நீங்கள் விசுவாசத்திலும், பேசுகின்ற ஆற்றலிலும், அறிவிலும், எல்லாவற்றிலுமுள்ள ஆர்வத்திலும், எங்கள்மேல் கொண்டிருக்கிற அன்பிலும், மேம்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். அப்படியே, இந்த அன்பின் நன்கொடையைக் கொடுப்பதிலும் மேம்பட்டவர்களாயிருக்க பார்த்துக்கொள்ளுங்கள். நான் இதை ஒரு கட்டளையாக உங்களுக்குச் சொல்லவில்லை. உதவி செய்வதில் மற்றவர்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறார்கள் என்பதை உங்களுக்குக் காண்பித்து, உங்கள் அன்பு எவ்வளவு உண்மையானது எனக் கண்டறியவே விரும்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் செல்வந்தராய் இருந்தபோதும், அவர் உங்களுக்காகவே ஏழையாகினார். அவருடைய ஏழ்மையின் மூலமாக, நீங்கள் செல்வந்தர்களாகும்படியாகவே அவர் ஏழையாகினார். எனவே, இந்த விஷயத்தில் உங்களுக்கு எது சிறந்தது என்பதற்கு நான் கொடுக்கும் ஆலோசனை இதுவே: கடந்த வருடத்திலும் முதலாவதாகக் கொடுத்ததும் நீங்களே, கொடுப்பதற்கு ஆசை கொண்டவர்களும் நீங்களே. எனவே இந்த வேலையைத் தொடங்குவதற்கு உங்களுக்கிருந்த ஆர்வத்துடன் அதைச் செய்து முடிக்கவும் வேண்டும். அதனால், உங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு அதைச் செய்து முடியுங்கள். கொடுப்பதற்கு ஆவல் இருந்தால், அந்த நன்கொடை எவ்வளவு என்பது முக்கியமல்ல; கொடுப்பவனிடம் இல்லாததின்படியல்ல, உள்ளதின்படியே கொடுப்பதை இறைவன் விரும்புகிறார். உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தி, மற்றவர்களின் பாரத்தை இலகுவாக்க நாங்கள் விரும்பவில்லை. எல்லோரும் சமநிலையில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். இக்காலத்தில், உங்களுடைய நிறைவு மற்றவர்களின் தேவைகளுக்கு உதவும். அப்படியே, இன்னொருமுறை அவர்களுடைய நிறைவு உங்கள் தேவைக்கு உதவும். இவ்விதமாகவே, உங்களிடையே சமநிலை இருக்கும். வேதவசனம் இதைப்பற்றி, “அதிகமாய் சேர்த்தவனிடம், தேவைக்கதிகமாக இருந்ததில்லை. குறைவாய்ச் சேர்த்தவனிடம், போதாமல் இருக்கவுமில்லை” என்று சொல்கிறது. உங்கள்மேல் நான் கரிசனையுடையவனாய் இருப்பதுபோலவே, இறைவன் தீத்துவுக்கும் அந்தக் கரிசனையைக் கொடுத்ததினால், இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் தீத்து எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, அவனும் உங்களிடம் வருவதற்கு ஆவலுடையவனாய், தன்னுடைய சுயவிருப்பத்தின்படி வருகிறான். அவனுடன் நற்செய்தியை பிரசங்கிப்பதில், எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர்பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எங்களுடனே காணிக்கைகளைக் கொண்டுபோவதற்காக திருச்சபைகளினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறான். கர்த்தருடைய பெயர் மகிமைப்படவும், உதவிசெய்ய எங்களுக்கு உள்ள ஆவல் காண்பிக்கப்படவும், இந்தப் பொறுப்பான வேலையில் அவன் உதவி செய்வான். மனமுவந்து கொடுக்கப்பட்ட இந்தக் கொடையை நாங்கள் பகிர்ந்து கொடுக்கும்போது, அதைக்குறித்து யாரும் எங்களைக் குறை சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனெனில் கர்த்தருடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதருடைய பார்வையிலும் நீதியானதைச் செய்யவே நாங்கள் கடுமையாய் முயற்சிக்கிறோம். மேலும் நாங்கள், வேறொரு சகோதரனை அவர்களுடன் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவிசெய்ய ஆர்வமுடையவனாய் இருப்பதைப் பலவற்றில், பலவிதங்களில் நிரூபித்திருக்கிறான். அவன் இப்பொழுது, உங்களில் மிகுந்த மனவுறுதியுள்ளவனாய் இருப்பதால், உங்களுக்கு உதவிசெய்ய, இன்னும் அதிக ஆவலுடையவனாகவும் இருக்கிறான். தீத்துவைப் பொறுத்தமட்டில், அவன் என்னுடைய பங்காளியும், உங்களுக்குப் பணிசெய்வதில், என்னுடைய உடன் ஊழியனுமாய் இருக்கிறான். எங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில், அவர்கள் திருச்சபைகளின் பிரதிநிதிகள்; கிறிஸ்துவுக்கு மேன்மையாயிருக்கிறார்கள். ஆகவே, இந்த மனிதருக்கு உங்கள் அன்பை நிரூபித்துக் காட்டுங்கள். அப்பொழுதே நாங்கள் உங்களில் கொண்டிருக்கும் பெருமைக்குரிய காரணத்தை திருச்சபைகள் எல்லாம் கண்டுகொள்ளும்.
2 கொரிந்தியர் 8:7-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே. இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும். எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும். மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி, ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம். நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான். நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம். அதுமட்டும் இல்லை, கர்த்தருக்கு மகிமை உண்டாகவும், உங்களுடைய மனவிருப்பம் விளங்கவும், எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகும்போது, எங்களுடைய பயணத்தில் துணையாக இருப்பதற்காக, அவன் சபைகளால் தெரிந்து நியமிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான். எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து, கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம். மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம். தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும். எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
2 கொரிந்தியர் 8:7-24 பரிசுத்த பைபிள் (TAERV)
நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும். கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடவில்லை, ஆனால் உங்கள் அன்பு உண்மையான அன்பென்று நாங்கள் பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களும் உண்மையில் உதவ விரும்புவதை உங்களுக்குக் காட்டவே இதைச் செய்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார். உங்கள் நன்மைக்காகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென நான் சொல்ல விரும்புகிறேன். சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள். எனவே, இப்பொழுது தொடங்கிய செயலை முடித்துவிடுங்கள். பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும். “அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை. குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. உங்கள் மீது எனக்கிருக்கும் அன்பைப் போலவே தீத்துவின் இதயத்திலும் அன்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் என்னைப் போலவே உங்களிடம் அன்பாய் இருக்கிறான். நாங்கள் செய்யச் சொன்னதையெல்லாம் தீத்து ஏற்றுக்கொண்டான். அவன் உங்களிடம் வர பெரிதும் விரும்பினான். இது அவனது சொந்த முயற்சியே ஆகும். நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன். அதோடு, இக்காணிக்கைப் பணத்தை சுமந்துச் செல்லும்போது எங்களுக்குத் துணையாக இருக்க சபைகளால் நியமிக்கப்பட்டவனே இச்சகோதரன் ஆவான். தேவனுக்கு மகிமை உண்டாகவே நாங்கள் இச்சேவையைச் செய்ண்டிருக்கிறோம். சேவை செய்யும் எங்கள் விருப்பத்தைப் புலப்படுத்தவும் இதைச் செய்கிறோம். இப்பெரிய தொகையை கையாள்வது குறித்து நாங்கள் கொள்ளும் அக்கறைகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது எனக் கூடுமான வரையில் எச்சரிக்கையாய் உள்ளோம். சரியானவற்றைச் செய்யவே நாங்கள் முயல்கிறோம். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல. மக்களுக்கு முன்பாகவும் நேர்மையாகப்படுவதை மட்டுமே செய்ய விரும்புகிறோம். இவர்களோடு எங்கள் சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவத் தயாராய் இருப்பான். பல வழிகளில் அவன் இதை நிரூபித்திருக்கிறான். உங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பதால் அதிக அளவில் உதவ அவன் விரும்புகிறான். தீத்துவைப் பற்றிக் கூறுவதானால், அவன் எனது கூட்டாளி. உங்களுக்கு உதவுவதற்காக என்னோடு பணிபுரிபவன். மற்ற சகோதரர்களைப் பற்றி கூறுவதானால் அவர்கள் சபைகளால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் புகழ் சேர்த்தவர்கள். எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.
2 கொரிந்தியர் 8:7-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும். ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும். மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம். நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான். சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம். அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான். எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து, கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம். மேலும், அநேகக் காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடேகூட அனுப்பியிருக்கிறோம். தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன். ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.